"கடல் போல பெரிதாக நீ இருக்கின்றாய்
சிறுவன் நான், சிறு அலை மட்டும் தான் பார்க்கிறேன்"
- கவிஞர்.தாமரை
1.0 நூறு பூக்கள் மலரட்டும்
உபநிடதத்தில் ஒரு அழகான கதை இருக்கிறது. ஒரு
சமயம் தேவரும், அரக்கரும், மானிடரும்
படைப்புக் கடவுள் பிரம்மாவிடம் உபதேசம் பெற போனார்கள். பிரம்மா எல்லாருக்கும் ‘த’
என்ற ஒரே எழுத்தை உபதேசமாக அளித்தார். தேவர்கள், “தேவர்களாகிய
நாம் காமம் அதிகமுள்ளவர்கள்கள், சுகபோகங்களில் திளைப்பவர்கள், ஆகையால் பிரம்மா ‘த’ என்ற எழுத்தின் மூலம் ‘தமனம்’ (புலனடக்கம்) என்ற
குணத்தை போதித்திருக்கிறார்” என்று புரிந்துகொண்டார்கள். அரக்கர்களோ, “அரக்கர்களாகிய நாம் கோபம் மிகுந்து இரக்கமற்றவர்களாகிவிட்டோம்.
நமக்கு ‘த’ என்ற எழுத்தின் மூலம் ‘தயை’ (கருணை) என்ற குணத்தை பின்பற்ற
போதித்திருக்கிறார்” என்று பேசிக்கொண்டார்கள். மானிடரோ, “மனிதர்களாகிய
நாம் ‘உலோபிகள்’ (பேராசை), பணப்பித்தர்களாக இருக்கிறோம். ‘த’ என்ற
எழுத்தின் மூலம் நம்மை தானம் செய்யச்சொல்லி பிரம்மா போதித்திருக்கிறார்” என
ஏற்றுக்கொண்டனர். பிரம்மா கூறிய ஒரு வார்த்தை, ஒவ்வொறு
பிரிவினருக்கும் அவரவர் அனுபவத்தின் வாயிலாக ஒவ்வொறு அர்த்தத்தை கொடுத்தது.
வளர்ச்சி சிந்தனைகளும் அது போன்றதே.
ஒவ்வொறுவரும் தமது அனுபவம், புரிதல் சார்ந்து வெவ்வேறு விதமாக
புரிந்துகொள்வார்கள், அதன்படி செயல்படுவார்கள். அனைவரையும்
ஒருநிலையில் கொண்டுவர தொடர்ந்த உரையாடல்கள், கருத்துப்பகிர்வுகள்
தேவைப்படுகிறது. இதன் மூலம் நமது புரிதல்களை புதுப்பித்துக்கொள்ளமுடியும், நமது அனுபவமும் படிப்பினையும் மற்றவர்களுக்கு உள்ளீடாக அமையும்.
அடிப்படையில் இப்போது நாம் கூடியிருக்கும் இந்த ஆற்றுப்படுதல் முகாமின் நோக்கமே
இதனைச் சார்ந்து தான் இருக்கிறது. எவ்வளவுக்கெவ்வளவு நாம் நமது செயல்களை ஆழ்ந்து
நோக்கி, விழிப்புணர்வுடன் பிரதிபளிக்கிறோமோ, நமக்குள் கேள்விகளை கேட்டுக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நமது
செயல்களின் தாக்கமும், பயனும் அமையும்.
அமெத்தியாசென், “நீதியின்
கருத்தாக்கம்” என்ற புத்தகத்தில் ஒரு புல்லாங்குழலுக்கு ஆசைப்படும் மூன்று
சிறுவர்கள் குறித்த புதிரினை எழுப்பியிருப்பார். அதில் அந்த மூன்று சிறுவர்கள்
ஒவ்வொறுவருக்கும் அந்த புல்லாங்குழலை பெறும் தகுதி இருந்தாலும் யாராவது
ஒருவருக்குத் தான் யதார்த்தத்தில் தரமுடியும். இதனை அடிப்படையாக கொண்டு நீதி என்பது ஒருவழிப்பாதை அல்ல என்றும், நீதி பல பரிமாணங்களை கொண்டது, இது
சரி இது தவறு என்ற நிலைப்பாட்டை எடுக்கமுடியாது என்றும் விளக்கிக்கொண்டே போவார்.
அற்புதமாக புரிதல். “நூறு பூக்கள்
மலரட்டும்” என்று மாவோ குறிப்பிடுவதும் இதுதான். வேற்றுமையிலும் பல வித
சிந்தனைகளாலுமே இந்த உலகம் மேம்படும். ஒவ்வொறுவரும் தமது சிந்தனைகளை
பகிர்ந்துகொள்ள ஒரு பொதுத்தளமும் அதனைச் சார்ந்த உரையாடலுமே புத்தாக்கத்தை
ஏற்படுத்தும். புத்தாக்கமே நமது வாழ்வு நிலைபடலுக்கு ஆதாரமாயிருக்கும்.
2.0 வியூகமுறைத் திட்டம்
பத்து வருடத்துக்கும் மேலாக செல்போன்
பயன்படுத்தும் அனைவரும் தமது வாழ்நாளில் ஒருமுறையாவது நோக்கியா செல்பேசியை
பயன்படுத்தியிருப்பார்கள். ஒரு காலத்தில் செல்பேசி சந்தையில் அசைக்கமுடியாத
இடத்தில் இருந்த நோக்கியா ஐந்தாண்டுகளுக்கு முன்பு சந்தையில் மொத்தமாக காணாமல்
போனது. கடைசியில் நோக்கியா கம்பெனியை மைக்ரோசாஃப்ட் கம்பெனி கைபற்றிய நிகழ்வில்
நோக்கியா கம்பெனியின் தலைமை செயல் அதிகாரி, “நாம்
எதையும் தவறாக செய்யவில்லை, ஆனால் எதோகாரணத்தால் நாம்
தோல்வியடைந்தோம்..” என்று கண்ணீருடன் குறிப்பிட்டபோது உலகம் சற்று கலங்கியது.
போட்டி நிறைந்த உலகில் நமது நல்ல செயல்பாடுகள் மட்டும் நம்மை நல்ல நிலையில்
வைத்துக்கொள்ள உதவாது. அதையும் தாண்டி, சமூகத்தில் மற்ற
போட்டியாளர்கள், மாறிவரும் சமூக சூழல், நமது வாடிக்கையாளர்களின் தேவை குறித்த அறிவு ஆகியவை தொடர்ந்து
புரிந்துகொள்ளவேண்டும். அதற்கேற்ப நமது திட்டங்கள், நமது
சேவைகளில் புத்தாக்கம் ஆகியவை ஏற்படவேண்டும். அதுவே நம்மை சமூகத்தில்
நிலைநிறுத்திக்கொள்ள உதவும்.
25 ஆண்டுகளுக்கு முன்பு சுய உதவிக்குழு என்பது
புதிய தத்துவம். அதனை நாம் வார்த்தெடுத்தோம். மக்களுக்கும் சமுதாயத்துக்கும் நல்ல
பயனை அந்த சமூக வங்கித் திட்டம் கொடுத்தது. ஆனால் தற்சமயம் அதனைத் தாண்டி அல்லது
அந்த திட்டம் சார்ந்தே இன்னும் ஆழமாகவும், அகலமாகவும் நாம்
புத்தாக்கத்தை செய்தாகவேண்டும். 25 வருடத்துக்கு முந்தைய அதே சேமிப்பு,
கடன் ஆகியவற்றை பேசிக்கொண்டிருந்தால் நாம் நமக்கான இடத்தை
இழக்கவேண்டியிருக்கும்.
இங்கு தான் ஸ்ட்ராடஜிக் திட்டத்தின் தேவை
அவசியமாகிறது. நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை விட சமூகத்தின் தேவை என்ன,
எனது பலம் பலவீனம் என்ன, மற்றவர்கள்
எப்படி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆழ்ந்து உள்வாங்கி அதனடிப்படையில்
நமது செயல்திட்டத்தை வகுப்பது யதார்த்தத்துக்கு அருகில் இருக்கும். மதுரையில்
இருந்து சென்னைக்கு 8 மணி நேர பயண நேரம். அதனால் இரவு 10 மணிக்கு கிளம்பினால் அடுத்தநாள் காலை 6
மணிக்கு சென்னை சேர்ந்துவிடலாம் என்பது திட்டம். ஆனால் அந்த குறிப்பிட்ட நாளில்
பருவநிலை எப்படி இருக்கிறது. மழை பெய்தால், காற்று
வேகமாக அடித்தால் பயண நேரம் அதிகமாகும். சாலையில் டிராஃபிக் பொருத்தும் நமது பயண
நேரம் கூடலாம், குறையலாம். இப்படி மற்ற காரணிகளையும்
கணித்து பயணத்தை திட்டமிடுவது யதார்த்தமானது.
மேலும் சில சமயங்களில் நாம்
நினைத்துப்பார்க்காத எதிர்பாராத சங்கடங்கள் வரலாம். நெடுஞ்சாலையில் விபத்து
ஏற்பட்டு நாம் மாற்று வழியில் சுற்றிவிடப்படலாம். நாம் செல்லும் வாகனம் வழியில்
பழுதாகலாம். இவை அனைத்தும் எதிர்பார்க்கக்கூடிய சவால்கள், அதனை
சந்திக்கவும் நமக்கு திட்டம் இருக்கவேண்டும். இந்த முறை அடுத்த ஐந்தாண்டுகளுக்கான
திட்டம் தயாரிக்க கூடியிருக்கிறோம். இந்த வகை திட்டங்களை ஒரு
சாலைப்பயணத்தயாரிப்பில் இருக்கும் சங்கடங்கடங்களுடன் ஒப்பிட்டு பார்த்து அதன்
அடிப்படையில் திட்டத்துக்கான உள்ளீட்டை வழங்கும் போது இந்த வகை திட்டங்கள் பயன்
அளிக்கும்.
கடந்த 2012ம்
ஆண்டு நான் சார்ந்திருக்கும் களஞ்சியம் வளர்ச்சி நிதியகத்தில் ஐந்தாண்டு திட்டம்
தீட்டப்பட்டது. இப்போது அதனை ஆய்வு செய்த போது திட்டமிட்டதில் சுமார் 60 சதவீதம் மட்டுமே நிறைவேற்றபட்டதாக உணர்ந்தோம். ஏன் திட்டத்தில்
இடப்பட்ட அளவுகளை எட்டமுடியவில்லை என்று சிந்தித்தபோது
அந்த திட்டம் தயாரித்தப்பிறகு திரும்பவும் ஒரு
முறை கூட மறு ஆய்வு செய்யப்படவில்லை என்று தெரிந்தது. திட்டம் தயாரிக்கும் போது, கூடுதல் உற்சாகத்தில் மிக அதிக அளவீடுகளை இலக்காக வைத்துக்கொண்டோம்.
அது சாத்தியமானதா என யோசிக்கவில்லை. திட்டம் தயாரிக்கும் போது, நிதி திரட்டலில் எல்லாம் நாம் நினைத்தது போலவே நிகழும் என்று
எங்களுக்கு நாங்களே சமாதானப்படுத்திக்கொண்டோம். திட்டத்தை விட அதனை அடையும் வழிமுறைகள்
யதார்த்தமானதாகவும், எளிமையாகவும் தெளிவாகவும்
வரையறுக்கப்படுவதில் இடைவெளிகளை பார்க்கமுடிந்தது.
சிறப்பாக திட்டம் தயாரிக்க முடிந்தாலும் அதனை
தொடர்ந்து கண்காணித்து, மேம்படுத்தி, மறு
ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளபடியே அதனை அடையச் செய்வதில் நாம் தவறிவிடுகிறோம்.
எப்படி திட்டத்தை அடையப்போகிறோம் என்று கேட்டால் நமக்கு தெளிவான பதில்
தெரிவதில்லை. உதாரணத்துக்கு ஐந்து வருடம் கழித்து நாம் 100
வெள்ளை யானைப்பண்ணை வைக்கப்போகிறோம் என்று திட்டமிடுகிறோம் என்று
வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு குறைந்தபட்சம் 2
வெள்ளை யானைகளாவது இப்போது நம்மிடம் இருக்கவேண்டும். நமது கனவை எழுதிவைப்பது
என்பது வேறு, திட்டம் என்பது வேறு என்று புரிந்து
அதற்கேற்ப செயல்படும்போது நமது திட்டங்கள் வெற்றிபெற்று நமக்கும் நமது
சமூகத்துக்கும் பெரும் பயனை தரும்.
3.0 சற்றே பெரிய காதுகள்
ஒருநாள் மதியம், நான்
வீட்டில் சாப்பிட உட்காந்தேன். பக்கத்தில் தர்ஷிணி. நான் சாப்பிட ஆரம்பித்ததும்
அவள் சமையலறைக்கு வேகமாக ஓடினாள். கொஞ்ச நேரத்தில் டமால் என்ற பெரிய சத்தம்,
தட்டு, குடம் ஆகியவை உருண்டு விழுந்திருந்தன.
தர்ஷிணி தான் தள்ளிவிட்டிருக்கிறாள் எனத் தெரிந்ததும் கோபத்தில் தர்ஷிணியை
திட்டிவிட்டேன். அவள் வருத்தத்துடன், “அப்பா, உங்களுக்கு தண்ணீ கொண்டுவந்தேன். தெரியாம குடத்தை இடிச்சிட்டேன்...
கொட்டிடுச்சி..” என்றாள். அப்போது தான் எனது தவறை உணரமுடிந்தது. நான்கு வயது
குழந்தை, அன்பின் மிகுதியால் எனக்கு சாப்பிடும் போது
தண்ணீர் எடுத்து வரவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறாள். அவளது வயது சார்ந்த
இயலாமை காரணமாக சாமான்களை அறியாமல் தள்ளிவிட்டிருக்கிறாள். ஆனாலும் அவளது எண்ணமான
எனக்கு தண்ணீர் கொண்டுதரவேண்டும் என்பது பரிசுத்தமானது. உடனே, நான் அவளிடம் “சாரி பாப்பா” என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அவளை
அணைத்துக்கொண்டேன். எனது அவசர புத்தியை நொந்துகொண்டேன்.
சில சமயங்களில் அலுவலக சூழல்களிலும் இது போல
நடந்துவிடுகிறது. நமது முன்-அனுமானங்கள், உடனடி
எதிர்வினைகள் சார்ந்து மற்றவரை காயப்படுத்திவிடுகிறோம். தவறு நடந்தால் அந்த தவறு
குறித்தே அதிகம் பேசுகிறோம். ஆனால் அதன் ஆதிகாரணம், நடந்த
சூழல் என்பதை புரிந்துகொள்வதில் நாம் சற்று பின்தங்கியே தான் இருக்கிறோம்.
வெளிப்படை தன்மையும் நிதானமான அணுகுமுறையும் பிரச்சனையின் வேரை கண்டறியவும் அதனை
முழுமையாக சரிசெய்யவும் உதவும் கருவிகள் என்பதை புரிந்துகொள்ளும் போது நம்மைச்சுற்றி
அதிசயங்களை நிகழ்த்தலாம். அதற்கு சற்றே பெரிய காதுகளும் கண்களும் தேவைப்படுகிறது.
சற்றே பெரிய காதுகள், கண்கள்
என்றால் அது உருவத்தில் அல்ல, அதனை பயன்படுத்தும் முறையில் என்று
அர்த்தம் கொள்ளவேண்டும். ஒவ்வொறு செயலிலும் அதன் சாத்தியமாகக்கூடிய எல்லா பரிமாணங்களையும்
கவனிக்கவேண்டும். நடுநிலையுடன் செயல்களை அளவிடுதல் அவசியம். நான் பணியாற்றும்
களஞ்சிய வளர்ச்சி நிதி நிறுவனத்தில் வராக்கடன் அதிகமாயிருக்கிறது என்றால் அதற்கு
முழு காரணம் கள அலுவலகங்கள் மட்டுமல்ல. அதனை குறைப்பதில் களஞ்சிய வளர்ச்சி நிதி
நிறுவனம், திட்ட அலுவலகம், மண்டல
அலுவலகம் என அடுத்தடுத்த நிலைகளில் கடைசி நிலையில் உள்ள உறுப்பினர் வரை
பொறுப்புகள் விரிந்திருக்கின்றன.
ஒவ்வொறு விளைவுக்கும் யார், எதனை, எப்போது, எவ்வாறு
செய்யவேண்டும் என்ற பணி ஒதுக்கீடு மிகத்தெளிவாக அனைவருக்கும் பகிரப்பட்டால் ஒழிய
பணியில் உன்னதத்தை நாம் அடையமுடியாது. நிறைய நேரங்களில் ஒருவர் பணியை வேறொருவர்
செய்வதும், பணி குறித்த தெளிவு இல்லாமல் பணியின்
முழுமையை உணராமல் சிறு சிறு பாகங்களாக வேலையினை அணுகுவதுமே குறைந்தஅளவு
வெளிப்பாடுகளுக்குக் காரணமாகிறது. பெரும்பாலும் அணியாக இணைந்து வேலை செய்வது
என்பது சவாலாகவே இருக்கிறது. உண்மையில் அணியாக இணைந்து பணியாற்றும் போது
ஒவ்வொறுவரின் பணிச்சுமை தனிப்பட்ட அளவில் குறைகிறது என்பதை நாம் அனுபவ ரீதியாக
உணர்ந்திருந்தாலும் அதனைப் பின்பற்றுவதில் நாம் அதிக கவனம் செலுத்துவதில்லை.
தகவல் தொடர்பு பயிற்சிகளின் போது பனிக்கட்டி
ஏந்தும் விளையாட்டை நிகழ்த்துவது உண்டு. பங்கேற்பாளர்களில் முதல் இடத்தில்
அமர்ந்திருப்பவரிடம் ஒரு பனிக்கட்டியை கொடுத்து அதனை அடுத்தடுத்த நபர்களுக்கு
கடத்தச்சொல்வோம், இறுதியாக கடைசி பங்கேற்பாளரிடம் அந்த
பனிக்கட்டி வந்துசேறும். பெரும்பாலும் அது வெற்று நீராக இருக்கும். இதன் வாயிலாக
ஒரு கருத்து எப்படி மற்ற நிலைகளுக்கு பகிர்ந்துகொள்ளப்படும் போது நீர்த்துபோகிறது,
சிலசமயங்களில் தவறாகவும் மாற்றப்படுகிறது என்பதை
புரிந்துகொள்ளமுடியும். நம்மைப்போன்ற பெரிய நிறுவனங்களில் திட்டம் குறித்தும் அதனை
செயலாக்குவது குறித்துப் பேசப்படும் கருத்து, அதன்
தேவை ஆகியவை கடைசி உறுப்பினருக்கும் அதே வலிமையுடன் போய் சேருவதில் தான் வெற்றி
அடங்கியிருக்கிறது. நமது காதுகள் கேட்காதவற்றை கேட்கக்கூடியதாகவும் கண்கள்
மறைந்துள்ளவற்றை பார்க்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.
4.0 இன்றைய காந்தியம்
சமீபத்தில் நடந்த தானம் அறக்கட்டளையின்
ஆலோசனைக்குழு கூட்டத்தில் நமது நிர்வாக இயக்குனர், ஜேசி
குமரப்பாவின் ஐந்து வகை பொருளாதார மாதிரிகள் குறித்து குறிப்பிட்டார்.
சுயநலத்துக்காக அழிவில் ஈடுபடும் புலிப்பொருளாதாரம்,தனக்குத்
தேவையானவற்றை உழைப்பே இல்லாமல் பறித்து வாழும் குரங்குப் பொருளாதாரம், சுய சார்புடன் உற்பத்தியில் ஈடுபடும் தேனி பொருளாதாரம், அதன் நீட்சியாக தனக்காக மட்டுமில்லாமல் தனது குழுவின் மொத்த
நலத்துக்காகவும் செயல்படும் தேனியின் கூட்டுவாழ்க்கை முறை, சேவை
ஒன்றே பிரதானமாக, தியாகத்தை மையமாக கொண்ட தாய்மைப்
பொருளாதாரம் என குமரப்பா மக்களின் பொருளாதார வாழ்க்கை முறையை பிரிக்கிறார்.
இவற்றில் நாம் தேனிப்பொருளாதாரம் மற்றும் அதற்கடுத்த நிலையில் தாய்மைப்பொருளாதாரம்
ஆகியவற்றை நோக்கி சமூகத்தை முன்னெடுக்க செயல்படவேண்டும்.
ஆனால் இன்றைய சூழலில் புலி கூட தனது
வாழ்க்கைக்காக, உணவுத் தேவைக்காகத் தான் மற்ற
உயிரினங்களை கொல்கிறது. இவற்றையும் தாண்டி, தனக்கு
எந்த வித பயனும் இல்லாவிட்டாலும் மற்றவரை அழிப்பதை, அளவுக்கு
மீறி பணத்தாசை பிடித்து அடித்துப்பிடுங்கும் அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்களை ஜேசி
குமரப்பா கனவில் கூட யோசித்திருக்கமாட்டார். அந்த வகை அரக்கப் பொருளாதாரம்
மிகுந்துவிட்ட இந்த காலகட்டத்தில், காந்திய சிந்தனைகளுக்கும் அவரது
வழிமுறைகளுக்கும் என்ன மதிப்பிருக்கப்போகிறது என்ற விரக்தி ஏற்படுவது இயல்புதான்.
உண்மையில் இன்றைய அவலங்களுக்கு சரியான மாற்று காந்தியவழிமுறைகளே என்பது எனது
வலிமையான நம்பிக்கை. காந்திய சிந்தனைகள் காந்தி எனும் தனி மனிதரை விடப்பெரியவை.
அது ஒரு இயக்கம். காந்தியை ஆராதிப்பதைவிட, காந்தியத்தின்
சில கூறுகளை நமது அன்றாட வாழ்வில் பின்பற்றுவதே காந்தியடிகளுக்கு நாம்
செலுத்தக்கூடிய மிகச்சிறந்த நன்றிக்கடன். காந்திய தத்துவத்தில் ஆர்த்தெழுந்த நமது
நிறுவனம் இன்றைய சமுதாயத்துக்கான காந்திய வழிமுறைகளை கண்டறிந்து மீட்டெடுத்து
பரப்புவதில் ஈடுபடவேண்டும். நமது நிறுவனத்தின் அடுத்த ஐந்தாண்டு திட்டம் இவற்றை
உள்ளடக்கியதாக இருக்கவேண்டியிருக்கிறது.
5.0 மரத்தை மறைத்தது மாமத யானை
சில சமயங்களில் நான் எனது பணிசெயல்பாடு
குறித்து எனக்குள் ஆய்வு செய்து கொள்ளும் போது, நான்
வசதி வளையத்துக்குள் அடங்கியிருப்பதாக உணர்வேன். எனது தினசரி, பெரும்பாலும் ஒரேவிதப்பணிகள், அதற்கு
உதவ, துணை நிற்க எனது அணியினர் என காலம் கழியும்.
அதற்காக செய்யவேண்டிய புதிய பணிகள், சவால்கள்,
பிரச்சனைகள் இல்லை என்று சொல்லமுடியாது. அவையும் இருக்கின்றன. ஆனால்
எனது வேலை நேரத்தை திட்டமிட்டுக்கொள்ளும் சுதந்திரம் இருக்கும் போது, நான் எனக்கு விருப்பமான வகையில் திட்டமிட்டுக்கொள்ளும் பழக்கத்தை
அறியமுடிந்தது. பொதுவாகவே நான் மிகவேகமான செயற்பாட்டாளன் இல்லை. கடைசி நேர
அழுத்தத்தில், அட்ரினலின் உந்துதலால்
செயல்படக்கூடியவன். அதே போல, எனது வசதி வளையத்தை உடைத்து சவால்களை
நானாக ஏற்றுக்கொள்ளாதவரை புதிய படிப்பினை என்பதும், சுய
வளர்ச்சி என்பதும் சாத்தியமில்லை எனவும் நான் உணர்ந்திருக்கிறேன். இந்த வருடம்
அதனை நோக்கிய முயற்சியில் என்னை நான் செதுக்கிக்கொள்வேன் எனும் நம்பிக்கை
இருக்கிறது.
நான் குடும்பத்துடன் அவ்வப்போது கூடலழகர்
கோவிலுக்கு போவது வழக்கம். கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் எந்தையுடைய மரத்தாலான
பரிவார வாகனங்கள் யானை, சிங்கம், மயில்
என பலவற்றை அடுக்கிவைத்திருப்பார்கள். அந்த வழியாக செல்லும் போது, தர்ஷிணி என் கையை கெட்டியாக பிடித்துக்கொள்வாள். அவள் அந்த யானை,
சிங்கம் வாகனங்களுக்கு கிட்டே போகக்கூடாது என்று அழுவாள். எனக்கு
மரச்சிற்பமாக தெரியும் அந்த வாகனம் அவளுக்கு உண்மையான விலங்காக தெரிகிறது.
அப்போதெல்லாம் எனக்கு திருமந்திரத்தின் பாடல் தான் ஞாபகம் வரும்.
“மரத்தை மறைத்தது மாமத யானை; மரத்தில் மறைந்தது மாமதயானை.
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்; பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்”
இந்த உலக இன்ப துன்பங்களில் மூழ்கியவர்கள்
இறைவனை காண்பதில்லை, இறைவனை காண்பவர்களுக்கு உலக இன்ப
துன்பங்கள் தெரிவதில்லை. இரண்டுமே வெவ்வேறு அல்ல, காண்பவரின்
மனதைப் பொருத்து பரம் பிரதிபளிக்கிறது என்கிறார் திருமூலர். நமது பணியும்
அத்தகையதே. பணியில் புனிதம் காணும் போது, உற்சாகம்
பெருகுகிறது. புதிய சிந்தனைகள் ஊற்றெடுக்கிறது. ஆனால் இதையே சுமை என கருதினால்,
காலையில் இருந்து மாலை 6 மணி வரை
நேரத்தைக் கடத்துவதே பெரிய சிரமமாக, கடுமையானதாக
மாறிவிடுகிறது. நாம் எப்படி இருக்கிறோமே அப்படியே நமது சூழலும் பிரதிபளிக்கிறது.
வசதி-வலையத்துக்குள் இருந்துகொண்டு மரத்தை பார்த்தக்கொண்டிருப்பதும், சற்று விலகிவந்து மரத்தை தாண்டி, அதற்குள்
இருக்கும் யானையை உயிர்ப்புடன் பார்ப்பதும் நம் கையில் தான் இருக்கிறது.
6.0 பறவை சுமக்கும் காடு
பறந்து செல்லும் பறவையின் எச்சத்தின் ஒவ்வொறு
துளியிலும் ஒரு காடு உள்ளடங்கியிருக்கிறது என்று சொல்வார்கள். பறவையின் எச்சம்
என்று நாம் கேவலமாக நினைக்கும் பொருளில் மரங்களின் விதைகள் இருக்கலாம். அவை சரியான
இடத்தில் விழும் போது மரம் பல்கிப்பெருகி காட்டை உருக்கக்கூடும். எளிமைகளில் தான்
அதியசங்கள் புதைந்திருக்கின்றன. அதனையே பிரிட்டிஷ் பொருளியல் வல்லுனர் ஷிமேச்சர்,
சிறியதே அழகு என்ற தத்துவமாக முன்வைக்கிறார். அதன் அர்த்தத்தை
உள்வாங்கி உணர்ந்து கொள்வதும் அதன் வலிமையை வார்த்தெடுப்பதும் மிகப்பெரிய கலை.
அந்த வகையில் நம் ஒவ்வொறுவரும் பெரும் சக்திக்கொண்டவர்களாக, சாதனை
படைக்கும் ஆற்றல் உடையவர்களாக இருக்கிறோம். அதனை சரியான நேரத்தில்
வெளிக்கொண்டுவருவதும், அதற்காக தனித்த மற்றும் தொடர்ந்த
முயற்சி எடுப்பதும் நமது கடமை.
இந்த சுயம் வளர்க்கும் செயல்முறையின்
உயிர்நாடியாக மெண்டரிங் எனும் ஆளுகை ஊக்குவிப்புக் கருவி இருக்கிறது. நம்
அனைவருக்குமே யாராவது சிலபேர் முன்னுதாரணமாக இருப்பார்கள். அவர் மகாத்மா
காந்தியாகவோ, புத்தராகவோ, அன்னை
தெரசா, பாரதியாராகவோ இருக்கலாம். நமது
குடும்பத்துக்குள்ளேயே நமது தாய் தந்தை சகோதரராக இருக்கலாம். அல்லது நாம் பணி
செய்யும் சூழலில் சக பணியாளராக, நண்பராக இருக்கலாம். எனக்கு வளர்ச்சி
குறித்து கற்றுத்தந்த பல்கலைக்கழகமாக நமது நிறுவனம் விளங்குகிறது. இங்கு
ஒவ்வொறுவரிடமும் நான் கற்றுக்கொள்கிறேன். சிலர் எனக்கு வெறும் அலுவலக வழிகாட்டியாக
மட்டும் இல்லாமல் வாழ்வின் வழிகாட்டியாக, நான்
வருத்தமடையும், விரக்தியடையும் தருணங்களில் ஆறுதலாக,
ஆசுவாசப்படுத்தும் தென்றலாக இருக்கிறார்கள். இவர்களின் உதவியினாலேயே
நான் எனக்குள் இருக்கும் காட்டை அடையாளப்படுத்தி இயங்கமுடிகிறது.
7.0 தத்வமஸி
ஒருமுறை ஒரு குருவும் அவரது சீடனும் காட்டின்
வழியே போய்கொண்டிருந்தார்கள். சீடன் குருவிடம், “குருவே,
பூமியில் எல்லாரும் குழந்தையாக ஒரே விதமாகத்தானே பிறக்கிறார்கள்.
ஆனால் ஏன் வளர்ந்த பிறகு சிலர் நல்லவர்களாகவும் சிலர் கெட்டவர்களாகவும்
மாறிவிடுகிறார்கள்” என்று கேட்டார். குரு சீடனிடம், "நாம்
பிறக்கும் போது நமக்குள் இரண்டு ஓநாய்களும் சேர்ந்தே பிறக்கின்றன. நம்
எல்லாருக்குள்ளும் அந்த இரண்டு ஓநாய்கள் சேர்ந்தே வளருகின்றன. அதில் ஒன்று
சாத்தான். அதற்கு கோபம், பொறாமை, பொய்,
வஞ்சம், பேராசை, பிடிவாதம்
என எல்லாம் இருக்கும். மற்றொரு ஓநாய் தேவதை. அதற்கு மகிழ்ச்சி, அமைதி, அறிவு, ஞானம்,
அன்பு ஆகிய குணங்கள் இருக்கும். இவை இரண்டுக்கும் எப்போதும், ஓயாமல் சண்டை நடந்துகொண்டே இருக்கும்" என்றார். சீடன்,
"அப்ப அந்த இரண்டு ஓநாயில் எது ஜெயிக்கும்?"
எனக் கேட்க, குரு, "நீ
எந்த ஓநாய்க்கு உணவளித்து காப்பாற்றி வருகிறாயோ அது!" என்றார்.
நாம் எதை விரும்புகிறோமோ அதுவாகவே ஆகிறோம்
என்கிறது வேதம். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கிறது தமிழ்ச் செய்யுள். நம்மை
சரிசெய்துகொள்ளும் வாய்ப்பு நம்மிடம் தான் இருக்கிறது. பணம் சேர்ப்பது, குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்வது போலவே, நாம்
முடிந்தவரை மற்றவருக்கு பயனுடன் இருப்பதே வாழ்க்கைக்கு அர்த்தத்தை தரக்கூடியது.
ஒரு மாதத்துக்கு முன் நான் விளையாட்டாக என்னை சுய ஆய்வுக்கு
உட்படுத்திக்கொள்வதற்காக ஐந்து கேள்விகளை தயாரித்துக்கொண்டேன். இதனை ஒவ்வொறு நாள்
இரவு உறக்கத்துக்கு முன் நான் எனக்குள் கேட்டுக்கொண்டேன்.
- இன்று முழுவதும் நான் மற்றவர் மீது காட்டிய பணிவும், அன்பும் உண்மையானதா, சுயநலமற்றதா?
- நான் மற்றவரை திருப்திப்படுத்த வேலை செய்யாமல், எனது மனசாட்சிக்கு துரோகமில்லாமல் இயங்கமுடிந்ததா?
- இன்று என்னால் ஏதேனும் தவறு நிகழ்ந்திருந்தால் அந்தத் தவறுகளுக்கு காரணம் கற்பிக்காமல், மற்றவர் மீது பழியை போடாமல், நான் ஏற்றுக்கொண்டேனா?
- இன்று எத்தனை பேர் முகத்தில் மகிழ்ச்சியையும், எத்தனை பேர் முகத்தில் வெறுப்பு, பயம், கோபமும் என்னால், எனது செயல்களால் ஏற்பட்டது?
- எனது இயலாமையை, பலவீனத்தை முகமூடிபோட்டு மறைக்காமல் ஏற்றுக்கொள்கிறேனா, அந்த பலவீனத்திலிருந்து மீண்டுவர முயற்சிகள் மேற்கொண்டேனா?
பெரும்பாலான நாட்கள் எனக்கு அவமானமாக இருந்தன.
இவற்றில் நிறைய விஷயங்களில் நான் நேர்மையாக இல்லை. சில நாட்கள் இப்படி சுய ஆய்வு
செய்துகொள்வதையும் தவிர்த்தேன். ஆனால், நம்மை
மேம்படுத்திக்கொள்ள இருக்கும் ஒரே வழி, நம்மை நாமே
மதிப்பிடுவது தான் என்று உறுதியாக உணர்ந்து கடந்த சில வாரங்களாக தொடர்ந்து இந்த
கேள்விகளை எனக்குள் கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் எனது செயல் குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது. மன அமைதி கிடைக்கிறது. காலப்போக்கில்
நான் இன்றைக்கு இருப்பதை விட சற்று மேம்பட்டவனாக மாறுவேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
இதனை இங்கு எழுதுவது கூட எனக்கு நானே விதித்துக்கொள்ளும் ஒருவகையான பிணைப்பு.
வெளிய சொல்லிட்டோம், தொடர்ந்து பின்பற்றவேண்டும் என்ற
மறு-வலியுருத்தல் முறை. நான் எதுவாகவும் ஆகாமல் நான் நானாக இருக்கவே இதுபோன்ற சுய
ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
8.0 மெய்யெழுத்து
தமிழ் எழுத்துகளில் மெய்யெழுத்துக்கு
மகத்துவமான குணம் உண்டு. க்,ங்,ச்
வரிசையில் அமைந்த 18 எழுத்துக்களும் வார்த்தைகளை உருவாக்க
தவிர்க்க இயலாதவை. ஆனால் அவை தனித்து இயங்கமுடியாது. அவை தனியே
பயன்படுத்தப்பட்டால் எந்த அர்த்தமும் கிடைப்பதில்லை. அதேபோல, இவைகளை வார்த்தையின் முதல் எழுத்தாகவும் பயன்படுத்துவது கிடையாது.
உயிர் எழுத்துகளுடன் இணைந்து, உயிர் மெய்யாக உள்ளார்ந்து
பயன்படுத்தும் போது தான் மெய்எழுத்துக்கள் அர்த்தம் பெறுகின்றன. நமது பணியும்
தனித்தியங்குவது கிடையாது. யாரும் தனித்தியங்கவும் முடியாது. மெய்யெழுத்தைப் போல
நாம் மற்றவருடன், அணி அளவில், நிறுவன
அளவில், சமூக அளவில் இணைந்து ஒரே நிலையில் செயல்படும்
போது தான் நம் வாழ்வின் அர்த்தம் பிறக்கிறது. சமூக இலக்கணம் செழிக்கிறது. இணைந்து
செயல்பட உறுதியேற்போம்.