Wednesday, November 28, 2012

2008: தீராநதி



ஒரு கோடைகாலத்தின் மாலைவேளையில் நானும் ராஜ்குமாரும் பெரியார் பஸ்நிலையம் பக்கத்தில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது சட்டென மழை பிடித்துக்கொண்டது. நல்ல மழை; நாங்கள் ஹோட்டலின் வெளிக்கூரையின் கீழ் நின்றுகொண்டிருந்தோம். அந்த வெளிக்கூரையில் நெருக்கி 20 பேர் நிற்கலாம். நாங்கள் வந்தபோது சுமார் 15 பேர் நின்றுகொண்டிருந்தனர். மழை வலுக்கவே,  மேலும் சில பேர் எங்களுடன் சேர்ந்து கொண்டனர். அப்போது மழைக்கு ஒதுங்க ஒரு கன்றுக்குட்டி கூரைக்குள் நுழையப்பார்த்தது. உடனே எல்லாரும் அந்த கன்றுக்குட்டியை கூரைக்கு வெளியே துரத்தினார்கள். கன்றுக்குட்டி மீண்டும் மீண்டும் உள்ளே வர முயற்சித்தது. நமது மக்களும் அதை விடாமல் துரத்தினார்கள். கொஞ்ச நேரம் மழையில் பொறுத்துப் பார்த்த கன்றுக்குட்டி, பிறகு நனைந்தபடி சென்று விட்டது.

அப்போது சாதாரணமாகத் தெரிந்த இந்த நிகழ்வினை பிறகு யோசித்துப் பார்க்கும் போது, உண்மையில் எனது கருணையின் அளவு என்ன? ஏன் என்னால் ஒரு பார்வையாளனுக்கு மேல் இந்த நிகழ்வில் பங்கெடுக்க முடியவில்லை? மழையில் நனையக்கூடாது என்ற எனது விருப்பத்துக்கும் அந்த கன்றுக்குட்டியின் விருப்பத்துக்கும் என்ன வேறுபாடு? எந்த வகையில் நாம் உயர்ந்தவர்கள்? மனதுக்குள் அடுக்கடுக்காக பல கேள்விகள் ஊர்ந்தன. ஓய்வாக இருக்கும் போது டி.வியில் வரும் வங்கி விளம்பரத்தில் ஒரு யானைக்குட்டி கால்பந்து விளையாடுவதையும், செல்போன் விளம்பரத்தின் நாய்க்குட்டியையும் ரசிக்கும் மனம், யதார்த்தத்தில் எனது சுகநிலைக்கு முன்னுரிமை அளித்தது பற்றி தொடர்பு படுத்தியபோது எனது தன்னூக்கம் கொஞ்சம் மட்டுப்படத்தான் செய்தது.

இது போல, பேருந்தில் பிடித்த இடத்தை சகபயணிக்கு விட்டுத்தர மனம் மறுப்பது, அலுவலகச் சலிப்பை மனைவியிடம் வெளிப்படுத்துவது, எனது முன்னெண்ணத்தின் அடிப்படையில் அணி உறுப்பினர்களின் குணங்களைத் தீர்மானிப்பது, என் மீதான தவறுகளுக்கு எனக்கு நானே விளக்கமளித்துக்கொள்வது என பல்வேறு சந்தர்ப்பங்களில் என்னைப் பற்றி நானே அணிந்துகொண்ட முகமூடிகள் கரைந்து, எனது நடுநிலைப் பற்றி எனக்கு சந்தேகம் ஏற்பட்டதுண்டு. வண்டி நன்றாக ஓட எஞ்சின் மட்டுமல்ல; அவ்வப்போது பிரேக்கும் முக்கியமெனப்படுகிறது. அந்த வகையில், எனது நம்பிக்கைகள், எனது செயல்பாடுகள், நிறுவனத்துக்கும் எனக்குமான உறவு அதன் பயன்கள் என பல கோணங்களில் ஆய்வு செய்து கொள்ள இது போன்ற ஆற்றுப்படுதல் நிகழ்வுகள் உதவுகின்றன. என்னை நானே ஆய்வுக்கு உட்படுத்தும் போது ஓரளவுக்கு என்னை சரிசெய்து கொள்ள முடிகிறது. எஸ்.ரா சொல்வது போல், “எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப்போல, உலகை எனது இருப்பிடத்துக்கு கொண்டு வரும் முயற்சியாகவே” ஆற்றுப்படுதல் நிகழ்வினைக் கருதுகிறேன்.

ஒருமுறை வடக்கே களப்பார்வைக்காக சென்று கொண்டிருந்தபோது, கூட வந்திருந்த நேபாள நண்பருடன் நேபாளத்தின் சமீப அரசியல் மாற்றம், நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள வேற்றுமைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். பேச்சினூடாக அவர், “நேபாளம், இந்தியாவைவிட பெரியது” என்றார். எப்படி என்றபோது, “இந்தியாவில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தை அதிகபட்சம் எவ்வளவு நேரத்தில் சென்றடைவீர்கள்?" என்று கேட்டார். நான், தமிழ்நாட்டிலிருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கோ இமய மலைப்பகுதிக்கோ செல்லும் தூரத்தை மனதில் கொண்டு, “அதிகபட்சம் 4 நாட்கள்” என்றேன். நேபாளத்தில், தனது திட்டம் செயல்படும் கிராமத்தை சென்றடைய அவருக்கு 7 நாட்கள் ஆனதாகக் குறிப்பிட்டு, மலைகளினூடான, சாலைகளற்ற பாதை; நிச்சயமற்ற பயணத்தின் தன்மையை விளக்கியபோதுதான் எனக்கு உண்மை புரியத் தொடங்கியது. பொதுவாக இங்கு 4 மணி நேரத்தில் செல்லக்கூடிய இடத்திற்கு அங்கு ஒரு நாள் ஆகக்கூடிய துன்பத்தினை விவரித்தார். மனித மனம் தூரத்தை கணக்கில் கொண்டு பெரிய தேசம், சிறிய தேசம் என பிரிக்கிறது. தூரத்தைவிட, அதனை அடைய ஆகும் காலம்; அதற்கான போக்குவரத்து வசதிகளை நாம் கவனிக்கத் தவறுவதை உணர்ந்தேன். அந்த வகையில் பார்க்கப்போனால், அமெரிக்கா நம்மை விட சிறிய தேசம். நேபாளம் நம்மைவிட பெரிய தேசம். தொலைவினை அளவிட தூரத்தை விட, காலம் சரியான அளவுகோலாக இருக்க முடியும் எனத்தோன்றியது. இதுபோல், இயந்திரத்தனமான கல்வி முறை எனக்குள் திணித்த நம்பிக்கைகள், கற்பிதங்கள் ஆகியவை அனுபவங்கள் மூலம், மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு புதிய பார்வைகள் உதிக்கும் தருணங்கள் எனக்கு போதிமரமாய் இருந்துள்ளன.

திட்டமிடல் நிகழ்வுக்காக ஒருமுறை கழுகுமலைக்குச் சென்றிருந்தேன். மலையேறி, மேலிருந்து முதன்முதலாக வெட்டுவான் கோவிலைப் பார்த்ததும், மனம் கொஞ்ச நேரம் திகைத்து நின்றது. அதிகம் அறியப்படாமல் எங்கோ கண்காணாத இடத்திலிருக்கும், அந்த அற்புதத்தைப் பார்த்தபோது, நெஞ்சுக்குள் மாமழை பெய்வது போலிருந்தது. மதுரைக்குத் திரும்பிய பின்பும், மூன்று நாட்களுக்கு மனம், ஆளில்லாக் காட்டில் காயும் முழுநிலாவைப்போல கம்பீரமான மௌனத்துடன் நின்றிருந்த அந்தக் கோவிலையே சுற்றிக்கொண்டிருந்தது. கோவிலை வடிவமைத்த யாரோ பெயர் தெரியாத சிற்பியின் கனவும், அது நிறைவேறாமல் பாதியிலேயே நின்றுபோன சோகமும் எனக்குள் வியாபித்தது. வெற்றி பெறாத பல உன்னத முயற்சிகள் அவை வெற்றிபெறவில்லை என்ற ஒரே காரணத்துக்காக உலகின் கவனத்திலிருந்து நிராகரிக்கப்படும் தருணங்கள் வலிநிறைந்தவை. மனிதன் அங்கீகாரத்துக்கு ஏங்கும் மிருகம். சமூகத்தின் நிராகரிப்புக்கு ஆளாகும் மனிதனின் நல்ல பண்புகள் வெளிப்படாமலேயே கரைந்துவிடுகின்றன. நமது பணிகளில் நாம் எப்போதும் தனியாளாக எதையும் சாதிப்பதில்லை. எல்லாம் கூட்டு முயற்சியின் வெளிப்பாடு தான். வெற்றி பெற்ற செயல்களில் இயல்பாகவே அங்கீகாரம் தாமாக வந்துவிடுகிறது. தோல்விபெற்ற பல பணிகளிலும் தீவிரமாய் உழைத்தவர்களின் வியர்வை கரைந்திருப்பதை நாம் கவனிக்கத் தவறுகிறோம். உண்மையில், தோல்வி பெறும் போது அல்லது சிக்கலில் இருக்கும் போது தான் நமக்கு ஆறுதல் தேவைப்படுகிறது. வெட்டுவான் கோவில் எனக்குள் செதுக்கிய இந்த செய்தி எனக்குள் மூடியிருந்த பல ஜன்னல்களை திறந்து வைத்தது.

“வாடிக்கையாளர்கள் தங்கள் உடமைகளை பாதுகாத்துக்கொள்ளவும், தவறினால் நிர்வாகம் பொறுப்பல்ல” என்ற வாசகத்தை பெரும்பாலான உணவகங்களில் காணும் போது, நாம் எவ்வளவு பாதுகாப்பற்ற சமுதாயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என உணரமுடிகிறது. அதைவிட, இதை சகித்துக்கொண்டிருக்கும் சக மனிதர்களையும், சேவைதரும் நிறுவனங்கள் தமது கடமையை இது போன்ற போர்டு வைப்பதுடன் நிறுத்திக்கொள்ளும் கையாலாகாதத்தனத்தையும் காணும் போது கோபம் வருகிறது. காண்பவர்களையெல்லாம் குற்றவாளிகளாகச் சந்தேகிக்க வாய்ப்பேற்படுத்திய இதே சமூகத்தில்தான், நாம் மாற்றுப் பண்புகளுடன் அமைந்த; நீதிசார்ந்த சமூகத்தைக் கட்டமைக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இதில் நாம் வெற்றி பெறுகிறோமா இல்லையா என்பதைவிட இம்முயற்சியில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதே மிகப்பெரிய சாதனை என எண்ணத்தோன்றுகிறது.

சில சமயங்களில் நல்ல ஆங்கில வார்த்தைக்குப் பொருத்தமான தமிழ் வார்த்தை கிடைக்காது. ரிட்றிட் என்ற  வார்த்தைக்குப் பொறுத்தமான தமிழ் வார்த்தை கிடைக்காமல் கடைசியில் ஆற்றுபடுதல் என்ற வார்த்தையை அறிந்தேன். அதேபோல் மென்டரிங் எனும் வார்த்தையை தமிழ்ப்படுத்த முடியாமல் வழிகாட்டுநர், குரு-சீடர் முறை போன்ற தோராயமாய் அதே பொருளைத்தரும் வார்த்தைகளை பயன்படுத்தவேண்டியுள்ளது. மிகப்பொருத்தமான மாற்று வார்த்தை கிடைக்காதவரை அதே ஆங்கில வார்த்தைகளை தமிழுக்கு தத்தெடுத்துக்கொள்வது தவறில்லை. மென்டரிங் மிகச்சிறந்த வார்த்தை மட்டுமல்ல, அது ஒரு தத்துவம்; தொடர்செயல். சமீபகாலமாக, நமது நிறுவனத்தில் மென்டரிங் விரிவாக பயன்படுத்தப்படுகிறது. நமது செயல்முறைகளிலும் அது பிரதிபளிக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு தாய், தனது குழந்தைக்கு சாப்பிட, நடக்க, பேச, எழுத சொல்லிக்கொடுத்து வாழ்க்கையை இயல்பாய் எதிர்கொள்ளத் தேவையான திறனை விதைக்கும் செயல்முறையை, நமது பணிச்சூழலில் மூத்தப்பணியாளர் இளம் பணியாளருக்கு ஏற்படுத்தித் தருவதே மென்டரிங் எனலாம். ஒரு குருவின் கடமை சீடருக்கு சொல்லித்தருவது இல்லை, சீடர் கற்றலுக்கான சூழலை ஏற்படுத்துவது என்ற தத்துவம் மென்டரிங்குக்கும் மிகப்பொருத்தம். அன்பே சிவம் படத்தில் கமல், மாதவன் மீது தனது கருத்தை திணிக்காமல், அவர் போக்கில் தன்வயப்படுத்தி, சகமனிதர்கள் மீதான பெருங்கருணையை மாதவனிடம் உண்டாக்குவது மென்டரிங் பற்றிய நல்ல பதிவு. “நான் ஒரு எறும்பைக் கொன்றேன், எனது மூன்று குழந்தைகள் அதை அமைதியாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்ற ஜென் கவிதையை படித்தபோது, எனக்குள் சிலிர்த்தது. சூழலின் எல்லாப் பக்கத்திலும் நம்மால் காணமுடியாத கண்கள் இருக்கின்றன. அறியாமல் நான் செய்யும் வன்முறையை, தவறை சுற்றிலும் பல கண்கள் பார்த்துக்கொண்டு தானே இருக்கின்றன. நான் என்னை ஒழுக்கப்படுத்திக்கொள்ளாமல் மென்டரிங் முறையில் நேர்மையாக பங்கெடுக்கமுடியாது என்றே தோன்றியது.

எனது மென்டாராக இருக்கும் திரு.சிங்கராயர் அவர்கள், என்னை கடந்த ஆறு ஆண்டுகளாக வார்த்தெடுக்கும் முறை மிக இயல்பாக சுவாசத்தைப் போல தன்னிச்சையுடன் நடந்து வருகிறது. அவர் என்னை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி செய்யவேண்டும் என்று விளக்குபவர் இல்லை; என்னை சுதந்திரமாகச் செயல்படவைத்து அதிலிருந்து என்னையும் எனது செயலையும் மேம்படுத்துவார். இந்த அணுகுமுறை எனக்கு மிக நெருக்கமாக இருந்துள்ளது. அவரது ஆளுமை, பணி செய்யும் முறை, முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை நான் பார்த்து, உணர்ந்து சந்தேகம் ஏற்படும் போது அவரிடம் கேட்டுத் தெளிந்து கொண்டிருக்கிறேன். மற்ற எல்லாவற்றையும் விட மென்டார்-மென்டீ இருவருக்கிடையிலான பரஸ்பரநம்பிக்கையே தொப்புள்கொடியாய் மென்டரிங்கை வளர்ப்பதாகப்படுகிறது. அந்த வகையில் நான் ஆசிர்வதிக்கப்பட்டதாகவே கருதுகிறேன். நிறுவனத்தின் பணிப்பொறுப்பின் படி, பஞ்சாயத்துத்திட்டத்தின் திட்டஇணையாளர்கள் செந்தில், விஸ்வா, கணேசன் ஆகியோருக்கு நான் மென்டாராக இருக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இவர்கள் மூவரும் நல்ல ஆர்வம் மிக்கவர்கள், எங்கள் பணி நிலைகளைத் தாண்டி எங்களுக்குள் உள்ள நல்ல உறவுமுறையால் தகவல் தொடர்பு நன்றாகவே இருந்துவருகிறது.

இதையெல்லாம் தாண்டி, நாம் புழங்கும் சமூகம், நமக்கு மிகமுக்கிய மென்டராக இருந்து வருகிறது. ஒருமுறை வறட்சியின் பிரச்னைகள் குறித்து சிவகங்கை பகுதியில் ஒரு விவசாயியிடம் பேசிக்கொண்டிருந்த போது, "மழை பெஞ்சா நெல்லை விப்போம்; பெய்யலனா நெலத்த விப்போம்" என்று பேச்சுவாக்கில் அவர் கூறியது கேட்டு அசந்துபோனேன். வறட்சி; அதன் விளைவு; அதனை அவர்களின் வாழ்க்கை முறையோடு இயல்பாய் பொருத்திக் கொண்ட பக்குவம் இதையெல்லாம் யோசித்தபோது, அவர்களுக்குச் சொல்ல எந்த செய்தியுமில்லாமல் நான் நின்றிருந்தேன். சமீபத்தில் பார்த்த ஒரு திரைப்படத்தில், “தெருக்களில் இறங்கித் தேடும்போது, எல்லாம் கிடைக்கும். நமது கேள்விகள் அனைத்துக்கும் தெருக்களில் பதிலுள்ளது” என்ற வசனம் வரும். அது சத்தியமான உண்மை. கிராமத்துக்கு சென்று திரும்பும் ஒவ்வொறு முறையும் கிராமம் எனக்கு ஏதாவதொரு செய்தியை சொல்லித்தந்து அனுப்பும் மென்டாரிங் முறை எப்போதும் உற்சாகமான அனுபவம்.

பஞ்சாயத்து அமைப்புகளில் மாற்றம் கொண்டுவர ஒரேசமயத்தில் அடித்தளத்திலும் அரசின் கொள்கைகளிலும் ஓங்கியடிக்க வேண்டியுள்ளது. நிச்சயம் இது சவாலான பணி. சிலந்தி, வலையைப் பின்னுவது போல நேர்த்தியுடனும்; சலைக்காமலும் நமது பணியை விடாமல் தொடரவேண்டியுள்ளது. ஒருமுறை ஒரு பஞ்சாயத்தளவில், மக்கள் பணியாளர் செய்யவேண்டிய பணிகளை பட்டியலிட்டபோது சராசரியாக அவர் மாதம் 65க்கும் மேற்பட்ட செயல்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளதாகத் தெரியவந்தது. ஒன்றிய அளவிலுள்ள வளர்ச்சிப்பணியாளர், மாதந்தோறும் 400 விதமான பணிகளை ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது. இதனை சிறப்புடன் செய்ய உள்ளார்ந்த வேகம் கொண்ட பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். கடந்த ஒரு வருடமாகவே எனது சில அணி உறுப்பினர்கள் மீதான எனது நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. பஞ்சாயத்து திட்டத்திலுள்ள சில அணி உறுப்பினர்களின் பணித்தீவிரம் எனக்கு எந்த உற்சாகத்தையும் அளிக்கவில்லை. மாதந்தோறும் புத்தாக்கமற்ற வரட்டுப்பணிகள், எதேச்சையாக நிகழும் களச்செயல்பாடுகள், பெயருக்குத் தயாரிக்கப்படும் தகவல் அறிக்கைகள் என ஏதோ நிர்பந்தத்தில் பணியாற்றுவது போல் செயல்படுவதால் எனது களஈடுபாடும் குறைந்துவிட்டது. பெரும்பாலான மாதக் கூட்டங்களில், மதிய பொழுதின் மின்சாரமற்ற இருட்டறையில் அமர்ந்திருக்கும் புழுக்கத்தை உணர்ந்திருக்கிறேன். எனது திட்டத்தலைவர் திரு.சிங்கராயர், எனக்கு அளித்திருக்கும் கற்றல் வாய்ப்புகளும்  ஆட்சியியல் துறையிலுள்ள எனது ஆர்வமும்  இத்திட்டத்தில் இன்னும் என்னை இணைத்துக்கொண்டுவருகிறது என நினைக்கிறேன். இதன் காரணமாகவே,
போன வருடத்தில் பஞ்சாயத்து திட்டத்துக்கான எனது களப்பங்களிப்பு அவ்வளவு திருப்திகரமாக இல்லை. திட்டப்பணிகளை திரு. சிங்கராயர் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் செயல்படுத்துவதும் சில திட்ட அளவிலான ஆய்வுகள், பயிற்சிகள், அறிக்கைகள், வெளியீடுகள் மற்றும் தகவல் தொடர்புகளை ஒருங்கிணைப்பதையும் செய்துள்ளேன். மற்றபடி மைய அலுவலகத்திலிருப்பதால் அவ்வப்போது பொதுவான நிறுவனப்பணிகளில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள வாய்ப்பேற்பட்டது கூடுதல் சந்தோஷம்.

பஞ்சாயத்து தலைவர்களுக்கான பயிற்சியின் போது கிராம பஞ்சாயத்தின் அமைப்பை பங்கேற்பாளர்களுக்கு விளக்க ஒரு சைக்கிள் படத்தை வரைந்து, அதன் பாகங்களை பஞ்சாயத்து அமைப்பின் அங்கங்களுடன் பொறுத்திப் புரியவைப்போம். சைக்கிள் படத்தை முதன்முதலில் போர்டில் வரையும் போது எனக்கு சைக்கிள் படம், அவ்வளவு சுத்தமாக வரவில்லை. பங்கேற்பாளர்கள் எனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். ஏதோ ஒன்றிரண்டு கதைகள் சொல்லி அந்த வகுப்பை ஒப்பேத்தினேன். எளிமையான சைக்கிள் படம் தானே, சுலபமாக வரைய முடியும் என்ற எனது குருட்டு நம்பிக்கை அதை வரைய முயற்சிக்கும் போது அவ்வளவு சுலபமில்லை என தெரியவந்தது. இது போல பல வேலைகளை வெளியிலிருந்து பார்க்கும் போது சுலபமாகத் தெரிந்தாலும் அதில் ஈடுபடும் போதுதான் அதன் வீரியம் தெரியவருகிறது. இதை நாட்டார் வழக்கில் “கிணறு வெட்ட பூதம் வந்தது” என கூறுவார்கள். பார்க்கும் போது சாதாரண கட்டமைப்பாக தெரியும் கிணறை வெட்டுவது சுலபமில்லை. எல்லா செயல்களும் அதற்கேயுரிய சிக்கல்களை கொண்டுள்ளது என்பதை பல சந்தர்பங்களில் புரிந்து கொள்ளமுடிகிறது. அதே போலத்தான் டாடா தானம் அகடமியில் ஆசிரியராக பணியாற்றுவது. வெளியிலிருந்து பார்க்கும் போது, பாடம் எடுப்பது மிகச்சுலபமான காரியமாக தென்பட்டாலும் உள்ளே இறங்கும் போதுதான் அதன் தீவிரம் எனக்கு விளங்கியது. டாடா தானம் அகடமியில் இரண்டாவது ஆண்டாக சில குறிப்பிட்ட பாடங்களுக்கு ஆசிரியராக பணியாற்றுகிறேன். முழுநேர ஆசிரியராக என்னை மாற்றிக்கொள்ள கல்விநிறுவனத்துக்குரிய பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. மிகஆழமான துறையறிவும், புதிய கருத்தாக்கங்கள் ஏற்படுத்துவது, ஆய்வுகள் மேற்கொள்வது, துறை அமைப்பினருடன் இணைப்பினை ஏற்படுத்துவது, மொழியாளுகை, மாணவருக்கு பாடம் சொல்லித் தருவதுடன் அவர்களுக்கு முன்மாதிரியாய்; வழிகாட்டியாய் இருப்பது என பல்வேறு நிலைகளில் உயர்தரத் திறனும் பக்குவமும் தேவைப்படுகிறது. அவற்றை எனக்குள் ஏற்படுத்திக்கொள்வதில் தீவிர முயற்சிகள் எடுக்கவேண்டும்.

திரு.வள்ளிநாயகம், திரு.மாதவன்குட்டி, பேரா.சண்முகம், பேரா.வெங்கட்ராமன், திரு.வேங்கையன், சமீபத்தில் மறைந்த பேரா.ரஞ்சித்குப்தா போன்ற தானம் அறக்கட்டளையுடன் தொடர்புடைய மூத்த செயல்இளைஞர்களுடன் பல்வேறு சந்தர்பங்களில் அவர்களின் பணிகளை கவனித்தோ உடன் பணியாற்றியோ என்னை பலப்படுத்திக் கொண்டதுண்டு. முதிய வயதிலும் அவர்களுக்கிருக்கும் கற்றலார்வம், மற்றவர்களுக்கு வழிகாட்டும் பெருந்தன்மை, இளைஞர்களுக்கிணையான செயல்திறம் ஆகியவற்றைக் காணும் போது என்னுடைய அக மற்றும் புறத் திறன்கள், நான் சார்ந்திருக்கும் துறை மீதான எனது ஆளுமையை புதுப்பித்துக் கொள்ளவேண்டிய தேவையை உணர்கிறேன்.

இந்த வருடம் என்னுடைய ஆய்வியல் அறிவு முறைபடுத்தப்பட்டது. இதற்கு முன் சின்னச் சின்ன ஆய்வுகளை பணித்தேவைக்காக செய்து வந்த நான் அகடமியின் ஒரு முக்கிய ஆய்வுப்பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டதன் மூலம் ஆய்வியல் பற்றிய எனது புரிதல் பலமாகியுள்ளது. குறிப்பாக இத்திட்டத்தின் ஆரம்பக் காலங்களில் கார்த்திகேயனுடன் பணியாற்றியபோது நான் கற்றுக்கொண்டது அதிகம். அதே போல், ஜெனாவிடமிருந்து ஆய்வு சார்ந்த உள்ளடக்கத்தை கற்றுக்கொள்ள வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளது. எண்களின் மீது அவருக்கிருக்கும் காதல் ஆச்சரியமானது. வரும் காலங்களில், அவரும் நானும் இணைந்து சில ஆய்வுக்கட்டுரைகள் எழுத திட்டமிட்டுள்ளோம். அடுத்த 5 வருடத்துக்குள் முனைவர் பட்டம் பெற முயற்சிக்க வேண்டும். இப்போதெல்லாம் நான் எழுத நினைத்த உடனே கிடைக்கும் காகிதத்தைப் போல, வீடியோ சாதனங்கள் எளிமையாகிவிட்டது. கையில் ஒரு கேமரா மொபைல்போன் இருந்தால் எல்லாருமே ஒளிப்பதிவாளராகி விடுகிறோம். காட்சித் தொடர்பியல் துறையில் சிறு வயதிலிருந்தே இருந்த ஆர்வம் இப்போது மீண்டும் துளிர்விட்டுள்ளது. வளர்ச்சி மற்றும் மரபு பற்றிய ஆவணப்படங்களை எனது பணி எல்லைக்கு வெளியே செய்ய ஆரம்பிக்க வேண்டும். இப்போது பெரியாரையும் திருவாசகத்தையும் ஆழமாக படிக்க ஆரம்பத்திருக்கிறேன். எதையாவது கற்றுக்கொள்ள உலகம் திறந்துதானிருக்கிறது. அனுபவம் அதிகரிக்க அதிகரிக்கத் தான் எனது அறியாமை எனக்குப் புரியவருகிறது.

இலவசமாய் கிடைக்கிறதே என்று இணையதளத்தில் எனக்கென மூன்று வலைப்பூக்களை தன்னுணர்தல், ஆட்சியியல், ஜென்மரபு ஆகிய தலைப்புகளில் ஏற்படுத்தி வைத்ததோடு சரி. அதை முறையாக பராமரிக்கமுடியவில்லை. இப்போது தான் இணையதளத்துக்கான யுனிகோட் தமிழ் தட்டச்சு புரிய வந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாக வலைப்பூவை பராமரிப்பது பற்றி அகடமியிலுள்ள ஆனந்தா உதவுவதாக கூறியிருக்கிறார். அவர் வழிநடத்தும் அகடமி மாணவர்களுக்கான வலைப்பூ மிக அழகாக மெருகேறி வருவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரிடம் கற்றுக்கொண்டு மேற்கொண்டு பணிகளை வரும் ஆண்டில் தொடரவேண்டும்.

நாம் ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை செய்யப் பழகிய அளவுக்கு, ஒரு நேரத்தில் ஒரேயொரு செயலில் கவனம் செலுத்தப் பழகவில்லை என்று தோன்றுகிறது. உண்மையில் ஒரு சமயத்தில் ஒரே ஒரு பணியில் ஈடுபடுவதற்குத்தான் அதிக பொறுமையும் திறனும் தேவைப்படுகிறது. எனக்குள் இந்தப் பிழை ஆழமாக ஊன்றியிருப்பதாகப்படுகிறது. புத்தர், “வாழ்க்கையை, நிகழ்காலத்தில் வாழ்வதே சாதனை” என்கிறார். பெரும்பாலும் எனது நிகழ்காலம், நடந்து முடிந்த பணிகளின் சோகத்தையும் நடக்கப்போகின்ற பணிகள் பற்றிய கனவுகளையும் சுமந்து கொண்டிருக்கிறது. காலை அறவழிபாட்டு பிரார்த்தனையின் 5 நிமிட தியானத்தில் 50 விதமான நினைவுகள் வந்து செல்கின்றன. பல சமயங்களில் பல வித பணிகளில் ஈடுபடுவதால் எந்த ஒரு பணியிலும் முழுநிறைவைப் பெறமுடிவதில்லை. அதே சமயத்தில் பல பணிகளில் என்னை ஈடுபடுத்திக்கொள்ளும் போது ஏற்படும் வாய்ப்புச் சுதந்திரம் உற்சாகத்தைத் தருகிறது. இந்த முரண், பல சமயங்களில் ஆச்சரியத்தையும் சோர்வையும் எனக்குள் உண்டாடக்கியதை, சரிசமமாக ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டியுள்ளது.

நாம் புத்தாக்கத்தின் யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சி, நம்மால் நினைக்கமுடிவதைக் காட்டிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. கிளவுட் கம்ப்யூட்டிங், ஜி3, நானோடெக், ரோபாட்டிக்ஸ், வெர்ச்சுவல் ரியாலிட்டி என்று தொழில்நுட்பச் சொற்கள் நம்மிடையே ஜல்லியடிக்கின்றன. கூக்ளி நினைத்தால் என் வீட்டுக்குள் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று வினாடிக்கு வினாடி கண்காணிக்க இயலும். இந்த சூழ்நிலையில் நமது வளர்ச்சிப் பணிகளின் தன்மையை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. சந்தை மட்டுமே நமது இருப்பைத் தீர்மானிக்கும் என்றான பின், நமது மனிதவளம்; நமது சேவைகள்; நமது அணுகுதுறை என அனைத்தும் மிக உயரிய நிலையில் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் நமக்குள்ளது. சக பணியாளர்கள், மாறி வரும் சமூகச் சூழலின் அழுத்தத்தை எந்தளவுக்குப் புரிந்துள்ளனர் என்பது பற்றி இருப்புக்கணக்கு எடுக்கவேண்டியுள்ளது. அதனடிப்படையில் நமது மனிதவள மேம்பாட்டுத் திட்டங்கள், வழிகாட்டுநர் முறைகள் வலிமைப்படுத்தப்படவேண்டும் என எண்ணுகிறேன்.

இப்போதெல்லாம் அரசியல் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரித்து வருகிறது. நமது நிறுவனமும் அரசியலில் ஈடுபட வேண்டும். அரசியல் என்றவுடன் ஒரு குறிப்பிட்ட கட்சி சார்ந்த அரசியலல்ல; எல்லாவித கட்சிகளும் பொதுவாய் நாம் நமது தனித்தன்மையுடன் அரசியலமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். எல்லா காலத்திலும் மக்களாட்சி நியாயமானதாக; நன்மை தருவதாக இருக்காது. பேய்களின் தேசத்தில், பிணம் தின்னுவது தானே சாத்திரமாகும்? உணர்வற்ற மக்கள் கூட்டத்தில் பெரும்பான்மை மக்களின் முடிவுகள் வளர்ச்சிக்கு எதிராக அமைய வாய்ப்புள்ளது. மேற்கு வங்காளத்தின் சிங்கூர் பிரச்சனை இதற்கு நல்ல உதாரணம். இந்த சூழ்நிலையில் நமது மக்கள் அமைப்பின் உறுப்பினர்களை, நம்பிக்கைத் தரும் தலைவர்களாக சமூகத்துக்கு அறிமுகப்படுத்துவதும் மக்களை குணப்படுத்துவதும் நமது கடமையென்றே தோன்றுகிறது. இப்போதிருக்கும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வளர்ச்சிப் பணி பற்றிய அடிப்படை அறிவினைப் புகட்ட சிறப்பு கல்வித்திட்டங்களை நாம் வகுத்து அவ்வுறுப்பினர்களிடையே குறைந்தபட்ச நேர்மையை புகட்டவேண்டும். குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளில் நாம் நமது பண்புகளை விதைப்பதற்கு மிகப்பெரிய வாய்ப்பிருப்பதை அனைத்துத் திட்டங்களும் உணர்ந்து செயலாற்ற வேண்டும் எனத் தோன்றுகிறது.

திறனுடன் செயல்படாதவர்கள் மீதான நிறுவனத்தின் பெருந்தன்மை அல்லது சகிப்புத்தன்மை எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுண்டு. இதனால் தீவிரத்துடன் பணி செய்பவர் அதிக பணிச்சுமைக்கு ஆளாவதும் நாளடைவில் நல்ல பணியாளர்களும் தமது பணிப்பொறுப்புகளைக் குறைத்துக்கொள்வதும் வெளிப்படுவதைக் கண்டிருக்கிறேன். எனக்கும் கூட இந்த அனுபவம் ஏற்பட்டதுண்டு. இப்போதிருக்கும் பணியாளர் பணியாய்வு முறைகள் பொதுப்படையாக இருப்பதாக படுகிறது. இதனைத் தீர்க்க சரியான, அறிவியல் பூர்வமான பணியாளர் மதிப்பீட்டு முறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

ஆறு வருடங்களுக்கு முன் அகடமியில் படித்துக்கொண்டிருந்த போது கோடை வட்டார களஞ்சியத்தின் மகாசபா கூட்டத்துக்கு பார்வையாளராக நாங்கள் அனைவரும் சென்றிருந்தோம். விழா நிகழ்வில் வேங்கையன் ஐயா அவர்களின் குரலில், “தனித்து நட” பாடலைக் முதன்முதலாய் கேட்டபோது உடம்பெல்லாம் மின்சாரம் பாய்வது போல் உணர்ந்தேன். நமது முயற்சிகள் ஏற்றுக்கொள்ளப்படாத போது; தோல்விகளை சந்திக்கும் போது நாம் தனித்தே நடக்க வேண்டியுள்ளது. ஆனால் நிறுவன அமைப்பில் இப்பாடல் தனிமனித குணத்தை முன்னிருத்தி, அணிச் செயல்பாட்டுக்கும் சேர்ந்து பணியாற்றும் குணத்திற்கும் எதிர்கருத்தைக் கொண்டிருப்பதால், தனித்துவத்தை இழக்காமல் குழுவாய் சாதிப்பது குறித்த பக்குவத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனப்படுகிறது. எப்படியிருந்தாலும் இப்போதும் கூட தாகூரின் அந்தப்பாடல் எனக்கு சோர்வு ஏற்படும் போதெல்லாம் ஆறுதலாக இருந்து வருகிறது.

“முப்பது வயதுக்குள் நீ கம்யூனிசத்தை விரும்பவில்லையென்றால் உனக்கு இதயமில்லை; முப்பது வயதுக்கு மேல் நீ கம்யூனிசத்தை விரும்பிக்கொண்டிருந்தால் உனக்கு மூளையில்லை” என்ற வேடிக்கையான வாசகம், போனமாதம் எனது 30வது வயதை நிறைவு செய்த போது நினைவுக்கு வந்தது. உண்மை தான். இப்போது எனது கொள்கைகள், வாழ்க்கைமுறை, நம்பிக்கைகள் ஆகியவற்றில் 360 டிகிரி மாற்றத்தை மனம் விரும்புகிறது. எனது தனிப்பட்ட வாழ்க்கை முறையிலும் மாற்றம் தேவைப்படுகிறது. கடந்த ஒரு வருடமாக எனது பொருளாதாரத் தேவை என் கைக்கு மீறி சென்றுள்ளது. எனது பெற்றோர் என் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. அவர்களுக்கு எனது பணியில் விருப்பமில்லை. நான் அவர்கள் பேச்சை கேட்காததால் அவர்கள் என்னுடனான பேச்சைக் குறைத்துவிட்டார்கள். இப்படியே எவ்வளவு நாளைக்கு எனது பிரச்சனைகளைத் தள்ளிப்போட முடியுமென்று தெரியவில்லை. என் மீது பேரன்பு கொண்ட எனது பெற்றோர்களில் காலத்திலேயே அவர்கள் விரும்பும் படி என்னை மாற்றிக்கொள்ளவேண்டும் எனத்தோன்றுகிறது.

எவ்வளவு பேர் எடுத்துக் கொஞ்சினாலும்; எவ்வளவு பேர் அரவணைத்தாலும்; கடைசியில் தாயைத் தேடும் குழந்தையைப் போல், மனம் அமைதிக்கு ஏங்குகிறது. மிகப்பெரிய புயலின் மையக்கண் கூட சலனமற்று அமைதியாகத் தானிருக்கும் என்று அறிவியல் ஞானம் சொன்னாலும், வாழ்க்கையின் சிறிய காற்றசைவுக்குக்கூட அறிவு நிதானமின்றித் திரிகிறது. காலத்தின் நித்தியத்தைப் போல தீராமல், ஒவ்வொரு கணமும் அனுபவங்கள் நம்மைக் கடந்துக்கொண்டு தானிருக்கிறது. தீராநதியாய் வழிந்து செல்லும் அனுபவத்தின் வாயிலாக தாகத்தைத் தீர்த்துக்கொள்வது தான் வாழ்க்கை என நாம் பெயரிட்டுக் கொள்கிறோம். காலம் நமது எல்லா காயங்களுக்கும் மருந்தாக இருக்கிறது. நமது மகிழ்ச்சி, துக்கம், விரக்தி, கோபம், வெறுமை என எல்லா உணர்வுகளும் தீராநதியின் தொடர்ச்சியான நீரோட்டத்தில் கரைந்து காணாமல் போகின்றன. அனுபவங்களை நமது மதிப்பீடுகளை வைத்து நியாயப்படுத்துவதற்கு பதிலாக நதியின் போக்கில் செல்லும் சருகைப்போல எல்லாவற்றையும் பரிபூரணமாக ஏற்றுக்கொள்ளும் மனம் வாய்ப்பது ஒரு அற்புத வரம்.

இதை எழுதிக்கொண்டிருக்கும் போது, எதிரே டி.வியில் இசையருவி ஓடிக்கொண்டிருந்தது. வீட்டுக்கு வெளியே, பின்னிரவில் பூக்கத்துவங்கும் பவழமல்லிகள் மலரத்தொடங்கியிருந்தது. மொட்டு பூவாக மாறும் போது வெளிப்படும் முதல் வாசம் அலாதியானது. படித்து முடித்து, முதன் முதலில் வத்தலகுண்டில் நான் பணியமர்த்தப்பட்ட போது எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன், நினைத்ததை செய்து பார்த்து, பெருவேகத்துடன் செயல்பட்ட எனது ஆரம்பக் காலத்தை அது நினைவுபடுத்தியது. காலம் செல்லச் செல்ல, நமது பழைய அனுபவம் தந்த நம்பிக்கை, புதிய படிப்பினைகளை பெறத் தடையாகவும் மாறியுள்ளது. எப்போதும் வெற்றுப்புல்லாங்குழலாய் இருக்க ஆசையிருந்தாலும் யதார்த்தத்தில் கடினமாகத் தானிருக்கிறது.

காலைத் தூக்கத்தின் போது, எழுந்திருக்க மனமில்லாமல் இன்னும் கொஞ்சநேரம் தூங்கலாமே என்ற ஆசை வரும். கனவுகள் நம்மை வசீகரித்து தூக்கத்தை இழுத்துச் செல்லும். அதுபோல எழுத ஆரம்பித்தால், காலமெனும் தீராநதியில் கரையொதுங்கும் நினைவுகள், வார்த்தைகளை இழுத்துக்கொண்டே செல்கிறது. எவ்வளவோ சொல்ல இருந்தாலும் எங்காவது ஒரு இடத்தில் நிறுத்தித்தானே ஆக வேண்டும்? இத்துடன் நிறுத்திக் கொள்வது, இப்போதைக்கு நல்லது எனப்படுகிறது. நன்றி!

No comments:

Post a Comment