“கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?”
1. வெற்றுக்கால்கள்: வாழ்வின் மறுபக்கம்:
இந்த வருடம் பிப்ரவரி 11ம் தேதியன்று தி ஹிண்டு பத்திரிகையில் ஹர்ஷா மந்திர் எழுதிய “வெற்றுக்கால்கள்: வாழ்வின் மறுபக்கம்” என்ற கட்டுரையை படித்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரை. அமெரிக்காவில் படித்து, வேலையும் செய்து வந்திருந்த துஷார் மற்றும் மேட் எனும் இரண்டு இந்திய இளைஞர்கள், இந்தியாவின் உண்மையான முகத்தை உணர்ந்து கொள்ள தமது வேலையை விட்டுவிட்டு, கிராமப்பகுதியில் ஒரு மாதம் வாழ்க்கையை நடத்திய அனுபவத்தை பற்றி அந்த கட்டுரை விளக்கியிருந்தது.
இந்த இரண்டு இளைஞர்களும் இந்திய அரசாங்கம் ஏழ்மைக்கோட்டுக்கு நிர்ணயித்திருந்த ஒருநாளைக்கு ரூபாய் 26 மட்டுமே செலவு செய்யவேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் அந்த பணத்தைக்கொண்டு கண்ணியமான, ஆரோக்கியமாக வாழ்க்கையை வாழமுடியுமா என்று தங்களை ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தார்கள். அவர்களுக்கு அரசாங்கம் நிர்ணயித்த “அதிகாரப்பூர்வ வறுமை” நிலையை ஒட்டி வாழ்வது மிகக் கடினமாக இருந்திருக்கிறது. அது போன்ற வாழ்க்கையை வாழும் போது நாளெல்லாம் அவர்களுக்கு அடுத்தவேளை உணவை எவ்விதம் உறுதிசெய்வது என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. மாஸ்லோவின் “மனிதத்தேவை பிரமிடை” நிதர்சனமாய் புரிந்துகொள்ள அவர்களுக்கு அந்த அனுபவம் மிகவும் உதவியிருக்கும்.
இயற்கை வழி வேளாண்வாதி மசனாபுவின் கருத்து ஞாபகத்துக்கு வருகிறது. “கொள்கைகள், புள்ளிவிவரங்கள் என்பது படித்த, நகரத்து மக்களுக்கானவை, ஒரு கிராமத்து விவசாயி அப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பமாட்டான். அதற்காக அவன் முட்டாள் எனப் பொருள் அல்ல. ஏனெனில் முட்டாள் விவசாயியாக இருக்க முடியாது. அதற்காக அவனிடம் எந்த தத்துவமமும் இல்லை என்றில்லை. மாறாக அவன் எந்த தத்துவமும் தேவையற்றது என்ற மகத்தான தத்துவத்தை உடையவனாக இருக்கிறான்” என்கிறார். வளர்ச்சிப்பணியில் மக்களை தவிர்த்துவிட்டு, நான்கு அறைகளுக்குள் போடப்படும் கொள்கைகள், புள்ளிவிவரங்கள் வளர்ச்சியை, வீக்கமாக தான் மாற்றுகிறது.
சுதந்திரம் கிடைத்து 65 ஆண்டுகளான பின்னும் தமது அன்றாட வாழ்க்கையை உறுதிசெய்துகொள்வதே மிகப்பெரிய சாதனையாக இந்தியாவின் 35 கோடி மக்கள் செய்துவருகிறார்கள் என்று எண்ணியபோது நமது மக்களாட்சியின் மீது வெறுப்பு தட்டாமல் இல்லை. வெறும் கணக்குகளின் வழியாக காகிதப்புலிகளாக நமது அரசு அமைப்பு இயங்கிவரும் சூழலில் மாற்று ஏற்பாடுகளை நம்மைப்போன்ற மக்களின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நிறுவனங்கள் முன்வைப்பது தவிர்க்கமுடியாததாகிறது.
ஏழைகளை, பஞ்சத்துக்காக பிச்சை எடுப்பவர்களை பெரும்பான்மைச் சமூகம் புறக்கணித்துத்தான் வந்துள்ளது. அவர்களின் நிலையினை கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை. அவர்களுக்கு எந்த மரியாதையையும் தருவதில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களை கீழ்மைப்படுத்துகிறோம். ஆனால் அவர்கள் நம்மை அப்படி பார்ப்பதில்லை. இன்றைக்கும் ஒரு நகரத்து இளைஞன், படித்தவன் கிராமத்திலிருக்கும் ஒரு ஏழை வீட்டுக்கு சென்றால் அந்த ஏழை நிச்சயம் மதிக்கத்தான் செய்வான். தன்னிடமிருப்பதை பகிர்ந்துகொள்ளவும் தயங்குவதில்லை. ஏழை மக்களின் இந்த தன்மையே நமது தேசம் இன்னும் அமைதியாக இருப்பதற்கு அடித்தளமாக இருந்து வருகிறது.
ஒரு காலத்தில் ஏழைகளுக்கு உதவுதல் பெரிய கருணையாக கருதப்பட்டது. ஆனால் தற்சமயத்தில் நமது மக்களாட்சி முறையும் நடுத்தட்டு மற்றும் மேல்தட்டு வர்கமும் ஆரோக்கியமாக, பாதுகாப்பாக இருப்பதற்கு அவர்கள் மீது கருணையுடன் இருப்பது நம்முடைய பெருந்தன்மை என்ற நிலைப்பாட்டைத் தாண்டி தவிர்க்க முடியாததாகவும் மாறி வருகிறது. பணக்காரர்கள் நிம்மதியாக இருப்பதற்காகவாவது ஏழைகள் முன்னேற்றப்படவேண்டும் என்ற புதிய புரிதல் வலிமையாக எழுந்து வருகிறது.
மனிதனால் சிறு மணற்துகளைக் கூட முழுமையாக புரிந்து கொள்ளமுடியாது என்ற மிகப்பெரிய தத்துவத்தை மறந்துவிட்டு நமது அரசு அமைப்புகள், அரசியல்வாதிகள் எளிய மக்களின் மீட்பராக தம்மை எண்ணிக்கொண்டு செய்யும் செயல்பாடுகள் நம்மைப் போன்ற மக்களின் சுயகௌரவத்தையும், சுய நம்பிக்கையையும் மேம்படுத்தி அவர்களுக்கான நிறுவனங்களை அமைத்துக்கொடுக்கும் அரிய, கடின சூழலை சீட்டுக்கட்டைப் போல வெகுசுலபமாக கலைத்துவிடுகிறது.
திருவாலங்காடு வட்டாரத்தில் 15 வருடங்களாக கட்டமைத்த நமது மக்கள் அமைப்பை, தற்காலிக தேவைகளுக்காக வாழ்ந்து காட்டுவோம் (இப்போது புதுவாழ்வு) திட்ட பணியாளர்கள் குலைப்பதும், அதை எதிர்த்து நமது பணியாளர்கள், தலைவிகள் போராடுவதும் தினசரி நிகழ்ந்து தான் வருகிறது. ஏற்கனவே உழைப்பாளிகளாய் இருந்த கிராமத்து மனிதர்களை 100 நாள் வேலை என்ற திட்டத்தின் மூலம் சோம்பேறிகளாக ஆக்கியது அரசு அதிகாரிகள் என்றால், தேர்தல் காலங்களில் இலவசங்களை அள்ளிக்கொடுத்து வாக்காளர்களின் பெரும் பகுதியினரை ஊழல்வாதிகளாக மாற்றிய பெருமை அரசியல்வாதிகளை சாரும்.
நாம் இந்த சூழலில் தான் அறப்பண்புகளை மீட்டெடுக்க போராடவேண்டியுள்ளது. எதுவுமில்லாத இடத்தில் புதிய ஒன்றை ஆரம்பிப்பதை விட ஏற்கனவே அரித்துப்போயிருக்கும் பாழினை சீரமைப்பது கடினமான செயல். இதில் ஒருங்கிணைந்து, ஒரே பலத்துடன் ஒரே எண்ணத்துடன் செயல்படவேண்டியுள்ளது.
என்னுடைய இருசக்கர வாகனத்தில் 100க்கணக்கான தனித்தனி இயந்திர பாகங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் தனித்தனியே ஒவ்வொறு விதமான வேலைகளை செய்கின்றன. ஆனால் இவை அனைத்தும் ஒருங்கிணைந்து ஒன்றாக இணைக்கப்பட்ட பின், நான் வண்டியை துவக்கியதும் முழுமையான வாகனமாக அது செயல்படுகிறது. அதே போல வளர்ச்சிப்பணியில் பல்லாயிரக்கணக்கான பேர் அவரவர் அளவில் செயல்பட்டு வந்தாலும் அனைவரும் ஒத்திசைந்து செயல்படும் போது முழுமை கிடைக்கிறது. இதனையே கீதை கர்மயோகமாக சொல்கிறது. வளர்ச்சிப்பணியில் கர்மயோகத்தை நெறிபடுத்தும் தளமாக ஆற்றுப்படுதல் முகாம்கள் அமையும் என்ற நம்பிக்கையில் இந்த அறிக்கையை தொடர்கிறேன்.
2. குன்; ஃபயா குன்:
எல்லா நாட்களையும் போலத் தான் அன்றைக்கும் ஆரம்பித்தது. நான் திருவாலங்காடு வட்டார அலுவலகத்தில் இருந்தேன். அப்போது கனகம்மாசத்திரம் கிராமத்துக்கு வெளியே குளத்துக்கரையில் குடியிருக்கும் களஞ்சிய உறுப்பினர்கள் மொத்தமாக அலுவலகம் வந்திருந்தனர். அவர்கள் குடியிருக்கும் பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை வரவிருப்பதாகவும் அதற்காக அவர்கள் குடியிருப்புகளை இடிப்பதற்கான ஆயத்தங்களுடன் அலுவலர்கள் குழுமியிருப்பதாகவும், களஞ்சியத்தின் மூலம் இதனை தடுத்து நிறுத்தகோரினார்கள்.
தீர விசாரித்துப்பார்த்ததில், அவர்கள் குடியிருக்கும் பகுதி தண்ணீர் குளத்துக்கு ஒதுக்கப்பட்ட பகுதி என்பதும், அவர்களில் யாருக்கும் சொந்த பட்டா இல்லை என்பதும் தெரியவந்தது. மேலும் ஒரு வருடம் முன்பே இந்த பகுதியில் நெடுஞ்சாலை வரப்போகிறதென நோட்டிஸ் அளிக்கப்பட்டிருப்பதையும் புரிந்து கொள்ளமுடிந்தது. மேலும் இதற்கு முன் நடந்த நமது களஞ்சிய உறுப்பினர்கள் எப்படியும் தாங்கள் குடியிருக்கும் இடத்தை சொந்தமாக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது பிரச்சனை பெரிதானவுடன் அவர்களின் தினசரி வாழ்வே கேள்விக்குறியாகிவிட்டது.
அவர்கள் களஞ்சியத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கைக்காக நமது பணியாளர்கள் மக்களுடன் சேர்ந்து வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியரை பார்க்கச் சென்றார்கள். நானும் வட்டாரத்தின் சார்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு இந்த நில கையகப்படுத்தலை தற்காலிகமாக தள்ளி வைக்கவும், மாற்று ஏற்பாடுகளை செய்யவும் கடிதம் அனுப்பினேன். அடுத்த மூன்றாவது நாள் எங்கள் மாவட்டத்தை சார்ந்த சுற்றுச்சூழல் அமைச்சர் முதல்வரின் பரிந்துரையின் பேரில் நமது மக்களை நேரில் பார்வையிட்டார். நெடுஞ்சாலைத்துறை பணியினை தற்காலிகமாக நிறுத்தியும் வைத்தார். அங்கு குடியிருந்த மக்களுக்கு மாற்று இடத்தை ஏற்பாடு செய்வதாக வாக்குமளித்தார். மக்களுக்கான வாழ்வாதார பிரச்சனை தற்காலிகமாக தீர்க்கப்பட்டது.
இது போன்ற சந்தர்ப்பங்கள் நமது மக்களாட்சித் தத்துவத்தின் அபத்தத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. மக்கள் தமது சுயநலத்தை சார்ந்தே இயங்கிவருகிறார்கள். அறம் என்பதற்கு தங்களுக்கு வாகான விளக்கத்தை அளித்துக்கொள்கிறார்கள். எப்போதும் மக்களாட்சி என்பது மக்களின் விருப்பத்தை சார்ந்தியங்குமே தவிர நல்வழி சார்ந்திருப்பதில்லை என்பதை இந்த நிகழ்வும் புரியவைத்தது.
வாழ்க்கை பிரச்சனை மிகுந்தது தான். அதிலும் ஏழை மக்களின் வாழ்வு பெரும் சவால்கள் நிறைந்தது. இதில் முறையான வழிகாட்டுதலையும், ஒருங்கிணைந்த சக்தியையும் உறுதிசெய்வதில் நமது பங்கு அளப்பரியது. திருக்குரானில் வரும் “குன்; ஃபயா குன்” வாசகம் நினைவுக்கு வருகிறது. பிரபஞ்ச வெளி எதுவுமற்று இருந்த போது இறைவன், “குன்” (பிரபஞ்சம்) என்று சொன்ன அடுத்த வினாடிக்குள்ளாகவே “ஃபயா குன்”, நட்சத்திரம், கோள்கள் என மொத்த பிரபஞ்சமும் வெளிப்பட்டதாம். இறைவனின் அளப்பரிய சக்தியை புரியவைக்க சொல்லப்பட்ட ஆழமான வாசகம். அது போல, “வளர்ச்சி” என்று சொன்னவுடன் உலகத்தில் இருக்கும் எல்லா மக்களின் பிரச்சனையும் தீர்ந்து மக்கள் மகிழ்வை பெற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
3. வாழ்வாதாரத்தின் மீது புதிய வெளிச்சம்:
கடந்த வருடம் நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன் எங்களின் மண்டல அளவில் உறுப்பினர்களின் வாழ்க்கை நிலை வாழ்வாதார செயல் பற்றி விரிவாகவே புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டன. உண்மையிலேயே இந்த நிகழ்வு எங்கள் அணியினருக்கு பல படிப்பனைகளை அளித்தது.
மொத்த உறுப்பினர்களில் குறிப்பிடத்தகுந்த அளவினர் தமது வாழ்க்கை நிலையை முன்னேற்றியுள்ளனர். இதற்கு களஞ்சிய மற்றும் வயலகத்தின் சேவைகளும் தவிர்க்கமுடியாததாக இருந்து வந்துள்ளதை புரிந்து கொள்ளமுடிந்தது. பத்தாண்டுகளுக்கும் மேலாக சுமார் 200க்கும் மேற்பட்ட களஞ்சியங்கள் திருவாலங்காடு, காட்டாங்குளத்துர், வாலாஜா பகுதிகளில் இன்றைக்கும் மிகப்பெரிய ஆர்வத்துடன் செயல்பட்டு வருவது மனநிறைவாக இருக்கிறது.
மக்களின் வாழ்வாதாரங்களை பகுக்கும் போது விவசாயம் சார்ந்த தொழில்களின் பங்களிப்பு குறைந்து வருவதை உணர முடிகிறது. உறுப்பினர் குடும்பங்களின் சராசரி வருமானம் உயர்ந்திருந்தாலும் அதைவிட அதிகமாக செலவுகளும் உயர்ந்தே இருக்கிறது. உறுப்பினர் குழந்தைகளின் கல்விக்கும் திறன் சார்ந்த தொழில்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதும் நிதர்சனமாக புரிகிறது.
அதே போல ஆம்பூர் பகுதியில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் தோல் பதனிடுதல் சார்ந்த தொழில்களில் தொடர்ச்சியாக பணியாற்றி வந்தாலும் தொழில் சார்ந்த அபாயத்தை தவிர்பதில் நம்முடைய முயற்சிகளை இன்னும் பலப்படுத்த வேண்டியுள்ளது. எதேச்சையாக ஆம்பூர் பகுதியின் காப்பீடு விவரங்களை ஆய்வு செய்த போது, வெளிப்பட்ட உண்மைகள் கவலையளிப்பதாக இருந்தது. இந்த ஆண்டு மொத்தம் காப்பீடு செய்யப்பட்ட 4500 உறுப்பினர்களில் 35 பேர் இறந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 60 வயதுக்குட்பட்டவர்கள். இதில் 17 பேர் 50 வயதுக்குட்பட்டவர்கள். இந்த பகுதியின் சராசரி ஆயுட்காலம் மிகக்குறைவாக இருப்பதும், காப்பீட்டுக்கான நாம் கட்டிய பங்குத்தொகையை விட இரண்டு மடங்குக்கும் மேல் கேட்புத்தொகை பெற்றிருப்பது தீவிர ஆய்வுக்குட்படுத்தவேண்டிய விஷயமாகப்படுகிறது.
இது தவிர தோல் மற்றும் சாயம் சார்ந்த மிக கடினமான பணிச்சூழலில் பலமணிநேரங்கள் இருப்பதால் ஏற்படும் நோய்களின் தீவிரமும் அதிகம். பெரும்பாலும் பெண்களே இந்த நிலையில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். நமது களஞ்சிய உறுப்பினர்களில் 2000க்கும் அதிகமானோர் இவ்வேலையை சார்ந்திருப்பது கவனிக்கப்படவேண்டிய விஷயமாக இருக்கிறது. குறைந்த ஊதியத்தில் மக்களின் உழைப்பை உறிஞ்சும் இது போன்ற வாழ்வாதாரங்களை எதிர்பதும், மாற்று வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக்கொடுப்பதும் கூட நமது பொறுப்பாகும்.
4. அம்பின் நிழல்:
“ஒரு அம்பு வில்லில் இருந்து புறப்பட்டு நேராக இலக்கை அடைகிறது. அதன் நிழல் ஊரெல்லாம் ஓடி வளைந்துசென்று அதே இலக்கில், அதே கணம் சென்று தைக்கிறது” என்ற அழகான உவமை புறநானுற்றில் சொல்லப்பட்டிருக்கும். வளர்ச்சி பற்றிய புரிதல் இல்லாமல் சமூக சேவை செய்பவர்களின் பணி எளிதானது. ஆனால் வளர்ச்சியை தொலைநோக்குப் பார்வையுடன் முழுமையான செயல்பாடாக செய்வது கடினம் தான். வாழ்வாதாரத்தை மேம்படுத்த நேரடியாக இலவசங்களையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்துதல் எளிமையான செயல் என்றால், துணைத்துறைகளில் செய்யப்படும் செயல்பாடுகளின் வாயிலாக குறுநிதி மற்றும் பிற திட்டங்களின் மூலம் நாம் மக்களில் வாழ்வாதாரத்தை நிலைக்கச்செய்ய எடுக்கும் முயற்சிகள் விரிவான, சிக்கலான அணுகுமுறை. நம்முடைய தேர்ந்த திட்டமும், விடாமுயற்சியுமே அதனை சரியான விளைவில் இட்டுச்செல்லும்.
5. கீதாமுகூர்த்தம்:
பணியின் போது, 40,000க்கும் அதிகமான கடன் தேவையிருக்கும் உறுப்பினர்கள் கடன் அனுமதிக்காக என்னை சந்திக்க வருவார்கள். பொதுவாக கடனுக்கான காரணம் மக்களுடைய திருமணம், வீடு கட்டுதல், மருத்துவம் என்றிருக்கும். இன்னும் கொஞ்சம் ஆழமாக விசாரித்துப் பார்த்தால் அந்த அளவுக்கான கடன் தேவை இருக்காவிட்டாலும் கேட்டுவைப்போமே என்ற எண்ணத்தில் உறுப்பினர்கள் அதிகபட்ச கடனை கேட்டிருப்பார்கள்.
இந்து மத முறைமையில் “கீதாமுகூர்த்தம்” என்ற ஒரு விஷயத்தை சொல்லுவார்கள். பகவத் கீதையை எதோ கதைப்புத்தகத்தை படிப்பது போல நமக்கு பொழுதுபோகாதபோது படிப்பது பயன்தராது. வாழ்வில் தீராத் தாகமும், அடுத்து எடுத்து வைக்க வேறுவழியே இல்லை என்ற நிலையிலும் மட்டுமே கீதை புரிய ஆரம்பிக்கும். அது போன்ற தத்துவப்புத்தகங்களை பெயருக்கு படிப்பது நோயற்றவன் மாத்திரையை சாப்பிடுவதைப் போல. புதிய நோய்களைத் தான் அது உருவாக்கும். அதே போல, களஞ்சிய உறுப்பினர்களும் தமக்கான தேவை இருக்கிறதோ இல்லையோ, கடனை பெற்றுவிடவேண்டும் என்று முயற்சிப்பது புதிய சிக்கல்களைத் தான் ஏற்படுத்தும். வட்டாரத்தின் கொள்கைகளைத் தாண்டி, உறுப்பினரின் குடும்பநிலைப்பாட்டை சார்ந்து நாம் இயங்கும் முறையை மாற்றிக்கொள்வதின் மூலம் இதனை குறைக்கமுடியும்.
6. தரப்படுத்துவதும் தனித்துவப்படுத்துவதும்
நாம் பார்க்கின்ற எல்லாவற்றையும் தரப்படுத்தப் பழகிவிட்டோம். தரப்படுத்துவதை மிகச்சிறந்த மேலாண்மைப் பணி என்றும் கொண்டாடுகிறோம். ஆனால் அவ்வாறு தரப்படுத்தப்படும் போது நாம் கீழ்மையானது என்று புறக்கணிக்கும் விஷயத்துக்குள் இருக்கும் தனித்துவத்தை கவனிக்க மறக்கிறோம்.
19ம் நுற்றாண்டில் சீனாவில் வாழ்ந்த யுயான்ஜா, சீனதற்காப்பு கலையான “வூசு”வை கையாளுவதில் புகழ்பெற்றவர். தத்துவவாதியும் கூட. அவரை பார்க்கவும் அவருடன் சண்டையிட்டு ஜெயிக்கவும் கராத்தேவில் புகழ்பெற்ற அன்னோ தனகா என்பவர் ஜப்பானில் இருந்து வந்திருந்தார். தனகாவைப் பொறுத்தவரை உலகில் கராத்தே கலையைவிட சிறந்த கலை இருக்கமுடியாது என்ற நம்பிக்கை. யுயான்ஜாவுடனான அறிமுக விருந்தில், அவருக்காக தனி கவனத்துடன் ஜப்பானில் இருந்து எடுத்துவந்திருந்த உயர்ரக தேயிலைகளை அனகா பரிசளித்தார். “இதுபோன்ற முதல் தர தேயிலைகள் கிடைப்பது அறிது” என்று பெருமையுடன் அனகா கூறியபோது, யுயான்ஜியா லேசாக சிரித்துக்கொண்டே “மனிதர்கள் தான் இது உயர்ந்தது, அது தாழ்ந்தது என்று தரம் பிரிப்பார்கள். ஆனால் பூமியில் வளர்கின்ற எல்லாத் தேயிலைகளும் அதனதன் தனித்துவத்துடனே இருக்கின்றன” என்று கூறுவார். யோசித்துப்பார்க்கும் போது எவ்வளவு உண்மை என்று புரியவரும். மனிதர்களை, நாம் வாங்கும் பொருட்களை, பார்க்கும் எல்லாவற்றையும் தரம் பிரிப்பதும் உயர்ந்தது தாழ்ந்தது என்று பிரித்து வைத்துப் பார்ப்பதும் சமூகத்தின் சமத்துவத்துக்கு எதிரான செயலாகப் படுகிறது. வளர்ச்சிப் பணிகளில் தரப்படுத்துவதை விட பார்க்கின்ற எல்லாவற்றிலும் இருக்கும் தனித்துவத்தை கவனிக்கத் தொடங்கினால் அற்புதம் நிகழும்.
7.காணாமல் போனவர்கள்:
போன பிப்ரவரி மாதம் வரிசையாக யெகிழி (பிளாஸ்டிக்) பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வுகளை நிகழ்த்தினோம். அதற்கான ஏற்பாடுகளின் போது நிகழ்ச்சி மேடையில் பின்புலத்தில் பதாகை (பேனர்) வைப்பதற்காக பேசிக்கொண்டிருந்தோம். இப்போதெல்லாம் பதாகைகள் யெகிழிப்பொருளின் மூலம் கணினி வழியாக தயாரிக்கப்படுவதால் இதனை கைப்பட துணியில் எழுதும் ஓவியரை கண்டுபிடிப்பது சிரமமாகிவிட்டது. கடைசியில் ஒருவர் கிடைத்தார். ஆனால் அவரும் இந்த வேளையை செய்வதில்லை. எதோ ஒரு தொழிற்சாலையில் கூலிக்கு சென்றுகொண்டிருப்பவர். பிறகு நம்முடைய தொடர்ச்சியான வற்புருத்தலால் அவரும் அவருடைய நண்பரும் இணைந்து எழுதிகொடுத்தனர்.
தொழில்நுட்பப் புரட்சியால் நாம் மறந்த, புதைத்த நமது மண் சார்ந்த வாழ்வாதாரங்கள் தான் எத்தனை! தேசம் வளர வளர, நமது உணவுமுறை, பயன்படுத்தும் பொருட்கள், மகிழும் கலைகள் என அனைத்திலும் நமக்கான தேர்வு குறைந்துகொண்டே வருகிறது. எனது பெற்றோர் தமது உணவில் தினசரி உண்ட சிறுதானியங்களை நான் என் சிறுவயதில் சிலசமயம் புசித்திருக்கிறேன். அடுத்து என் மகள் அதனை கண்ணாலாவது பார்ப்பாளா என்பது சந்தேகமே. ஒருமுறை சென்னையில் மதியபொழுதில் உணவகத்துக்கு செல்லவேண்டியிருந்தது. அங்கு மேசையை துடைக்கும் பணியில் ஒரு பெரியவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். கம்பீரமான முகம். பெரிய மீசை. பிறகு விசாரித்தபோது, அவர் விழுப்புரம் பக்கம் கூத்துவாத்தியார் என்று தெரியவந்தது. தனித்துவம் மிக்க கலைஞனை மேசை துடைக்கவைத்த இந்த சமூகம், அது தனிமனிதன் மீது செலுத்தும் அழுத்தம், அதன் மதிப்பீடுகள் பற்றி யோசிக்க யோசிக்க வெறுமைதான் மிஞ்சியது.
எங்கள் வீட்டில் ஒரு பின் மாலைப்பொழுதில் வெட்டுக்கிளி வந்துவிட்டது. எங்கள் வீட்டைச் சுற்றி சுமார் 3 கி.மீ சுற்றளவில் விவசாய பூமி இல்லை. எல்லாம் வீடுகள். இந்த இடத்தில் வெட்டுக்கிளி வாழ்வது எனக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஆனால் அது வந்தவுடன், எங்க அம்மாவுக்கு பதற்றம் தொற்றிக்கொண்டு அதனை லாவகமாக வெளியே துரத்தும் வரை நிம்மதியில்லை. இப்படித்தான் நமக்கான தேவைகளும், விருப்பங்களும் குறுகிக்கொண்டே வருகின்றன.
பிருந்தாவனத்தில் எல்லா உயிர்களையும் அரவணைத்து “வசுதேவ குடும்பகமாக” கிருஷ்ணன் காத்தது போல நம்மால் உலக உயிர்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து செல்லமுடிவதில்லை. மனித உயிரின் பல பிரச்சனைகளுக்கான ஆணிவேர் இங்கிருந்து தான் துவங்குகிறது. உலகம் மனிதனுக்கு மட்டுமானது என்ற அடிப்படையற்ற பேராசையின் விளைவைத் தான் பருவகால மாற்றம், பேரிடர் தாக்கம் என்று பன்முனை இழப்புகளை சந்தித்துவருகிறோம்.
8. கற்றுத்தரும் குழந்தைகள்:
ஆசை - சசியுடைய இரண்டாவது குழந்தை நேத்ராவுக்கு இப்போது ஒன்றரை வயது ஆகிறது. அவள் என்னுடைய தோழி. அவர்களின் வீட்டுக்கு செல்லும் போதெல்லாம் அவளின் உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொள்ளும். வீட்டில் இருக்கும் போது, காலருகே வந்து, “மாமா, வாக்கி” என்று வெளியே கூட்டிப்போகச்சொல்லுவாள். சரி, போகலாம் என்று சொன்னவுடன், பெருமகிழ்ச்சி கொண்டு தன் செருப்பை போட்டுக்கொள்வாள், வீட்டில் இருக்கும் எல்லாருக்கும் டாட்டா சொல்லிவிட்டு, முகமெல்லாம் சிரிப்புடன் வெளியே போக என் கையை இழுத்துக்கொண்டிருப்பாள். ஆனால் வேறு பணிகளுக்காக அவளை விட்டுவிட்டு நானும் ஆசையும் மட்டும் கிளம்பிவிடுவோம். வண்டியில் நாங்கள் மட்டும் கிளம்பும் போது, பெருங்குரலெடுத்து அழுவாள். கண்களில் கண்ணீர் பெருகும். அந்த தெருவிலிருந்து மறையும் வரை அவளது அழுகைக் குரல் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கும். பிறகு எங்கள் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு திரும்பவும் வீட்டுக்கு வந்தால், நேத்ரா மறுபடியும் “மாமா” என்று மகிழ்ச்சியாக கத்திக்கொண்டே ஓடிவருவாள். கூட விளையாடுவாள். அவளுக்கு அவளை நான் ஏமாற்றியது மறந்தேபோயிருக்கும்.
எல்லா குழந்தைகளின் உலகமும் இப்படித்தானிருக்கிறது. அவர்கள் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்கிறார்கள். நிகழ்காலத்தில் மட்டும் வாழ்வது எவ்வளவு பெரிய வரம்! வருத்தம், மகிழ்ச்சி, கோபம் எல்லாம் அந்த கணத்தில் வெளிப்பட்டு அப்போதே தீர்ந்தும் போய்விடுகிறது. நமது பணிச்சூழலில் குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. அவர்களின் தீரா உற்சாகம், புதியதை கற்றுக்கொள்ளும் ஆர்வம், வித்தியாசமானதைப் பற்றிய தேடல், அடுத்தடுத்த நிகழ்வுகளை சந்திக்கும் விருப்பம், கடந்த காலம்/வருங்காலம் பற்றிய கவலையின்மை என குழந்தைகள் இயல்பாய் கொண்டிருக்கும் தெய்வீக குணங்கள் நமக்கும் மிகப்பொருத்தமானவை தான்.
நாம் கூட இந்த இயல்புகளை நமது சிறுவயதில் கடந்தே வந்திருப்போம். ஆனால் சமூகம் எல்லா குழந்தைகளையும் சாதாரண மனிதர்களாக காலப்போக்கில் குணப்படுத்திவிடுகிறது. அதுதான் துரதிருஷ்டம்.
9. 21 அயிரி
மகாபாரதத்தில் யட்சன் தருமரிடம் உலகின் மாபெரும் வேடிக்கை எது என்று கேட்க, ‘கணந்தோறும் மானுடர் சாகக்கண்டும் வாழ்வு நிலையானது என்று எண்ணும் மனிதப் பேதமைதான்’ என்று அவர் பதில் கூறுகிறார். 1901ம் ஆண்டில் டங்கன் மெக்டகால் எனும் அமெரிக்க மருத்துவர் தொடர்ச்சியாக மேற்கொண்ட ஆய்வுகளில் மனிதன் இறக்கும் போது அவரது உடலின் மொத்த எடையில் சராசரியாக 21 அயிரி (கிராம்) குறைவதை உறுதிசெய்துள்ளார். இதன் மூலம் மனித உயிரின் எடை 21 அயிரி என்ற கருத்து நிறுவப்பட்டது. இந்த 21 அயிரி எடையுள்ள பொருள் தான் நம் முழு வாழ்க்கையையும் ஆக்ரமித்து செலுத்திவருகிறது என்று யோசிக்கும் போது பெருவியப்பு ஏற்படுகிறது. உடலின் மொத்த எடையில் 0.03%க்கும் குறைவாக இருக்கும் உயிர் எனும் பொருள் நமது உடலை முழு ஆதிக்கம் செலுத்தி வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் போது, மொத்த மானுட சமூகத்தில் நம்மைப்போன்ற வளர்ச்சிப் பணியாளர்களின் இருப்பு மிகக்குறைந்த, புறக்கணிக்கக்கூடிய சதவீதத்தில் இருந்தாலும் நமது வீரியமான செயல்பாட்டால் சமுதாயத்தை நேர்வழி படுத்தமுடியும். நம்பிக்கை கொள்வோம். செயல்படுவோம்.
நன்றி!