"கொங்குதேர் வாழ்க்கை அம் சிறைத் தும்பி!
காமம் செப்பாது கண்டது மொழிமோ?"
காமம் செப்பாது கண்டது மொழிமோ?"
- இறையனார், குறுந்தொகை பாடல்.
சங்க இலக்கியத்தில் குறிஞ்சித்
திணை படைப்பான, குறுந்தொகையில் வரும் இந்தப் பாடலை திருவிளையாடல்
படத்தில், கடவுள் எழுதிக் கொடுத்து பாண்டியன் அவையில் தருமி பாட கேட்டிருப்போம். எனக்கு அண்ணன்.நாஞ்சில்
நாடன் அவரது புத்தகத்தின் வழியே ஞாபகப்படுத்தினார். கொங்கு என்றால்
பூக்களில் இருக்கும் மகரந்ததாது, அதாவது தேன். சரியான மகரந்த தாதுவினை தேடி, தேனை சேகரித்து
திரியும் தும்பி எனும் சிறு உயிரியின் வாழ்க்கைப் பயணமே கொங்கு தேர் வாழ்க்கை.
‘பூக்களின் மகரந்த தாதுகளை தேர்ந்து உண்பதையே வாழ்க்கையாகக் கொண்ட அழகிய சிறகுடைய தும்பியே! நீ உன் சொந்த விருப்பு வெறுப்புகளை சார்ந்தில்லாமல், கண்ட உண்மையை மட்டும் சொல்வாயா?’ என இறையனார் கேட்பது போல இந்த பாடல் அமைந்திருக்கிறது.
எப்படியும் வாழலாம் என்று பல விலங்குகள் இருக்க, ஒரு தவத்தைப் போல தேனை தேர்ந்தெடுத்து, சேகரித்து வாழும் தேனிக்களின் வாழ்வு தான் எத்தனை அற்புதம். யோசித்துப் பார்த்தால் வளர்ச்சிப் பணியாளனின் வாழ்க்கையும், கொங்குதேர் வாழ்க்கை தான். அவனும் சமூகத்தின் நல்லவைகளை, நேர்மறைகளை தும்பி, மகரந்த தாது சேகரிப்பது போல தேர்ந்தெடுத்து சேகரிக்கிறான். அந்த சேகரத்தை உலகுக்கே திரும்பவும் கொடுக்கிறான். அவனது செயல்பாடுகளில் சார்பு நிலை இல்லாமல், தான் கண்ட உண்மையையே பேச வேண்டும். அவன் காமம் செப்பாது, கண்டது மொழிதல் தனக்காக மட்டுமல்ல. ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மைக்குமானது.
பல்லுயிர் சூழலில் தேனியை
“கீ ஸ்டோன் உயிரி” என்பார்கள். அதாவது, தேனி எனும்
உயிரினம் இல்லாவிட்டால் பூமியில் மனித இனமும் சேர்த்து, சுமார் இரண்டு லட்சத்து
ஐம்பதாயிரம் உயிரிகள் காணாமல் போய்விடுமாம். இப்படி லட்சக்கணக்கான
உயிரினங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் எளிய உயிரியான தேனியைப் போல வளர்ச்சிப் பணியாளனின்
தேவையும் இந்த உலகில், மனிதம் தழைத்து உயிர்வாழ அவசியமாகிறது.
ஜே.சி குமரப்பா
எழுதிய நிலைத்த பொருளாதாரம் புத்தகத்தில் தேனியின் வாழ்க்கை முறை சார்ந்த பொருளாதார
முறைக்கு மிக உயரிய இடம் கொடுத்திருப்பார். இதில் கவனிக்கவேண்டிய
இன்னொறு விஷயம், தேனியும் சரி, வளர்ச்சிப் பணியாளனும் சரி, தான் இவ்வளவு
பெரிய வேலையை செஞ்சிக்கிட்டிருக்கோம் என்று சுய கர்வம் அடைவதில்லை. ஒரு ஸ்வதர்ம
அவதானியைப் போல தன் பணியை கடமையாக செய்வதிலேயே திருப்தி அடைகிறார்கள்.
தேனிக்கள், முட்டையிலிருந்து
லார்வா நிலை அடைந்து பல படி நிலைகளுக்குப் பிறகு முழுமையான தேனியாக உருமாறுகின்றன என்று
நாம் பள்ளிகால பாட புத்தகத்தில் படித்திருக்கிறோம். அதே போல வளர்ச்சிப் பணியாளனும்
தனது வாழ்நாளில் தனது பணிகள் மற்றும் அது தந்த அனுபவம் சார்ந்த பல நிலைகளை கடந்து தான்
முழுமை அடைகிறான். வளர்ச்சி பணியாளன் முழுமையடைய ஒரு முழு வாழ்நாள் தேவைப்படுகிறது. அவன் அவ்வப்போது
சுய-ஆய்வும் செய்து கொள்ள வேண்டியுள்ளது.
ஜென் தத்துவத்தில், “சுவரற்ற கதவுகள்” என்ற ஒன்று குறிப்பிடப்படும். எதுவுமற்ற
வெற்றிடத்தில் ஒரு கதவும் தாழ்பாளும் இருக்கும். மடாலயத்தை சேர்ந்தவர்கள்
அந்த கதவை மட்டும் தான் பயன்படுத்துவார்கள். சுய-ஒழுக்கத்தின்
குறியீடாக இதனை புரிந்துகொள்ளலாம். எனக்கான சுய-ஒழுங்காக எனது பணியினை
திரும்பிப்பார்த்து, எனது நிலை
குறித்த சுய ஆய்வினை மேற்கொள்ள இது போன்ற ஆற்றுப்படுதல் நிகழ்வுகள் உதவுகின்றன.
இருளும் ஒளியும்
“விழுகின்ற அந்த பூக்கள்,
மீண்டும்
கிளைக்குத் திரும்புகின்றன;
பட்டாம்பூச்சிகள்!”
- மொரிடெக்
பொருளாதார நிபுணர்களை
இரண்டு வகையினராக பிரிப்பார்கள். ஒரு சாரார் பல்கலைக்கழகங்களில் பொருளாதார பாடம் சொல்லித்
தருபவர்களாக, ஆய்வு நடத்துபவர்களாக இருப்பார்கள். மற்றொரு வகையினர் வங்கிகள், நிதி நிறுவனங்கள், நிதி கட்டுப்பாட்டு
அமைச்சகங்களில் ஆகியவற்றில் பணியாற்றுவார்கள். இவர்களின் சிந்தனைப்
போக்கில் ஒரு சுவாரசியமான ட்ரெண்ட் காணப்படுகிறது. பல்கலைக்கழகங்களில் பணியாற்றும்
பொருளாதார நிபுணர்களில் பெரும்பாலானோர் காரல் மார்க்சுடைய பொதுவுடைமை தத்துவத்தில்
நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் வங்கிகள், நிதி நிறுவனங்களில் பணியாற்றும்
பொருளாதார நிபுணர்களில் பெரும்பாலானோர் முதலாளித்துவம், பொருள் முதல்வாத தத்துவத்தை
சார்ந்து செயல்படுபவர்களாக இருக்கிறார்கள்.
அதே போல, பல ஆண்டுகளாக
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது ஆக்டிவிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளும் உரிமைப் போராட்டவாதிகள்
வைக்கும் குற்றச்சாட்டு, என்ஜிஓக்கள் அரசின் தவறினை எதிர்க்கும் மக்களின் மனப்பான்மையை
மட்டுப்படுத்துகிறது என்பதாகும்.
ஒரு குழந்தை பசியுடன்
இருக்கிறது. பசித்திருக்கும் அந்த குழந்தைக்கு உணவு ஏற்பாடு செய்வதை என்ஜிஓக்கள்
முக்கிய பணியாக கருதுகிறது. ஆனால் உரிமைப் போராட்ட குழுவினர், அந்த குழந்தைக்கு
ஏன் உணவு கிடைக்காமல் போனது, அதன் உணவை பதுக்கியது யார் என அதிகாரத்தை நோக்கி கேள்வி
கேட்கிறது. சில சமயங்களில், எனக்கும் அந்த உணர்வு தோன்றியிருக்கிறது. நாம் ஒரு
பிரச்சனையை உருவாக்கும் அரசு மற்றும் அதன் அதிகார அமைப்பை சரி செய்வதற்கு பதிலாக, அரசின் மெத்தனத்தால், ஊழலால் ஏற்பட்ட
பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதிலேயே காலத்தை கழிக்கிறோமா என்று யோசிப்பேன். வறுமை குறைப்புக்காக
பணி செய்கிறோம். அதே சமயம் வறுமை இந்தளவுக்கு நமது தேசத்தில் வேர் விட்டிருப்பதற்கு
அரசு தானே காரணம்.
உண்மையில் பிரச்சனைக்கு
சாத்தியமாகக் கூடிய தீர்வினை அளிப்பது,
அதே சமயம் எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் வராமல்
தடுக்க அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்பது என இரண்டுமே அவசியம் தான். நாம் இருக்கின்ற
பிரச்சனைகளை தீர்க்க போராடுகிறோம். உரிமை சார்ந்து போராட்டம் நடத்துபவர்கள் இந்த பிரச்சனைகள்
இனி வராமல் இருக்க மக்களை திரட்டி அரசை கேட்க ஆரம்பிக்கிறார்கள். பொருளாதாரமாகட்டும், சமூக வளர்ச்சியாகட்டும், இந்தவகை
இரட்டைத்தன்மையானது சமூகம் சமநிலையில் இயங்குவதற்கு மிக முக்கியமானது.
எல்லா வளர்ச்சித் தத்துவங்கள்
அதனதன் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்தவையே. ஒன்று சரி என்பதாலேயே
அல்லது ஒன்று எனக்கு பிடித்திருக்கிறது என்பதாலேயே மற்றொன்றை தவறு என்பதும், அதனை ஒதுக்குவதும்
தத்துவார்த்த சமநிலையை பாதிக்கிறது. குறிப்பாக சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட இந்த சூழலில்
செயல்களுக்கும் இணைய திரையின் முன்னால் இது சரி இது தவறு என நாம் போகிற போக்கில் தீர்ப்புகளை
எழுதிச்செல்கிறோம். அதைவிட,
நமக்கு உகந்த, நாம் சரியென நினைக்கும்
வழியை தேர்ந்தெடுத்து அதில் உண்மையாய்,
இதயப்பூர்வத்துடன் பணி செய்தலே நம்மையும் சமூகத்தையும்
பலப்படுத்தும்.
முகமூடிகள் இல்லா எளிமை...
“பாடுதல், நெல் விதைத்தல்,
கிராமப்
பாடல்கள் -
பிரபலமான
நகர பாடல்கள்களை விட
அழகாக இருக்கின்றன!”
- பாஷோ
தானம் கல்வி நிலையத்தில்
படித்துக்கொண்டிருந்த போது கிடைத்த விடுமுறையில் ஒருமுறை எனது சொந்த கிராமத்துக்கு
சென்றிருந்தேன். எனது தாத்தா, மதுரைக்கும் திருத்தணிக்கும் எவ்வளவு தூரம் என்று
கேட்டார். நான் சுமார் 550 கி.மீ இருக்கும் என்றேன். அவர், “கிலோ மீட்டர்ல
சொல்லாதடா, அது சம்மந்தமே இல்லாத விஷயம் என்னால புரிஞ்சுக்க முடியாது.. எவ்வளவு
நேரம் ஆகிறது” என்று கேட்டார். நான்
10 மணி நேர பயணம் இருக்கும் என்றேன். அவர், எனது காலத்தில்
இந்த கிராமத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் இருக்கும் திருத்தணிக்கு செல்லவே 10 மணி நேரம்
ஆகியிருக்கிறது என குறிப்பிட்டார். “நீ பிற்காலத்தில் நல்லா படிச்சி, நிறைய சம்பாதிச்சா, 1 மணி நேரத்துல
ஏரோப்ளேன்ல வந்துடலாம்ல்ல..” என்று கூறி சிரித்தார்.
வேறு ஒரு சந்தர்ப்பத்தில்
திரு.மகபுப் உல் ஹக் அவர்களின் மனித மேம்பாடு குறித்த கட்டுரையை படித்துக்கொண்டிருந்தேன். அவர், வளர்ச்சி
என்பது ஒரு தனி மனிதனுக்கு அவனது தேவைகளுக்கான பல வித வாய்ப்புகளை அளிப்பதும், அதனை
தேர்ந்தெடுக்கும் உரிமையையும் திறனையும் உறுதி செய்வதும் தான் என்கிறார். அப்போது எனக்கு தாத்தாவின்
ஞாபகம் வந்தது. அவருக்கு பெரிய படிப்பில்லை என்றாலும் எது சரியான வளர்ச்சி, அதற்காக
சமூகம் அளிக்கும் வாயப்புகளும், ஒரு தனிநபர் அதனை தேர்ந்தெடுக்கும் திறனும் குறித்த
புரிதல் அவருக்குள் இருந்ததை உணர்ந்தேன்.
எளிய கிராமத்து மனிதரின் சிந்தனையும் பெரிய சிந்தனாவாதியின்
தத்துவமும் எதோ ஒரு இழையில் இந்த பிரபஞ்சம் பிணைத்துத் தான் வைத்திக்கொண்டிருக்கிறது.
அறமும் அறம் நிமித்தமும்
போன வருஷம் ஒரு முறை
பூனாவில் இருக்கும் ரிசர்வ் வங்கி பயிற்சி மையத்தில் ஒரு பயிற்சிக்காக செல்லும் வாய்ப்பு
கிடைத்தது. அந்த பயிற்சியில் டிஜிட்டல் வங்கியியல் மேலாளருடன், இந்திய அரசால்
டிஜிட்டல் சேவைகளை வங்கித் துறைகளில் ஒருங்கிணைக்க எடுக்கப்பட்ட வாய்ப்புகள் குறித்து
கலந்துரையாடிக்கொண்டிருந்தோம். அப்போது, இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில்
டோல் கேட் கட்டணங்கள் ஏன் டிஜிட்டல் பரிவர்த்தனையாக மாற்றக்கூடாது. இன்னும்
பணம் வசூலிக்கும் பழைய முறையே தொடர்கிறதே என்று கேட்டபோது, அவர் கூறிய விஷயம் சமூக
அறம் குறித்த அடிப்படையை கேள்விக்குள்ளாக்கியது.
அரசு பரிட்சார்த்தமாக
வண்டி முதலாளிகளுடன் பேசி, வண்டியின் தன்மைக்கு ஏற்ப ஒரு மேக்னடிக் ஸ்டிக்கரை
அந்த வண்டியின் ஓனருடைய வங்கிக் கணக்குடன் இணைத்து வண்டியில் ஒட்டியது. அந்த வண்டி, டோல்கேட்டினை
கடக்கும் போது ஸ்கேனரால் அந்த ஸ்டிக்கர் ஸ்கேன் செய்யப்பட்டு வண்டி ஓனரின் வங்கிக்
கணக்கிலிருந்து தானாக பணம் நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்படும். இது அறிமுகப்படுத்தப்பட்ட
கொஞ்ச நாளில், சிறிய ரக கார்களுக்கு இந்த வகை ஸ்டிக்கரை வாங்கி அதனை பெரிய லாரி
மற்றும் சரக்கு போக்குவரத்து வாகனங்களில் ஒட்டி டோல் கேட் கட்டணத்தில் மோசடி செய்திருப்பது
கண்டறியப்பட்டது. பிறகு அந்த ஸ்டிக்கரை ஒட்டிய பிறகு கிழிக்கமுடியாத
படி மாற்றப்பட்டது. இந்த முறை, அந்த ஸ்டிக்கர் ஒட்டிய
வண்டியின் பாகத்தையே வெட்டியெடுத்து வேறு பெரிய வண்டியில் ஒட்டவும் ஆரம்பித்தார்கள்
என கூறிய அவர், டோல்கேட் கட்டணங்களை பொறுத்தவரை, டிஜிட்டல் முறையில் நேர்மையான
பரிமாற்றத்தை உறுதி செய்வது சவாலாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
இது மனித மனதின் இயல்பை
வெளிப்படுத்துவதாக அமைகிறது. இயல்பிலேயே நாம் குறுக்கு வழியை விரும்புபவர்களாக
இருக்கிறோம். தந்திரத்தால் ஏமாற்றி அதில் கிடைக்கும் சிறிய அளவு லாபம் கூட நமக்கு
பெரிய மகிழ்ச்சியாகவும், உற்சாகத்தையும் தருகிறது. அறம் என்பதெல்லாம் நம்மை
நமக்கு சமாதானம் செய்துகொள்ள கற்பித்துக்கொண்ட விஷயம் என்றே நம்மை சுற்றி நிகழும் சம்பவங்கள்
உணர்த்துகின்றன.
மனிதனும் மிருகமும்...
“தலைநகரை நோக்கிய எனது பயணத்தின்
பாதி வானத்தை
கடந்த போது
கருமேகங்கள்
அடர் மழைக்கு உறுதியளித்தன”
- பாஷோ
மேலைநாடுகளில் ஒரு குழு
செயல்படுகிறது. அவர்கள், மனிதன் என்பவன் அடிப்படையில் மிருகம் என்றே நம்புகிறார்கள். ஒரு மிருகத்துக்கு
உள்ள போட்டி, பழிவாங்கும் தன்மை,
வலிமையால் மற்றவரை கட்டுப்படுத்துவது ஆகியவை மனிதனுக்கும்
பொருந்தும் என்று வலியுருத்துகிறார்கள்.
நன்முறை, அறம், பொதுநல சிந்தனை
இதெல்லாம் மனிதன் மேல் திணிக்கப்பட்டவை என்றும், அவை மனித இயல்பே அல்ல
என்றும் வலியுருத்துகிறார்கள். டார்வினுடைய கற்பிதமான, வலுவுள்ளதே பிழைக்கும்
என்ற தத்துத்தை நம்புகிறார்கள். இந்த குழுவின் தாக்கத்தில் ஹாலிவுட்டில் “த பர்ஜ்” என்ற பெயரில்
திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது. அதில் மனிதனுடைய வன்முறை குணத்துக்கு வடிகாலாக வருடத்தில்
ஒரு நாள் பர்ஜ் தினம் (Purge Day) என்று ஒதுக்கி அந்த குறிப்பிட்ட நாளில் யாரும் எந்த
விதமான தவறையும், குற்றதையும் செய்து தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்ளலாம்
என்ற கருத்தின் அடிப்படையில் கதையை அமைத்திருப்பார்கள்.
மனிதன், அடிப்படையில்
வெறும் மிருகம் தானா? ஒரு நாள் அதிகாலை 5 மணி அளவில் நான் நமது
மைய அலுவலகத்திலிருந்து சேலம் செல்ல வேண்டியிருந்தது. வீட்டிலிருந்து எனது
வண்டியில் வந்துகொண்டிருந்தேன். வழியில் குப்பைத் தொட்டிக்கு அருகே அன்றோ அதற்கு முதல்நாளோ
பிறந்த 4 நாய் குட்டிகள் கண்களை கூட முழுமையாக திறக்காமல் சாலையில் நடந்து
கொண்டிருந்தன. அந்த சாலை, போக்குவரத்து அதிகமிருக்கும் சாலை. நாய்குட்டிகளைப்
பற்றி எனக்கு சற்று கவலை ஏற்பட்டது. அப்போது ஒன்றும் செய்வதற்கில்லை. சேலமும்
சென்று விட்டேன். இரவு,
10 மணிக்கு மேல் சேலம் சென்று திரும்பினேன். திரும்பும்
வழியில் அந்த இடத்தில் நாய்குட்டிகளை பார்த்த போது ஒரே ஒரு நாய் குட்டி மட்டும் அங்கு
உறங்கிக்கொண்டிருந்தது. அன்றைய இரவில், வாழ்வின் நிலையாமை பற்றி
யோசித்து உறக்கம் போனது. அடுத்த நாள் காலை, பக்கத்து குடியிருப்பில்
இருக்கும் சில சிறுவர்கள் அந்த நாய்குட்டிகளை தம்முடன் வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள். எல்லா நாய்குட்டிகளும்
பாதுகாப்பாக இருந்தன. மனம் பெரிய நிம்மதி அடைந்தது. மனிதன் வெறும்
மிருகம் மட்டுமல்ல.. அவனுக்குள் இருக்கும் அன்பு எப்போதும் நோய்மை மனநிலையை
வென்று வரும் என புரிந்தது.
இருட்டான அறையில் ஒரு
ஸ்விட்சை போட்டால் ஒளி பரவுகிறது. ஆனால் ஒளி நிறைந்த அறையில் எதாவது ஸ்விட்ச் போட்டால்
இருட்டை தரும் கண்டுபிடிப்பு இருக்கிறதா..
இயற்கையின் இயல்பே ஒளித்தன்மை தான். ஒளியற்ற
தன்மை தான் இருட்டே தவிர, இருள் என்பது தனிப்பொருளே அல்ல. அது போல
மனித மனதின் ஆக்கம், அன்பும் அறமும் சார்ந்த்து. அன்பும்
அறமும் அற்ற நிலையில் தீய எண்ணங்கள் வரலாம். அவை அன்பையும் அறத்தையும்
வளர்ப்பதால் காணாமலும் போகும். நமது பணி சூழலில் அந்த நம்பிக்கையை நமது அணிகளுக்குள், சமூகத்தில்
நாம் கொடுக்கிறோமா என்பது நமக்கான கேள்வி.
சாதனை நிறுவனங்களின் “தங்க
வட்டம்”
“ஒற்றை தாமரை இலை,
ஒரு நீர்த்துளியின்
மொத்த வாழ்வையும்
தாங்கி நிற்கிறது!”
- கிகாகு
ஒரு சாதாரண நிறுவனத்துக்கும், சாதனை நிறுவனத்துக்கும்
என்ன வித்தியாசம். எப்படி சில நிறுவனங்கள் தொடர்ந்து மிகப்பெரிய வெற்றியையும்
புதுமையையும் படைத்துக்கொண்டு இருக்கமுடிகிறது. சீன நிறுவனங்களும் செல்போன்
தயாரிக்கின்றன. ஆப்பிள் நிறுவனமும் செல்போன் தயாரிக்கிறது. ஆனால் ஆப்பிள்
நிறுவனத்தின் செல்போன்கள் மிக உயரிய சந்தை மதிப்பையும் அதனை வைத்திருப்பது வாடிக்கையாளரை
பெருமையாகவும் கருதச்செய்வது எப்படி.
இதனைப் பற்றி “சைமன் சைனெக்” என்பவர்
ஆய்வு செய்து நிறுவனங்களின் தங்க வட்டம் என்ற கருத்தை உருவாக்கினார்.
அந்த சிந்தனை பல நிறுவனங்களை
சுய ஆய்வு செய்துகொள்ள உதவியது. வெறும் கருத்துரையாக இல்லாமல் தனது சிந்தனையை மனித
மூளை செயல்படும் விதத்துடன் இணைத்தார்.
மூளையின் லிம்பிக் ப்ரெயின் மற்றும் நியோ கார்டெக்ஸ்
ஆகியவை செயல்படும் விதத்துக்கும் ஒரு அணியின் நம்பிக்கை மற்றும் செயல்படும் விதத்துக்கும்
இருக்கும் தொடர்பை விளக்கியிருக்கிறார்.
சைமன் சைனெக்குடைய கருத்து பற்றி அவர் அளித்த டெட்
கருத்துரையை உங்களுக்கு விருப்பமும் வாய்ப்புமிருந்தால் கீழே கொடுக்கப்பட்ட இணையதள
இணைப்பில் பார்க்கலாம்: https://www.ted.com/talks/simon_sinek_how_great_leaders_inspire_action
அவர் குறிப்பிடும் இரண்டு
மிக முக்கிய கருத்துகள் நமக்கும் பெரிதும் தொடர்புடையது.
1. எப்போதும் மக்களை ஈர்ப்பது நீங்கள் என்ன செய்கிறீர்கள்
என்பதல்ல, நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்பதாகும்.
2. ஒரு நிறுவனத்தின் பணியாளர்கள் தமது நிறுவனத்தை விரும்பாதபோது, அந்த நிறுவனத்தின்
வாடிக்கையாளர்களும் அந்த நிறுவனத்தை விரும்புவதில்லை.
தற்சமயம் சமூகத்தின்
அரசியல் துறை, அதிகாரிகள் வர்கம்,
பொதுமக்கள், மீடியா என அனைத்தும்
எதிர்மறையை வளர்த்து அதில் லாபம் பார்த்துவருகின்ற சூழலில் நன்னம்பிக்கை, அன்பு, அறம் ஆகியவற்றை
விதைக்க நம்மைப்போன்ற நிறுவனங்களின் தேவை மிக அதிகமாகிறது. அதனை முன்னெடுக்க, நாம் பிறரிடம்
குறைகளை கண்டுபிடித்து அதனை பரப்பி நம்மை குறுக்கிக்கொள்ளாமல், நல்லவற்றை
கண்டு, அதனை விரிவாக்கி காண்கின்ற அனைத்திலும் அன்பை விதைப்போம்.
ஜொனாதன் லிவிங்ஸ்டன்
சீகல் வெறும் கடல் மீன்களை தேடி
தின்று, உயிர்வாழும் சாதாரண கடற் புறா அல்ல. அது பறத்தலை தவமாய் செய்கிறது. கூட்டத்திலிருந்து
தனித்திருந்து, தன்னளவில் மிக உயரிய இலட்சியத்தை சார்ந்து வாழ்ந்தது. நாமும், ஒரு நிறுவனமாக
ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்லாக இதுவரை இருந்தோம், இனியும் இருப்போம்.