Wednesday, July 13, 2016

2014: பெருங்காட்சி


சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது
-       பிரமிள்


எனக்கு மே மாதம் ரொம்ப பிடிக்கும். பள்ளிக்கூட பருவத்தில் வருட விடுமுறை காலம் முழுவதும் எனது சொந்த கிராமமான வெளியகரத்தில் தான் பொழுது போகும். பசுமையான நெல்வயல்கள், வாய்க்கால், மாந்தோப்பு, மரத்தடி ஊஞ்சல், மலைக்கோயில், தாமரைக் குளம், ஆற்றங்கரை என இயற்கையோடு வாழ்ந்திருந்தேன். இவற்றையெல்லாம் விட அந்த நாட்களில் என்னுடைய தாத்தாவுடன் நான் சேர்ந்திருந்த காலம் அற்புதமானது. உறவுமுறைகளில் தாத்தாபேரன் நட்பு தனித்துவமானது. எந்த விஷயம் எடுத்தாலும் தொணதொணவென்று கேள்விகள் கேட்கும் இளம்வயது துருதுருப்பும், எல்லாக் கேள்விகளுக்கும் ஆர்வமாக, விளக்கமாக பதிலளிக்கும் முதுமையின் அன்புபோடிணைந்த அனுபவமும் இயல்பாகவே ஒன்று சேர்ந்துவிடும். எனக்கு அது முழுமையாக வாய்த்திருந்தது.  

எங்கள் வீட்டுக்கு எதிரே உள்ள புளியந்தோப்பில் கயிற்றுக் கட்டிலைப் போட்டுக்கொண்டு, தாத்தாவுக்கு அணுக்கமாக அவரது தளர்ந்த தோளில் தலை வைத்து, புராண இதிகாச கதைகளை கேட்டுகொண்டே நேரம் கடக்கும். அப்போது எனக்கு அது தான் ரிட்ரீட். பாடபுத்தகங்கள், பரிட்சைகள் என ஒரு வருடம் முழுக்க பள்ளியும் பள்ளி சார்ந்தும் இயங்கி கொண்டிருந்த மாணவனுக்கு எந்த அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றித்திரியும் விடுமுறை காலம் மிகப்பெரிய வரம். ஆனால் இந்த தலைமுறை குழந்தைகளுக்கு இதெல்லாம் கிடைக்கிறதா என அறிய முடியவில்லை. இப்போதெல்லாம் கோடை கால விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கூட சிறப்பு வகுப்புகளும் சிறப்பு பயிற்சிகளும் அவர்களை மார்க்கும் மார்க் சார்ந்ததுமே வாழ்க்கை என்ற புரிதலுக்கு இழுத்துச் சென்றுவிடுகிறது.

சிறுவயதில் எனது தாத்தாவிடம் நான் கற்ற கதைகள், அவர் என்னுடன் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் தான் எனக்குள் புத்தாக்கம், படிக்கும் பழக்கம் போன்றவற்றை ஆழமாக விதைத்தது. ஒரு கோடை நாளில் அவர் சொன்ன குளிகன் கதைஇன்றும் நினைவில் நிழலாடிக்கொண்டிருக்கிறது.  எங்கள் கிராமத்தை சுற்றி அடர்ந்த காடிருந்தது. பேருந்து, பக்கத்து டவுனான பள்ளிப்பட்டு வரை தான் வரும். அங்கிருந்து சுமார் 4 மைல், குஸஸ்தலை ஆற்றை கடந்து, காட்டைக் கடந்து நடைபாதை வழியாக வந்தால் தான் எங்கள் கிராமத்தை அடையமுடியும். அந்த காட்டில் ஒரு வகை கூழாங்கற்கள் இருந்தன. அவை குளிகன் கற்கள் என அழைக்கப்பட்டன. பாதையில் நடந்துவருபவர்கள் அந்த கல்லை மிதித்துவிட்டால் கல்லுக்குள் இருக்கும் குளிகன் பூதம் அவர்களை பிடித்துக்கொள்ளும். பிறகு எவ்வளவு தூரம் நடந்தாலும் திரும்பத் திரும்ப ஒரே பாதை தான் அவர்களுக்கு சுழற்சி போல கிடைக்கும். ஊருக்குள் திரும்பவே முடியாது. அந்த பாதை மதிகெட்டான் பாதைஎனப்பட்டது. நாள் கணக்கில், வாரக்கணக்கில் அவர்கள் தொடர்ந்து அதே பாதையில் தான் நடக்கவேண்டும். மறுபடி, வேறு யாராவது அதே போல மற்றொரு குளிகன் கூழாங்கல்லை மிதித்த பிறகுதான் பழைய நபர் விடுவிக்கப்படுவார். புதியவர் அந்த மாய பாதையில் சிக்கிக்கொள்வார்.

இப்படி எங்கள்கிராமத்தில் பல பேர் சுழற்றி அடிக்கப்பட்டது பற்றி எனது தாத்தா விரிவாக பேசுவார். இந்த கதை எந்த அளவுக்கு உண்மை என்று எனக்குத்தெரியாது. ஆனால் அதை நான் நம்பினேன். கொஞ்சம் பயந்தேன். ஒவ்வொறு முறையும் டவுனில் இறங்கி எங்கள் கிராமத்துக்குசெல்லும் போதும் தரையை பார்த்து எந்த கல்லையும் மிதிக்காமல் செல்வேன். முக்கியமாக தனியாக வெளியே செல்வதை தவிர்த்தேன்.

நமது வளர்ச்சி பணியும் அடர்ந்த காட்டில் செல்லும் நடைபயணம் போன்றது தான். நமது பணி காலத்தின் பாதையில் குளிகன்கற்கள் ஏராளமாக இருக்கின்றன. நமது இலக்கை அடைவதற்குள்ளாகவே எதாவது சில குளிகன் கற்களை மிதித்துவிட்டு, “நிதிமைய - சந்தைச் சூழல் வாழ்க்கைஎனும் மதிகெட்டான் சாலைக்குள் நாம் பிரேவேசித்துவிடுகிறோம். நமது இலட்சியம் மறந்து போய் வருடகணக்கில் பொருளாதாரம் சார்ந்த மாய பாதைக்குள் சுற்றியடிக்கப்படுகிறோம். நமது பணி சார்ந்த உண்மையான இலக்கை அடைய முடியாமல் வேறெதுவோ நமது பணி வெளிப்பாடாக அமைந்துவிடுகிறது. காலம் போன பின், நிதானம் வந்த பிறகு நமது இழப்புகள் குறித்து வருத்தம் கொள்கிறோம். இதனை தவிர்க்க, குறிப்பிட்ட இடைவெளியில் நாம் நமது எண்ணங்களை பணி பயணத்தின் அவ்வப்போது திரும்பிப் பார்க்கவேண்டியுள்ளது. அதனை சுயவிசாரணை செய்துகொள்ள வேண்டியுள்ளது. இது போன்ற ஆற்றுபடுதல் நிகழ்வுகள் அதனை சாத்தியப்படுத்தும்  தகுந்த  கருவியாக அமைந்திருக்கிறது.
இந்த காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்?”
-       அறிவுமதி
ரிட்ரீட் பத்தி லெட்டர் வந்த உடனே எல்லாருக்கும் ஒரு வித பதற்றம் ஏறிக்கொள்கிறது. முக்கியமா ரிட்ரீட் ரிப்போர்ட் எழுதுவது. அதனை இங்லீஷ்ல எழுதனும். அதுவும் 4 ஷீட்டில் மூன்று பக்கம் எழுதுவது என்பது பெரும்பாலான பணியாளர்களுக்கு பெரிய சவாலாக முன்னெழுகிறது. நம்மில் பலபேர் மனிதவள மையத்தில் இருந்து குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து நினைவுறுத்தல்கள் லெட்டரிலோ போனிலோ அல்லது நேரிலோ வந்த பிறகு தான் அறிக்கை எழுதவே ஆரம்பிக்கிறோம். இவ்வாறு அறிக்கை எழுதுவதற்கு பெரும்பாலான பணியாளர்கள் மூன்று வித முறைகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். தமது பணித் திறனாய்வு, ஆண்டாய்வுக்கு எழுதிய அதே அறிக்கையை கொஞ்சம் டிங்கரிங் பாத்து, ரிட்ரீட் ரிப்போர்ட்டாக மாற்றிவிடுவது மிக பிரபலமான முறை. ஆனா, படிக்கும் போது அது அவர்களின் பணி சார்ந்த ஆண்டறிக்கையா அவர்களின் வட்டாரம் குறித்த அறிக்கையா அல்லது ரிட்ரீட் அறிக்கையா என்ற குழப்பம் ஏற்பட்டு விடுகிறது.

வேறு வகையினர் இருக்கிறார்கள். அவர்களுடைய கடந்த வருட அறிக்கையில் வருஷம், ரிட்ரீட் நடக்கும் இடம் போன்றவற்றை மாற்றி அங்கங்கே கொஞ்சம் மானே, தேனே போட்டு அதனை புத்தம்புது அறிக்கையாக தயார் செய்துவிடுவார்கள். முதல் முறை மட்டும் கொஞ்சம் கஷ்டப்பட்டு நாலு அறிக்கைகளை பாத்து, இன்ஸ்பையர் ஆகி எழுதிவிட்டால் போதும். அடுத்த ஐந்து வருஷத்துக்கு பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யவேண்டியதில்லை. மூன்றாவது குரூப் மக்கள் தான் நம்மிடையே அதிகம். வார்த்தைகளை பத்திபத்தியாக விரிவுபடுத்துவதற்கு தயங்குபவர்கள். ரிட்ரீட் எழுதுவதற்கு என்று அனுப்பப்பட்ட ப்ரேம்வொர்க்கின் தலைப்புகளை வரிசைபடுத்திவிட்டு எல்லாத் தலைப்புகள் கீழேயும் புல்லிட்டன் பாயிண்ட்களில் ஒரு வரி இரண்டு வரி எழுதுவார்கள். சின்சியராக எழுதவேண்டும் என்று நினைத்தாலும் கோர்வையாக எழுதுவதற்கு மொழி ஆளுமை இல்லாததால் கஷ்டபடுவார்கள்.

நிச்சயம் எல்லா ரிட்ரீட் அறிக்கைகளும் ஒரேவித டெம்ப்ளேட்டில் இருக்கிறது என்று சொல்வது மிகப்பெரிய பாவம். மொத்தமிருக்கும் 450 அறிக்கைகளில் சுமார் 50 அறிக்கைகளாவது அதி அற்புதமாக, ஆழ்ந்த சிந்தனைச் செறிவுடன் தனித்துவமாக வெளிப்படுகின்றன. எனது ஆதங்கம் எல்லாம் மீதமிருக்கும் பெரும்பான்மையான தட்டைத்தனமான அறிக்கைகள் குறித்தது மட்டுமே. நாம் அனைவருமே அற்புதமான பணியை கள அளவில் செய்துவருகிறோம். நமது சமூகம் பற்றி, மக்களை பற்றி, வளர்ச்சி பணி குறித்து நமக்கென தெளிவான கண்ணோட்டத்தை வைத்துள்ளோம். நாம் ஒவ்வொறுவரும் சக அணியினரை, மக்கள் பணியாளர்களை, மக்கள் தலைவர்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகிறோம். ஊருக்கும் சக பணியாளர்களுக்கும் சொல்வதற்கு நிறைய விஷயங்களை வைத்துள்ளோம். ஆனால் அறிக்கையில் நமது அனுபவங்களை, வாழ்க்கை நுட்பங்களை பதிவு செய்தல் என வரும்போது தடுமாற்றம் ஏற்படுகிறது. சம்பிரதாயத்துக்காக எதையாவது எழுதி ரெண்டு மூன்று பக்கங்களை நிரப்பி மனிதவளத்துறைக்கு கடைசி நாட்களில் அனுப்பினால் போதும் (அப்பத்தான் யாரும் படித்து, எடிட் பண்ண மாட்டார்கள் என்று நம்புவதால்) என்ற மனநிலையில் இயங்குவது தான் பிரச்சனை.

சராசரியாக ஒரு பணியாளர் இந்த ரிட்ரீட் அறிக்கையை எழுத ஒரு முழு வேலை நாளை (8 மணி நேரம்) ஒரு வார கால நீட்சியில் பயன்படுத்திக்கொள்கிறார். மனிதவளத்துறையில் மூன்று பேர் ஏறக்குறைய ஒரு மாதம் முழுக்க அறிக்கைகளை உறுதிசெய்வது, திருத்துவது புத்தகமாக வடிவமைப்பது என ஈடுபடுகிறார்கள். இது தவிர சுமார் 10 பேர் அனைவரது அறிக்கைகளையும் மொழி திருத்தம் செய்வதில் 2 முதல் 5 நாட்கள் வரை செலவிடுகின்றனர். இவை அனைத்துக்கான நாள் ஊதிய செலவினை கணக்கிட்டால் சுமார் 4 இலட்சம் வரும். இது தவிர அறிக்கை வடிவமைப்பு, அச்சிடுதல், அறிக்கைகளுக்கான போக்குவரத்து செலவு என கூடுதலாக 1.5 இலட்சம் செலவாகிறது. மொத்தம் இந்த அறிக்கைகள் உங்கள் கைகளில் வந்து சேர குறைந்தபட்சமாக கணக்கிட்டால் கூட 5.5 இலட்சம் செலவாகிறது. சராசரியாக ஒரு நபருக்கு ரூபாய். 1200 செலவாகிறது (இந்த செலவுகளில் வாய்ப்பிழப்பு செலவுகள் கணக்கில் கொள்ளப்படவில்லை). நம்மைப் போன்ற எளிமையான நிறுவனத்துக்கு இது மிகப்பெரிய தொகை. ஆனாலும் இதன் உள்ளார்ந்த மதிப்பு, வெறும் காகித பண மதிப்பீடை விட மிக அதிகம் என்று நம்புவதால் இதனை அச்சிட்டு ஒவ்வொறுவருக்கும் ஒரு பிரதியை தருவதில் நிறுவனம் தீவிரம் காட்டுகிறது. நம்மில் எத்தனை பேர் அனைத்து அறிக்கைகளையும் ஒருமுறையாவது முழுவதும் படித்துப் பார்த்திருப்போம்?

யாரும் பார்க்காமலேயே வெளிப்பட்டு மறைந்து போகும் அழகான வானவில் போல முழுவதும் படிக்கப்படாமலேயே இந்த அறிக்கைகள் தனது வாழ்வை இழந்துவிடுவது தான் சோகம். கல்வியியலில், “ஒரு புத்தகம் அது வாங்கப்பட்ட முதல் ஒரு வாரத்துக்குள் படிக்கப்படவில்லை என்றால் அது வாழ்நாள் முழுவதும் படிக்கமுடியாமல் போய்விடுகிறதுஎன்று சொல்லப்படுகிறது. அதே போல ரிட்ரீட் காலமான இந்த நான்கு நாட்களில் நாம் படிக்கவில்லை என்றால் இவை இனி நம்மால், நமது வாழ்நாளில் திரும்பி பார்க்கப்படவே போவதில்லை.

நான் எனது முதல் ரிட்ரீட் நிகழ்வின் (2003) போது அனைத்து அறிக்கைகளையும் படித்தேன். பிறகு 2012ல் தான் அடுத்தமுறை ஒருவித சுய கட்டாயத்துக்காக முழுவதும் படித்தேன். தவறு தான். திருத்திக்கொள்ளவேண்டும். இந்த வருடத்தில் இருந்து கட்டாயம் அனைவரது அறிக்கைகளையும் ஒவ்வொறு ஆண்டும் படிக்கவேண்டும் என உறுதி எடுத்துள்ளேன். என்னிடமிருக்கும் மற்றொரு குறை இதை தமிழில் எழுதி வருவது. தமிழில் எழுதும் போது அறிக்கையின் உள்ளடக்கத்துடன் என்னால் உணர்வுபூர்வமாக ஈடுபடமுடிகிறது அதேபோல ஆங்கில அறிக்கைகளை விட தமிழ் அறிக்கைகளை நிறையபேர் படிக்கிறார்கள் என்ற எனது எண்ணமும் தான் காரணம். அடுத்த வருடத்தில் இருந்து ஆங்கிலம் ஒருமுறை, தமிழில் ஒருமுறை என எழுத திட்டமிட்டிருக்கிறேன்.

நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்கப் பயமாக இருக்கிறது;
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.”
-       நகுலன்
நான் ஜானகிராமன். இது எனது 10வது ஆற்றுபடுதல் அறிக்கை. எனது சொந்த ஊர், திருத்தணி. என்னுடைய தந்தை நிலவள வங்கியில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். அம்மாவும் எனது மனைவியும், வீட்டுப் பணிகளை நிர்வகித்து வருகின்றனர். இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. ஒரே தம்பி. அவன் தனியார் வங்கியில் சட்ட அலுவலராக சென்னையில் இருக்கிறான். இந்த சிறிய குடும்பம் எனக்களித்துள்ள அன்பும் சுதந்திரமும், என் மீதான நம்பிக்கையும் அற்புதமானது. அவையே கண்ணுக்கு புலனாகாத இழைகளாக என்னை இணைத்து, என் வாழ்வை இயக்கிவருகிறன.

நான் மருந்தியலில் பட்டப் படிப்பு படித்தேன். அந்த படிப்பை மிகவும் விரும்பித் தான் படித்திருந்தேன். என்னுடைய பட்டப்படிப்புக்குப்பின், பெரிய எதிர்பார்ப்புடன் மருந்துத் துறை சார்ந்த பணிக்கு முயற்சித்த போது, மருந்துத் துறையில் புரையோடிப் போயிருக்கும் கமிஷன், இலஞ்சம், ஊழல் ஆகியவை எனக்குள் அயற்சியை உருவாக்கின. இந்த துறைக்கு மருந்துகள் பற்றி தெரிந்தவர்களை விட, மருத்துவர்களுடன் வியாபாரம் செய்யும் தரகர்களே தேவைப்பட்டார்கள். எனது மனநிலைக்கு அந்த சூழலில் இயங்கமுடியவில்லை. அதனை விட்டு விலகிவந்து, இரண்டு ஆண்டுகள் இந்திய குடிமைப் பணித்தேர்வுகளுக்காக தயார் செய்து கொண்டிருந்தேன். கூடவே பொது நிர்வாக பாடத்தில் முதுநிலை பட்டப்படிப்பையும் முடித்தேன். முறையான வழிகாட்டுதல், எனது சோம்பல், முயற்சிகளில் தொய்வு ஆகியவற்றால் குடிமைப்பணித் தேர்வில் நான் தேர்ச்சிப்பெறவில்லை. ஆனாலும், அதற்கான தயாரிப்புக்காக நான் படித்த, கற்றுக் கொண்ட பல விஷயங்கள், எனக்குள் ஓர் பரவலான அறிவுத்தளத்தை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக இந்திய அரசியலமைப்பு மற்றும் சமுகம் சார்ந்த அறிவு விரிவானது. அதன் நீட்சியாக எனக்கு அறிமுகமான டாடா - தான் அகடமி, தன்னார்வத் துறை பற்றியும் வளர்ச்சிப் பணி பற்றியும் மிகச்சரியான புரிதலை எனக்கு ஏற்படுத்தியது. அகடமி வாழ்க்கை எனது கற்றலின் பயணத்தில் மிக முக்கியமான மைல்கல். எனக்கு கற்றுத்தந்த புலமையாளர்கள், என்னுடன் படித்த சக நண்பர்கள், களப்பயிற்சிகளின் போது சமகால வாழ்வியலை போதித்த எளிய மக்கள், இணையாளர்கள் என வளர்ச்சிக்கான பாடங்கள் பல பரிமாணங்களில் சிறப்பாக அமைந்திருந்தது. வளர்ச்சி பாடங்களைத் தாண்டி, என்னுடைய ஆங்கில மொழி ஆளுகை, பேச்சுத்திறன், கணினி இயக்கும் திறன் ஆகியவற்றின்  மேம்பாட்டில் அகடமி மிகமுக்கிய பங்களிப்பாற்றியுள்ளது.

இதுவரை நமது நிறுவனத்தில் மூன்றுவித பணிபொறுப்புகளில் நான் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பணியில் சேர்ந்தது முதல் மே மாதம் 2008 வரை (4.8 வருடங்கள்) பஞ்சாயத்து திட்டத்தில் வத்தலகுண்டு மற்றும் மத்திய அலுவலகத்தில் பணியாற்றினேன். இந்த காலகட்டம் என்னை நான் கள அளவில் செழுமைபடுத்திக்கொள்ள நாற்றாங்காலாக இருந்தது. பஞ்சாயத்து திட்ட அணி சிறிய அணி. புதிய திட்டம் என்பதால் இதன் பணிகள், அணியினரின் சிந்தனை, கள செயல்பாடு ஆகியவற்றை சார்ந்தே அமைந்திருந்தது. புதிய முயற்சிகளை செய்து பார்க்க நிறைய சுதந்திரமும், அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், மக்கள் அமைப்பினர் என பலவித உறுத்தாளர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. பஞ்சாயத்து அளவில் பல புதிய பரிட்சார்த்த முயற்சிகளை செய்துபார்த்தோம். பஞ்சாயத்து அளவிலான பாராளுமன்றம், பஞ்சாயத்துகளுக்கான ஐந்தாண்டு திட்டங்கள், அரசு பணிகளில் சமூக தணிக்கை முயற்சிகள், பஞ்சாயத்துகள் சுயசார்புடன் அமைய சிறப்பு திட்டங்கள் என பல புதிய சிந்தனைகளை ரசித்து, அதிக ஈடுபாட்டுடன் கள அளவில் செயல்பாடுகளாக உருமாறின. இவை அனைத்தும் நமது நிறுவனத்துக்கு மட்டுமில்லாமல் மொத்த ஊரக வளர்ச்சித் துறைக்குமே பெரிய அறிவுதளமாக விளங்கியது. மேலும் உள்ளாட்சித்துறையில் அய்யா.திரு.வள்ளிநாயகம் அவர்களின் வயதை மீறிய அதிதீவிர ஈடுபாடும், உழைப்பும்   பஞ்சாயத்து சட்டங்கள், அரசாங்க நிர்வாக நடைமுறைகள் ஆகியவற்றை கற்றுக்கொள்ள உதவியது. பஞ்சாயத்து திட்டம் சார்ந்த எனது பணி மற்றும் செயல்பாட்டில் எனது மெண்டார், திரு.சிங்கராயரின் வழிகாட்டுதலும், ஒருங்கிணைப்பும் மிகமுக்கியமான பங்கு வகித்தது. தமது நீண்ட அனுபவத்தால் சமூக மனவியலை நன்கு உள்வாங்கியிருந்த அவரது ஆலோசனைகளும் செயல்படும் முறைகளும் என்னை மேம்படுத்திக்கொள்வதில் தவிர்க்கமுடியாத அங்கம் வகித்தன.

புதியதாக பணியில் சேரும் பணியாளருக்கு முதல் மூன்று ஆண்டுகள் நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் அனுபவமும், குறிப்பாக அவரது வழிகாட்டியுடனான பழக்கமும் புதிய பணியாளரை வளர்ச்சிப்பணியில் நிலைக்கச்செய்வதில் மிகப்பெரிய பங்காற்றுகின்றன என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்த காலகட்டம் அது.

2008 ஜீன் மாதத்தில் எனது சொந்த ஊருக்கு (திருத்தணி) பணியிட மாற்றம் கேட்டுப் பெற்று சென்றேன். அங்கு 2013 டிசம்பர் வரை காஞ்சி மண்டலத்தில் தானம் அறக்கட்டளைப் பணிகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தேன். அந்த ஐந்து ஆண்டுகள் எனது வாழ்வில் மறக்கமுடியாத காலகட்டம். குறிப்பாக துரை, சத்தியா, பாலா, சதிஷ், சக்திவேல், ஏகாம்பரம், தேவா, சரவணன், ஷ்யாம், மோகன் என காஞ்சி மண்டல பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றிய காலம் பசுமையானது.

களஞ்சிய மற்றும் வயலக திட்டங்களின் வீச்சும், அந்த அமைப்புகள் உருவாக்கிய மக்கள் தலைவர்கள், மக்கள் பணியாளர்கள் எனக்கு மிகப்பெரிய ஈர்ப்பு சக்தியாக இருந்தனர். எங்களின் காஞ்சி மண்டல அணி தனிச்சிறப்பு கொண்டிருந்தது. அனைவருடனும் இணைந்து பணியாற்றியது எனது எல்லா நாட்களிலும் உற்சாகத்தை தந்தது. இந்த காலகட்டத்தில் களஞ்சிய திட்டம் குறித்தும், மக்கள் அமைப்புகள் அதன் நிலைத்தன்மை குறித்தும் நல்ல படிப்பினை எனது கள வழிகாட்டி திருமதி.பத்மாவதி அவர்களிடம் இருந்து கிடைத்தது. இவர் தானம் அறக்கட்டளையில் எனது இரண்டாவது ஆசிரியர்.

காஞ்சி மண்டலத்தில் பெரிய பெரிய திட்டங்கள் எதையும் நாங்கள் செய்ததில்லை. ஆனால் அவற்றுக்கெல்லாம் அடிப்படையாக, நமது மக்கள் நிறுவனங்களின் குறுநிதி திட்ட அடிப்படைகளை, சுயசார்புக்கும் நிறுவன நிலைப்புத் தன்மைக்கும் தேவையான நிதி கையாளுகையை உறுதிசெய்வதில் அதிக கவனம் செலுத்தினோம். மக்களிடையே கடன், சேமிப்பு மற்றும் காப்பீடு சார்ந்த திட்டங்களை விரிவுபடுத்துவதிலும் அதன் பின்னணியை புரிந்துகொள்ளவைப்பதிலும் நிறைய முயற்சிகள் எடுத்தோம். நிறைய நேரம் திட்ட அலுவலகம் எடுக்கும் முடிவுகளை கள அணியினர் அவர்கள் மீது விதிக்கும் கட்டுப்பாடாக புரிந்து கொள்வார்கள். துவக்கத்தில் நானும் அது போல எண்ணியது உண்டு. ஆனால் திட்டஅலுவலகம் ஏன் அது போன்ற முடிவுகளை எடுக்கிறது, அதன் பின்னணி குறித்து அறிந்து கொள்ளும் போது அதன் நியாயம் புரியவரும். எனது அணியிடம் ஒரு விஷயத்தை செய் என்று அறிவுருத்துவதை விட, அந்த விஷயத்தின் முக்கியத்துவம், தேவை ஆகியவற்றை விளக்கி சொல்வதன் மூலம் தானாக அணியினரும், மக்களும் நாம் எதிர்பார்ப்பதை விட அதிக அளவில் செயல்பட்டார்கள், இதனால் செய்யும் பணிகளைகடமைக்காக செய்யாமல் ஒருவித உரிமைத்தன்மையுடன் செய்ததை உணரமுடிந்தது.

சென்னையை சுற்றி 100 கிமீ ஆரத்தில் நகரமயமாதல் மிக வேகமாக நிகழ்ந்துவருகிறது. அதன் பாதிப்பு நமது ஏரி சார்ந்த பணிகளிலும் பிரதிபளிக்கிறது. உள்ளுர்சூழலுக்கு தகுந்த வகையில் நமது திட்டங்களை சமப்படுத்திக்கொள்வதில் கவனம் செலுத்தவேண்டும். அதே போல நமது காஞ்சி மண்டலத்தின் களஞ்சிய வயலக தலைவர்கள் மிகச்சிறப்பான ஈடுபாடும் புரிதல் உடையவர்கள். ஆனால் அவர்களது பணி வட்டார அளவில் மட்டுமே சுருங்கியுள்ளது. அவர்களின் பணி வீச்சை இயக்க அளவில் விரிவுபடுத்துவது சவாலானது அதே சமயம் மிகத் தேவையானது.

Saha Nau-Avatu; Saha Nau Bhunaktu; Saha Viiryam Karavaavahai; Tejasvi Nau-Adhiitam-Astu Maa Vidvissaavahai” என்று தைத்ரேய உபநிஷதத்தில் சொல்லப்பட்டிருக்கும் அமைதி குறித்த செய்யுள், அணியாக செயல்படுவது குறித்த அடிப்படை விதியாகவே எனக்கு தோன்றும். இதுவும் சிறிய வயதில் என்னுடைய தாத்தா கற்றுக்கொடுத்த மந்திரம் தான். தினசரி பூஜைகளின் போது இதன் அர்த்தம் அறியாமலேயே சொல்லிவந்திருக்கிறேன். பிறகு அகடமியில் படிக்கும் போது நாள்தோறும் காலைநேர பிரார்த்தனையில் இதை நினைவுகூர்ந்தோம். எங்கள் நண்பன் கிரண் இந்த மந்திரத்தை மிகவும் ஆழமாக, உணர்ந்து பாடுவான். அவனிடம் இருந்துதான் இதில் பொதிந்திருக்கும் அர்த்தத்தை அறிந்துகொண்டேன். ஆசிரியர், மாணவருக்கிடையே எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை. இருவரும் இணைந்து தம்மை சம அளவில் மேம்படுத்திக்கொள்ளவும், போட்டியில்லாமல் உண்மையை அறிந்து சமபலமிக்கவர்களாகவும் இருக்க கடவுளை பிரார்த்திக்கும் இந்த மந்திரத்தின் பொருள் எனக்குள் மிக ஆழமாக வேரூன்றியது. பிறகு பணிதளத்தில் இந்த வேர், பல கிளைகள் விட்டு பெரிய மரமாகவும் மாறியது.

நான் இதன் வீரியத்தை உணர்ந்து முழுமையாக பயன்படுத்தியிருக்கிறேன் சொல்ல முடியாவிட்டாலும், கூடுமானவரை எனது அணி சார்ந்த செயல்பாடுகளில் இந்த மந்திரம் சொல்லும் கருத்தை பின்பற்றவேண்டும் என விரும்பி செயல்பட்டிருக்கிறேன். இதைச் சார்ந்து நான் என்னை சோதித்துக்கொள்ளும் தளமாக காஞ்சி மண்டல அணி அமைந்திருந்தது. மிகவும் ஆக்கப்பூர்வமான காஞ்சி மண்டல அணியினர், மக்கள் பணியாளர்கள், நமது தலைவர்கள் ஆகியோரை விட்டு பிரியவே மனமில்லாமல் மற்றொரு மாற்றத்துக்கு தயாரானேன்.

சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் இருந்து எனது பணி சூழலில் மூன்றாவது இன்னிங்ஸ் ஆரம்பித்துள்ளது. களஞ்சிய வளர்ச்சி நிதி நிறுவனத்தில் பணி. மிகப்பெரிய பொறுப்பு. கடந்த நான்கு மாதங்களாக இந்த நிறுவனத்தை அறிந்துகொள்வதிலும், சக அணியினரை புரிந்து கொள்வதிலும் சென்றுள்ளது. இனிதான் நான் செயல்பட ஆரம்பிக்கவேண்டும். களஞ்சிய வளர்ச்சி நிதி நிறுவன அணியினருடன் பணிபுரிவதில் நிச்சயம் எனக்கு பெறுமை தான். இந்த அணி உறுப்பினர்கள் அனைவரும் தமது பொறுப்பை நன்கு உணர்ந்து, உள்வாங்கி ஈடுபாட்டுடன் செய்துவருபவர்கள். சிறிய அணி என்றாலும் செயல்பாட்டளவில் சிறப்பாக இயங்கிவருகிறது பெரிய மகிழ்ச்சி. வங்கித்துறையில் ஆழ்ந்த அனுபவமும், மிகச் சிறந்த மனிதநேயமும் கொண்ட திரு.ஜோசப் ராஜ் அவர்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதேபோல நிதி சார்ந்த பணிகளில் திரு.சீனிவாசன், திரு,விஜயகுமார் ஆகியோரிடம் இருந்தும் மற்ற அணி உறுப்பினர்களிடம் இருந்தும் நான் கற்றுக்கொள்வதற்கு நிறைய உள்ளது.

துறை அளவில் களஞ்சிய வளர்ச்சி நிதி நிறுவனத்துக்கு மிகப்பெரிய வாய்ப்புகளும், சவால்களும் காத்திருப்பதை நன்கு உணரமுடிகிறது. கவநிநி தனது செயல்பாட்டில் அடுத்த கட்டத்துக்கு செல்லவேண்டிய காலகட்டம். அதனை உறுதிசெய்வதற்கு என்னை நன்கு தயார்படுத்திக் கொள்ளவேண்டும், செயல்படவேண்டும். சீன மொழியில்க்ரைசிஸ்என்ற வார்த்தையை இரண்டு படங்களாக சித்தரித்திருப்பார்கள். ஒரு படம் சவாலை குறிக்கும் மற்றொரு படம் வாய்ப்புகளை குறிக்கும். சவால்களை வாய்ப்புகளாக அணுகும் போது தான் சாதனைகள் நிகழ்கின்றன. உற்சாகத்துடன், நேர்முக சிந்தனையுடன் இந்த ஆண்டை எனது அணியினருடன் துவங்கியிருக்கிறோம். நல் ஊழ் எம்மை காத்து, வழிநடத்தும் எனும் நம்பிக்கையுடன்.

நேற்று தான் பணியில் சேர்ந்தது போல் இருக்கிறது. அதற்குள் 11 வருடங்கள் ஓடிப்போய்விட்டது. இந்த ஆண்டுடன் தானம் அறக்கட்டளையுடனான எனது தொடர்பு அகடமி வாழ்க்கையையும் சேர்த்து 13 ஆண்டுகளைத் தாண்டப்போகிறது. என்னுடைய 23வது வயதில் உள்ளே வந்த நான் என் வாழ்க்கையின் மிக முக்கிய 13 ஆண்டுகளை இங்கு கழித்துள்ளேன். இடையில் இரண்டு முறை நிறுவனத்தை விட்டு சில தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி, வெளியேறிவிட முயற்சித்துள்ளேன். வாழ்க்கையின் சில தருணங்கள் மிகுந்த அழுத்தம் கொண்டவை. நமது இலட்சியம், விருப்பங்கள் என அனைத்தையும் புரட்டிப்போடுபவை. நம்முடன் படித்த நண்பர்கள் அவர்கள் வாழ்க்கையில் நிலைபெறும் போது நம்மை அவர்களுடன் ஒப்புமைப்படுத்திக் கொள்ள தோன்றும் அல்லது நமது குடும்பத்தினரால் இந்த ஒப்புமை படுத்தப்படுதல் நிகழும். அடுத்து திருமணத்துக்கு பிறகு மனைவி, அவர்களின் குடும்பம் நம் மீது ஏற்படுத்தும் எதிர்பார்ப்பு, அவை சார்ந்த குடும்ப இயக்கம். இந்த இரண்டு அழுத்தம் மிகுந்த தருணங்களை நான் சந்தித்தேன். இதனை நடுநிலையுடன் கையாண்டு சுயத்தை இழக்காமல் வைத்திருப்பது வலிமிகுந்தது. என் முடிவு இதுதான், நான் இப்படித்தான் இருப்பேன் என எனது நிலைப்பாட்டை குடும்பத்தினர் மீது திணிக்காமல், எனது நிலைப்பாட்டில் அவர்களையும் இணைத்து, அரவணைத்து செல்வதற்கு நீண்டகால அவகாசமும் அசாத்திய பொறுமையும் தொடர்ந்த முயற்சிகளும் தேவைப்படுகிறது.

அதுபோன்ற இக்கட்டான காலகட்டங்களில் நமது நிறுவன செயல் இயக்குனர் திரு.வாசிமலை அவர்களள் எனது நீண்டகால பணித் திட்டம் குறித்த வழிகாட்டுதல், என் மீதான அக்கறை ஆகியவை என்னை இந்த நிறுவனத்துடன் இறுக்கமாக பிணைத்து வைத்துள்ளது. நட்சத்திரங்களின் ஒளியை வைத்து திக்குத் தெரியாத சிறுபடகின் கடல் பயணம் போல அவரது அனுபவங்களும், ஈடுபாடும் எனக்கு எப்போதுமே வழிகாட்டி போல இருந்துவருகிறது.

இங்கு பணிபுரியும் சக நண்பர்களும் தியாகமனப்பான்மையுடன் தீவிர பணிகளை செய்துவரும் பணியாளர்களும், நான் செயல்படுவதற்கான சக்தியை எனக்கு அளித்துவருகிறார்கள் என்பதை மறுக்கமுடியாது.

யானையைக்கூட
அடிக்கடி பார்க்க முடிகிறது
மாதக்கணக்காயிற்று
மண்புழுவைப் பார்த்து…”
-       வண்ணதாசன்
நண்பர் சுரேஷ்கண்ணன் ஒரு முறை, ஜல்லிக்கட்டு முடிந்த பிறகு அடுத்த நாள் இத்தனை வீரர்கள் காயப்பட்டுள்ளார்கள் என்று பேப்பரில் தவறாமல் செய்தி வருகிறதே, எத்தனை மாடுகள் காயப்பட்டிருக்கின்றன என்று எப்போதாவது சொல்லியிருக்கிறார்களா? என்று கேட்டார். இப்படித் தான் இருக்கிறது மனிதனின் ஜீவகாருண்யம். உலகத்தின் மிகப்பெரும் அழிவு சக்தி மனிதன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனக்காக மொத்த உலகையும் சந்தைப்பொருளாக மாற்றும் வித்தை தெரிந்தவன். அரிய காண்டாமிருகத்தின் கொம்பில் இருந்து பறக்கும் பறவையில் இறக்கை வரை அனைத்துக்கும் ஓர் விலை வைக்கமுடிந்த மனிதனால் காலருகே நசுங்கிச் சாகும் சின்னஞ்சிறு எறும்பின் உயிர்மதிப்பைக் கூட எந்த காலத்திலும் அளவிடும் ஞானமோ, சக்தியோ எந்தகாலத்திலும் பெற்றிருக்கவில்லை என்பது பெரிய முரண்நகை.

புவியின் உயிர் மற்றும் இயற்கைவள சமநிலையை சீரழித்ததின் முழு பங்கு மனிதனுக்கு மட்டுமே உள்ளது. இதுவரை உலகில் 1.75 மில்லியன் தாவர மற்றும் விலங்கின வகைகள் மனிதனால் கண்டறியப்பட்டு வரையறுக்கப்பட்டுள்ளன. இதனைத்தாண்டி 10 மில்லியனுக்கும் மேற்பட்ட தாவர மற்றும் விலங்கின வகைகள் அறியப்படாமல் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் 40%மும் ஏழைமக்களின் வாழ்வாதாரத்தில் 90%மும் தாவரங்களையும் பிற விலங்குகளையும் நம்பியுள்ளது. மொத்தம் 16,119 வகை உயிரினங்கள் நமது தலைமுறையிலேயே அழிவை சந்திக்கும் எனவும் குறிப்பிடுகின்றனர். உலகில் இருக்கும் உயிரினங்களில் 30% 2050க்குள் நமது உலகைவிட்டு மறைந்து, துடைத்தெடுக்கப்பட்டுவிடுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் தான் நமது நிறுவனம் உயிர் பன்மய சூழலை உறுதி செய்வதை மையநோக்கக் கருத்தாக எடுத்துக்கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகள் அவை சார்ந்த செயல்களை செய்துவருகிறது. பல்லுயிர் பாதுகாப்பின் அடிப்படையே, உலகில் உள்ள எல்லா உயிரினத்துக்கும் தாம் உயிர்வாழ்வதற்கான உரிமை மனிதனுக்கிருப்பது போலவே முழுஅளவில் இருப்பதை மனிதன் உணர்ந்து கொள்ளவும் அதனைச் சார்ந்து பல்வகை சிறு உயிரினங்கள், தாவர வகைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதுமாகும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவன் வாக்கு உலகின் எல்லா உயிரினங்களையும் சமமாகவே பாவிக்கச் சொல்கிறது. இவை சார்ந்த சமூக விழிப்புணர்வை பெரிய அளவில் ஏற்படுத்தவேண்டியது நம் தலைமுறையின் கட்டாயம். எனது தாத்தா காலத்தில் எங்கள் சொந்த ஊர் ஆற்றில் தண்ணீர் நிறைய இருந்தது. எனது தந்தையின் காலத்தில் ஆற்று தண்ணீர் வற்றிப்போய், மணல் நிறைந்திருந்தது. எனது காலத்தில் மணலும் வற்றிப்போய் வெறும் பாறைகளும் கட்டாந்தரையுமாக ஆறு இருக்கிறது. அடுத்து எனது மகள் தலைமுறையில் அந்த ஆறு இருந்த இடத்தில் பல அடுக்கு மாடிகள் தான் இருக்கப்போகிறது.

இயற்கை வளங்களின் சுரண்டலை ஆழ்ந்து கவனிக்கும் போது, இதில் பாதிப்புக்குள்ளாவது ஏழைமக்கள் தான் எனத் தெரியவரும். ஏழை மக்களுக்கு உரிமையான வளங்களும், வாய்ப்புகளும் அவர்களுக்குத் தெரியாமலேயே சமூகத்தில் பண, அதிகார பலம் மிக்கவர்களால் சுரண்டப்படுகிறது. பணக்கார நாடுகள் ஏழ்மையாக்கப்பட்ட நாடுகளின் வளங்களையும் சேர்த்தே சுரண்டிவருகின்றன. இதற்குகார்பன் ட்ரேட்”, “க்ரீன் மார்க்கட்என்றெல்லாம் பேன்சியான பெயரை வைத்து ஏமாற்றிவருகின்றன. இதன் தாக்கம் அடித்தள கிராம அளவிலும் மிகப்பெரிய அளவில் பிரதிபளிக்கிறது. எடுத்துக்காட்டாக கிராமங்களில் பசும்பாலை வெளிச் சந்தைக்கு விற்றுவிட்டு, பாக்கெட் பாலை வாங்கி பயன்படுத்தும் மடத்தனம் அதிகரித்துவருகிறது. முகச்சரும பராமரிப்புக்கு மஞ்சளும் சந்தனமும் விற்றுக் கொண்டிருந்த கிராம பெட்டிக்கடைகளில் இன்று பேர் அன்ட் லவ்லி பெரிய அளவில் விற்றுக்கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான சருமம் என்ற கருத்து மறைந்து போய் வெண்மையான சருமமே சிறந்தது என்ற மகாஅபத்தமான / ஆபத்தான புரிதலை கார்பரேட் நிறுவனங்கள் மக்களிடையே விதைத்து வருகின்றன. இது எளிய மக்களில் வாழ்வியலில் எல்லா நிலைகளிலும் பிரதிபளித்துவருகிறது.

நமது களப்பணிகள் இதன் போக்கை ஆய்வு செய்வதிலும், தடுத்து நிறுத்துவதிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நீடித்த, வளங்குன்றா வளங்களை ஏற்படுத்துவது குறித்த அக்கறையும் போதுமான செயல்பாடுகளும் விரிந்து பரவவேண்டும். இவ்வகை வளங்குன்றா வளங்களில் ஏழை எளிய மக்களுக்குறிய உரிமைகளை மீட்டெடுக்கவேண்டும். நமது முந்தைய கள அனுபவங்கள் இதனை பல இடங்களில் உள்ளுர் அளவில் சாத்தியமாக்கியிருக்கின்றன. இந்த சாத்தியங்கள் பரவலாக ஏற்பட இன்னும் தீவிரமாக நமது மக்கள் நிறுவனங்களை இயலப்படுத்தவேண்டும்.

அர்த்தங்களின் சந்தையில்
நாம் முகவரிகளைத்
தொலைத்துக் கொண்டோம்
-       அப்துல் ரகுமான்
அனைத்தும் ஏற்கனவே பலமுறை சொல்லப்பட்டுவிட்டன. ஆனால் யாரும் அதனை கவனிக்காததால் மீண்டும் நாம் முதலில் இருந்தே எப்போதும் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.” இந்திய நீதிமுறை மறுசீரமைப்புக்கான நீதிபதி.மலிமத் கமிட்டி அறிக்கை இப்படித்தான் ஆரம்பிக்கிறது. தூக்கம் வராத பின்னிரவுகளில் டீவி தான் எனக்கு மிகச்சிறந்த துணை. சில நாட்களுக்கு முன் அதுபோன்ற இரவில் தூக்கம் தடைபட்டது. மனதுக்குள் ஏதோ இனம்புரியாத பாரம். டீவி பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு சேனலில் ஆண்டவன் கட்டளை படத்திலிருந்துஆறு மனமே ஆறுபாடல் ஓடிக்கொண்டிருந்தது. “உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்; நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்…” என்ற பாடலின் வரிகள் மனதுக்கு மிகப்பெரிய இதத்தை தந்தது. அன்று இரவு முழுவதும் இந்த பாடலே திரும்பத்திரும்ப ஓடிக்கொண்டிருந்தது. கண்ணதாசன் எவ்வளவு எளிமையாக, போகிறபோக்கில் உன்னத மனிதவாழ்வின் அடிப்படைகளை சொல்லியிருக்கிறார் என வியந்தேன். இதையே தான் கணியன் பூங்குன்றனார் 2000 வருஷத்துக்கு முன்னாடி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடிவைத்திருக்கிறார். ஆயிரக்கணக்கான வருடங்களாக, காலத்தின் பாதை எங்கும் நல்வழி எது என்பது திரும்பத்திரும்ப வலியுருத்தப்பட்டு தான் வந்திருக்கிறது. ஆனாலும் மனிதன் அரத்துக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அறத்துக்கு தந்ததேயில்லை.
 
பல வருடங்களாக, எனக்குள் குழப்பும் கேள்விகளில் மிக பெரியது, "மனிதர்கள் எது சரி எது தவறு என்று தெரிந்த பின்பும், அறமும் தர்மமும் தான் உயர்ந்து என்பதை நன்கு அறிந்த பின்பும், பணமும் புகழும் சந்தோஷத்துடன் தொடர்பில்லாதது என்று அறிந்த பின்பும், ஏன் அறத்தை பின்பற்ற தயங்குகிறார்கள்? ஏன் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தவறு செய்ய மனம் தூண்டப்படுகிறது?" என்பது தான்.

உபநிஷத்தில்எது தேவையோ அதுவே அறம்என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் எது தேவை என்பதை தீர்மானிப்பது யார்? மனிதன் மிகப்பெரிய தந்திரசாலி. முன்பெல்லாம் தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்று சொல்லுவார்கள். ஆனால் இப்போது இது கண்டுபிடிப்பே தேவையின் தாய் என்று மாறிவிட்டிருக்கிறது. நமது வாழ்க்கைக்கு தேவைப்படாத ஒரு விஷயத்தை கண்டுபிடித்துவிட்டு, அதனை மார்க்கெட்டிங் திறமையால் கூவி கூவி விளம்பரப்படுத்தி ஒரு வித தேவை மயக்கத்தை உருவாக்கிவிடுகிறார்கள். டியோட்ரன்ட்கள், முகம் பொலிவுபெற களிம்புகள், கோக் பெப்சி பானங்கள், லேஸ் வகை சிப்ஸ்கள் என பல தேவையே இல்லாத பொருட்கள் வியாபார தந்திரங்களின் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்றுத் தீர்க்கிறது. இவைகள் இயங்குவதில் எந்த அடிப்படை அறமும் இல்லை. உணவை விற்றால் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் உணவு போன்ற பொருட்களை நாகரீகத்தின் அடையாளமாக முன் நிறுத்தி விற்பது அநியாயம்.

தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து, மக்களையும் தமது ஊழலில் அதிகாரப்பூர்வமாக பங்கெடுக்கவைத்த சூழல் தானே அதிகமாகிறது? ஒருவன் செய்யும் தவறை, ஊர் முழுக்க செய்ய பழக்கிவிட்டால் அது சமூக பழக்கமாக மாறிவிடுகிறது, பிற்பாடு நிறுவனமயமாகிவிடுகிறது. இந்த போக்கு தான் இப்போது எல்லா இடங்களிலும், எல்லா நிலைகளிலும் திட்டமிட்டு மாற்றப்பட்டு வருகிறது. இங்குதிட்டமிட்டுஎன்ற வார்த்தை மிகமுக்கியமானது.

இந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்யப்போகிறோம், நமது மக்கள் அமைப்புகள் எவ்விதம் தனித்துவத்துடன் இருக்கப்போகின்றன என்பது குறித்து தொடர்ந்த புரிதலும், வலியுருத்தலும் அவசியமாகிறது. மொத்த சூழலே கெட்டிருந்தாலும் அறத்தை பின்பற்ற ஓர் உதாரணமாகவாவது நாம் இருந்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.

எத்தனை கோடி கண்ணீர்
மண் மீது விழுந்திருக்கும்;
அத்தனை வீழ்ந்தபின்னும்
பூமி இன்னும் பூ பூக்கும்!”
-       நா.முத்துகுமார்
கடந்த வருடத்தில் ஒரு நாள், சென்னையில் மின்சார இரயிலில் சென்று கொண்டிருந்தேன். எனது கோச்சுக்குள், இரண்டு விழித்திறன் அற்ற மாற்றுத்திறனாளிகள் ஏறினர். அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக இருக்கவேண்டும். வயது 40களில் இருக்கும். அந்த ஆண், “ஒளிமயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகிறது…” என்று பாசமலர் படத்தின் பாடலை கம்பீரமாக, நன்கு உள்வாங்கி உற்சாகத்துடன் பாடத் துவங்கினார். அதை கேட்டதும் எனது மனம் சற்று விம்மி அதிர்ந்தடங்கியது. ஒளியின் தன்மையை உணரவே முடியாத பார்வை திறனற்றவர் ஒளிமயமான எதிர்காலத்தைஎப்படி அவரது மனதுக்குள் உருவகம் செய்திருப்பார் என்று யோசித்துக்கொண்டேயிருந்தேன்.

ஒளி என்பது நாம் காணும் வெளிச்சம் மட்டுமல்ல. அது உள்ளத்தின் உறுதி, வாழ்வின் மீது நாம் கொண்டிருக்கும் பற்று, நமது வாழ்வோடு தொடர்புடையவர்கள் மீது நாம் வைத்திருக்கும் அன்பு என பல அடுக்குகளில் ஒளியின் தன்மையை புரிந்துகொள்ள முடிந்தது. அதுவே பெருங்காட்சி. அந்த பெருங்காட்சியே நம்பிக்கையாக வடிவெடுத்து நமது வாழ்வை இயக்கிச் செல்கிறது.
கீதையில் கிருஷ்ணர், “yada yada hi dharmasya; glanir bhavati bharata; abhyutthanam adharmasya; tadatmanam srjamy aham” (தர்மம் அழிந்து, எங்கு அதர்மம் அதிகமாகிறதோ அதனை அழிக்க நானே உருவெடுப்பேன்) என்கிறார். கடவுள், தலையில் க்ரீடத்துடன், உடம்பெல்லாம் நகைகள் அணிந்து, நான்கு கைகளில் ஆயுதமேந்தி அநீதியை எதிர்த்து போராட வருவார் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டியதில்லை. “தெய்வம் மனுஷ்ய ரூபேநாஎன்கிறது வேத வாக்கியம். எங்கு அவநம்பிக்கையும் அதர்மமும் அதிகமாகிறதோ அங்கு நல்லுள்ளம் கொண்ட மனிதர்கள் தமது சிந்தனை மற்றும் தீவிர செயலால் அதர்மத்தை குறைத்து சமூகத்தை நேர்வழிப்படுத்தும் சமூகபணியில் மும்முரமாக செயல்படுவார்கள் என்றுதான் புரிந்துகொள்ளவேண்டும். நமது நிறுவனமும் நமது பணியும் அதைச் சார்ந்தே இயங்குகிறது. நாம் ஒவ்வொறுவரும் அதற்காக தகுதியை வளர்த்துக்கொண்டு, இன்னும் வீரியமாக இயங்கமுடிந்தால், சமூகத்தை சீர்படுத்த வேண்டிய பெருங்காட்சியை உணரமுடிந்தால், அதனை களத்தில் செயல்படுத்தமுடிந்தால், நாமே கடவுள்!  
நன்றி.

*****

No comments:

Post a Comment