Wednesday, November 28, 2012

2010: மணற் கேணி


“அது முழுமை; இதுவும் முழுமை.
முழுமையிலிருந்து முழுமை வெளிப்பட்டபின்னும்
முழுமையே எஞ்சி நிற்கிறது”
- ஈசா உபநிஷதம்



1. பிரபஞ்சத்தை சுமந்து திரிபவன்...
புத்தமதக்கலாச்சாரத்தில் “காலச்சக்ரா” எனப்படும் சடங்கு சிறப்பானது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகின் எதாவது ஒரு இடத்தில் தலாய்லாமாவின் தலைமையில் இது நிகழ்த்தப்படும். பிரபஞ்சத்தின் கட்டமைப்பை, வண்ணப்பொடிகளைக் கொண்டு மிக நுணுக்கமாக, காலச்சக்கரமாக வரையும் இந்த நிகழ்வு, நிலையாமை மற்றும் காலத்தின் இயக்கம் பற்றிய மிகமுக்கியமான குறியீடாக கருதப்படுகிறது.

இலட்சக்கணக்கான புத்தபக்தர்கள் முன்னிலையில் தேர்ந்த புத்தபிக்குகளின் அணி ஒரு மேசையின் மீது பல வண்ணப்பொடிகளைக் கொண்டு சில மில்லிமீட்டர் கோட்டுச்சித்திரமாக காலச்சக்கரத்தை வரைய ஆரம்பிப்பார்கள். புத்தபிக்குகள் பல அணிகளாக பிரிந்து இரவும் பகலும்மென வரையும் இச்சக்கர ஓவியம், தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு ஓய்வில்லாமல் நீண்டுச்செல்லும். அங்கு கூடியிருக்கும் எல்லாருடைய மனமும் அந்த வரைபடத்திலேயே நிலைத்திருக்கும். மிகநீண்ட உழைப்பில் வரையப்பட்ட காலச்சக்கரத்தை, தலாய்லாமா பார்வையிட வருவார். வந்ததும் ஒரேவீச்சில் அந்த வரைபடத்தை கலைப்பார். பிறகு, வண்ணப்பொடிகளை மொத்தமாக குவித்தெடுத்து அருகிலிருக்கும் நதியில் கரைத்துவிடுவார். அத்துடன் காலச்சக்ரா நிகழ்வு முடிவுக்கு வரும். பற்றின்மை பற்றிய புரிதலையும் காலம் எனும் பொருளின் தன்மையையும் குறியீடாக உணர்த்தும் இந்த நிகழ்வு பங்கெடுக்கும் அனைவருக்கும் அற்புமான தியான அனுபவமாக விளங்கும்.

இதுபற்றிய ஆவணப்படத்தை பார்த்துக்கொண்டிருந்த போது, ஒரு இடத்தில், பேட்டியாளர் தலாய்லாமாவிடம், “பிரபஞ்சத்தின் மையம் எது?” என்று கேட்பார். தலாய்லாமா, “நான்தான்” என்று சொல்லிவிட்டு, “என்னுடைய பிரபஞ்சத்துக்கு நான் மையப்புள்ளி, உங்களுடைய பிரபஞ்சத்துக்கு நீங்கள் மையப்புள்ளி. நாம் ஒவ்வொறுவரும் நமக்கான பிரபஞ்சத்தின் மையமாய் திகழ்கிறோம். பிரபஞ்சம் என்ற கோட்பாடே மனதின் கற்பிதம்” என்று சிறுசிரிப்புடன் சொல்லுவார்.

எனக்கு இந்த பதில் ரொம்ப வித்தியாசமாக இருந்தது. யோசித்துப்பார்க்கும் போது எவ்வளவு பெரிய தத்துவம் என்று வியந்துபோனேன். நாம் ஒவ்வொறுவருமே நமக்கான பிரபஞ்சத்தைத் தூக்கித்திரிந்து கொண்டிருக்கிறோம். அதன் மையமாக நமது மனம் இயங்குகிறது. நாம் நடக்கும் போதும் உறங்கும் போதும் எல்லைகளின்றி விரிந்த நம்முடைய பிரபஞ்சமும் நம்முடன் இயங்குகிறது. நமது பண்புகளே நமக்கான பிரபஞ்சத்தை காலச்சக்கரமாய் கட்டமைக்கிறது. இதுவே நமது மகிழ்ச்சியாகவும் துன்பமாகவும் வாழ்க்கையில் பிரதிபளிக்கிறது என்று தொடர்ச்சியாக நினைத்துச் செல்லச் செல்ல சுயத்தின் வலிமையும் அதை உணராமல் இருக்கும் வெறுமையும் எனக்குப் புலப்பட்டது.

என்னுடைய எண்ணங்களும் செயல்களுமே எனக்கான பிரபஞ்சத்தை உருவாக்குகிறது என்பது உண்மையென்றால், எனது எண்ணங்களையும் செயல்களையும் நான் செம்மையாக்கிக் கொள்வது என்னுடைய கடமையாகிறது. நான் இருசக்கரவாகனத்தை ஓட்டிச்செல்லும் போது, வண்டியின் இயக்கத்துடன் எந்தத் தொடர்புமில்லையென்றாலும், எனக்கு பின்னாலிருக்கும் பாதையைக் காட்டும் கண்ணாடியை அவ்வப்போது பார்த்துக்கொள்வது அவசியப்படுகிறது.

அதே போல வாழ்க்கையிலும், நிறுவனம் சார்ந்த பணித்தளத்திலும் நான் செய்த செயல்பாடுகளைப் பற்றி திரும்பிப்பார்ப்பது அவசியம். இது போன்ற ஆற்றுப்படுதல் நிகழ்வுகள் அதற்கான வாய்ப்பை ஏற்பத்தித் தருவதாக எண்ணுகிறேன். இந்த ஆற்றுப்படுதலை நான் நிறுவனத்தின் செயல்பாட்டைச்சார்ந்து மட்டும் அளவிடாமல், மொத்தமாக என்னுடைய சுயத்தின் தன்மை பற்றியும், என்னை மையமாய் கொண்டியங்கும் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ளவும் கிடைத்தவாய்ப்பாய் நிகழ்த்திக் கொள்கிறேன்.

2. ஒரு கோப்பை வாழ்க்கை...
நான் காஞ்சி - வேலுர் மண்டலத்தில் தானம் அறக்கட்டளைப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறேன். கூடுதலாக பஞ்சாயத்து திட்டத்தின் திட்டஅணி உறுப்பினராகவும் டாடா தானம் அகடமியில் இணைப்புலமையாளராகவும் செயல்படும் வாய்ப்பும்கிட்டியுள்ளது. எனது சொந்த ஊர், சென்னைக்கு அருகிலிருக்கும் திருத்தணி. என்னுடைய தந்தை நிலவள வங்கியில் செயலராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். அம்மாவும் எனது மனைவியும், வீட்டுப் பணிகளை நிர்வகித்து வருகின்றனர். எனது தம்பி, வழக்கறிஞராக இருக்கிறான். இந்த சிறிய குடும்பம் எனக்களித்துள்ள அன்பும், என் மீதான நம்பிக்கையும், அவர்கள் எனக்களித்த சுதந்திரமும் அற்புதமானது.

அடிப்படையில் நான் மருந்தியல் பட்டதாரி. என்னுடைய பட்டப்படிப்புக்குப்பின், இந்திய குடிமைப் பணிகளுக்காக தயார் செய்து கொண்டிருந்தேன். கூடவே அஞ்சல் வழியில் பொது நிர்வாகத்தில் முதுநிலை பட்டப்படிப்பையும் முடித்தேன். என்னால் குடிமைப்பணியில் தேர்ச்சிப்பெற முடியவில்லை. ஆனாலும், அதற்கான தயாரிப்புக்காக நான் படித்த, கற்றுக் கொண்ட பல விஷயங்கள், எனக்குள் ஓர் பரவலான அறிவுத்தளத்தை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக இந்திய அரசியல் மற்றும் சமுகம் சார்ந்த அறிவு விரிவானது. சமுதாய முன்னேற்றத்தில் இளைஞர் பங்களிப்பை நன்கு உணர்ந்தேன். அப்போது கிடைத்த டாடா - தான் அகடமியின் அறிமுகம், தன்னார்வத் துறை பற்றிய வாசலைத்திறந்து வைத்து வளர்ச்சி மிகச்சரியான புரிதலை எனக்குள் ஏற்படுத்தியது.

அகடமியில் படித்தப்பிறகு பஞ்சாயத்து திட்டத்தின் வத்தலகுண்டு கள அலுவலகத்தில் 3 ஆண்டுகள், பஞ்சாயத்து திட்ட அலுவலகத்தில் 3 ஆண்டுகள், தற்போதய காஞ்சி-வேலுர் மண்டலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இது என்னுடைய எட்டாவது ஆற்றுப்படுதல் முகாம். நேற்று தான் பணியில் சேர்ந்தது போல் இருக்கிறது. அதற்குள் எட்டு வருடங்கள் ஓடிப்போய்விட்டது ஆச்சரியமாக உள்ளது.

இந்த ஆண்டுடன் தானம் அறக்கட்டளையுடனான எனது தொடர்பு அகடமி வாழ்க்கையையும் சேர்த்து 10 ஆண்டுகளைத் தாண்டப்போகிறது. என்னுடைய 22வது வயதில் உள்ளே வந்த நான் என் வாழ்க்கையின் மிக முக்கிய பத்து ஆண்டுகளை இங்கு கழித்துள்ளேன். உண்மையிலேயே நான் இணைந்திருந்த இந்த காலகட்டத்தில், நிறுவனமானது எனது வாழ்க்கைமுறையில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை மறுக்கமுடியாது. நிறைய நண்பர்கள், நிஜ அக்கறையுள்ள சக பணியாளர்கள், தொழில்முறை பணிச்சூழல், ஈர்க்கும் சக்தி கொண்ட மூத்தப் பணியாளர்கள் என பல வகைகளில் எனக்குள் தானம் குழுமம் கரைந்துள்ளது. இங்குள்ள சுயக்கட்டுப்பாடுடன் இணைந்த சுதந்திரத் தன்மை, சில சமயங்களில் அவசியமா என்ற கேள்வி எழுந்தாலும் அந்த போக்கே எனக்குள் ஒவ்வொறு வினாடியும் கற்றல் வாய்ப்பையும் இது என்னுடைய நிறுவனம் என்ற சொந்தத்தன்மையையும் ஏற்படுத்தித்தருவதை மறுக்கமுடியாது.

3. இருளிலிருந்து வெளிச்சத்துக்கு...
இந்த ஆண்டின் மையநோக்க கருத்தாக வாழ்வாதாரத்தை எடுத்து செயல்படவிருக்கிறோம். நமது திட்டங்கள் அனைத்தும் ஏழைமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் அவற்றின் புரிதலும் பயன்பாடும் நிறுவன அளவில் எல்லா நிலைகளிலும் தளங்களிலும் சமச்சீராக இல்லை என்றே நினைக்கிறேன். “வாழ்வாதாரம்” என்ற சொல்லின் அர்த்தத்தையே பல பணியாளர்கள் பல விதங்களில் தமது அனுபவம் மற்றும் கல்விப்புலப் பின்னணியில் புரிந்திருக்கிறார்கள். இதைச்சமப்படுத்தி, ஒரே புரிதல் ஒரே சிந்தனையை ஏற்படுத்துவது அவசியம். “சகனா பவந்து, சகனம் குணத்து, சக வீர்யத்தை” ஏற்படுத்தினால் நம் செயல்பாடுகள் இன்னும் உச்சத்தைத் தொடும்.

என்னைப் பொறுத்தவரை வாழ்வாதாரம் என்பது வெறும் பொருளாதார நடவடிக்கை இல்லை. அது மக்களின் சமூக-கலாச்சார மேம்பாட்டுடன் தொடர்புடையது. சமுதாயக்கட்டமைப்பில், வர்ணாசிரம கோட்பாட்டைக்கொண்டு மக்கள் பல பிரிவினராக்கப்பட்டு குலத்தொழில் முறைகள் குறிப்பிட்ட சாதிக்கென வாழ்வாதாரமாய் திணிக்கப்பட்ட காலகட்டத்திலிருந்து வெளிப்படையான, சுதந்திரமான தொழில் முறைகளை மக்கள் தாமே தேர்ந்தெடுக்கும் நிலைக்கு மாறிவருகிறோம். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பனைஏறுவதை மட்டுமே குலத் தொழில் வாழ்வாதாரமாக விதிக்கப்பட்டு ஒடுங்கிக்கிடந்த ஒரு சமூகம், தம்முடைய கூட்டுச் சக்தியால் இன்றைக்கு தமிழகத்தின் சமூக-பொருளாதார நடவடிக்கைகளில் தவிற்கமுடியாத சக்தியாகியிருப்பது கண்முன்னே நிகழ்ந்த மந்திரம். இதை அடுத்தடுத்த நிலைகளுக்கு எடுத்துச் செல்வதற்கு பெரிய உழைப்பும் நம்பிக்கையும் தேவைப்படுகிறது.

4. களவாடியப் பொழுதுகள்...
திருவள்ளுர் மாவட்டத்தின் வடமேற்குப்பகுதி கிராமங்களில் சில குடும்பங்கள் பாரம்பரிய விதைகளை காலங்காலமாக பாதுகாத்து வருகின்றனர். தம்முடைய நிலத்தில் விளைந்த தானியங்களை நான்கு பங்குகளாக பிரித்து, அடுத்த வருட விதைக்காக ஒரு பங்கும், தமது உணவுக்காக ஒரு பங்கும்,  விவசாயத்தில் பங்கு கொண்ட தொழிலாளர்களுக்கு ஒரு பங்கும் எடுத்து வைத்து மீதமானதை விற்கும் பழக்கம் இன்றும் உள்ளது. விதைக்காக ஒதுக்கப்பட்ட தானியத்தை தனியாக ஒரு மண்குடுவையில் இட்டு, அதற்கு வெளிப்புறம் குளுமைக்காக செம்மண் பூசி, சுத்தமான இருட்டு அறையில் வருடம் முழுக்க பயபக்தியுடன் பாதுகாத்து வருவர். விதைத் தானியம் இருக்கும் அறை பூஜை அறையைவிட அதிக அக்கரையுடன் பராமரிக்கப்படும். சிறு வயதில் என்னுடைய தாத்தா வீட்டில் பார்த்ததாக ஞாபகம். அதற்க்குப் பிறகு எனது தந்தையோ நானோ விவசாயத்தில் ஈடுபடாததால் கடந்த 2 தலைமுறைகளாக அந்த களஞ்சிய அறை யாரும் கவனிப்பாரற்று சிதிலமடைந்து போயிருக்கிறது. ஏறக்குறைய நிறைய வீடுகளில் இந்த நிலைமைதான். விவசாயியின் மகன் அல்லது மகள் விவசாயியாவதை விரும்புவதில்லை. சென்னைக்குப் பக்கத்தில் ஸ்ரீபெரும்புதுர் பகுதியில் விவசாயம் முழுவதுமாக செத்துவிட்டது.

சமீபத்தில் திருப்போரூருக்கு பக்கத்திலிருக்கும் என்னுடைய நண்பன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அந்த பகுதி சமீப காலமாக மிகப்பெரிய தொழில்வளர்ச்சிப் பெற்றுள்ளது. கிராமங்களின் நிறம் மாறிப்போய், விவசாய நிலங்கள் எல்லாம் வீட்டடி மனைகளாகவும் தொழிற்கூடங்களாகவும் மாற்றமைந்துள்ளன. சுமார் 100 வீடுகள் மட்டுமே இருக்கும் நண்பனின் கிராமத்தை சுற்றிப்பார்த்தபோது அந்த கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட டீக்கடைகளும் பெட்டிக்கடைகளும் இருந்தது வித்தியாசமாகப்பட்டது. எந்த கடையிலும் வியாபாரமில்லை. கடைகாரர்கள், ரேடியோ கேட்டுக்கொண்டோ, டப்பாக்களை துடைத்துக்கொண்டோ தான் இருந்தார்கள். விசாரித்தபோது, ஊரில் இருக்கும் விவசாய நிலத்தை தொழிற்சாலைகளுக்கு விற்றுவிட்டு அவர்கள் கொடுத்த பணத்தில் சொந்த வீட்டைக்கட்டி கூடவே பெட்டிக்கடையையும் வைத்திருக்கிறார்கள். மிச்சமிருக்கும் பணத்தில் வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிள், கொஞ்சம் வங்கி முதலீடு என குறுகிய வட்டத்துக்குள் வாழ்க்கையை சுருக்கிவருகிறார்கள். இந்த மனநிலையை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. சொந்தமாக நிலம் இருந்தபோது, விவசாயம் செய்தார்கள். அதில் அதிக லாபம் இல்லையென்றாலும் உணவுப் பாதுகாப்பாவது உறுதி செய்யப்பட்டிருந்தது. வளமான விவசாய நிலத்தை தொழிற்சாலைகளுக்கு விற்றுவிட்டு விவசாயிகள் வாட்ச்மேன்களாகவும், சமையல்காரர்களாகவும், ரியல் எஸ்டேட் அதிபர்களாகவும் மாறிய அவலத்தை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள்?

இந்தப் போக்கு, இப்போது சென்னையைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. கூடிய சீக்கிரம் மற்ற மாவட்டங்களுக்கும் பரவும். விளைநிலமெல்லாம் கான்கிரீட் காடாக மாறியபின் செங்கலையும் சிமெண்டையுமா நாம் உணவாகக் கொள்ளமுடியும்? கிராமப்புற மக்களுடைய வாழ்வாதாரத்தின் ஆணிவேர் நமது பாரம்பரித்திலிருந்து கட்டமைக்கப்பட்டது. தற்காலிக பயன்களுக்காக எந்த முன்யோசனையுமில்லாமல் அதை அறுத்தெறிவது நிரந்தரப் பிரச்சனைகளையே கொண்டுசேர்க்கும். நம்முடைய பாரம்பரியத்தை நசுக்கி, அடுத்தத் தலைமுறைக்கு உறுதியான வாழ்க்கையை தரமுடியாத பன்னாட்டுக்கம்பெனிகளின் இந்த பொருளாதார மாற்றம் வேறுவகையான காலனியாதிக்கம் போலவே எனக்குத் தோன்றியது.

5. நீடித்திருக்குமா வாழ்வாதாரம்...
ஒருமுறை திருவாலங்காடு வட்டாரத்துக்குட்பட்ட பனப்பாக்கம் கிராமத்தில் ஒரு குழுக் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அதில் 60 வயதுக்கு மேற்பட்ட வயதான உறுப்பினர் ஒருவர் இருந்தார். நான் பேசுவதை எதையுமே அவரால் உள்வாங்கமுடியவில்லை. அவரிடம், இந்த களஞ்சியத்தில் எத்தனை வருடமாக இருக்கிறீர்கள் என்று கேட்டபோது, 13 வருடம் என்றார். களஞ்சியத்தில் இருந்ததால் எதாவது பயன் அடைந்திருக்கிறீர்களா? என்ற எனது அடுத்தக்கேள்விக்கு, ரொம்பப் பெருமையுடன், “ஆமாம். களஞ்சியத்தில் சேர்ந்தபிறகு அப்பப்ப வீட்டுத் தேவைக்கு கடன் வாங்குவேன். அப்புறம் பெரிய கடன் எடுத்து பசுமாடு வாங்கினேன்...” என்று சொல்லிகொண்டே சென்றார். உடனே, என்னுடைய நிர்வாக மூளையை அவரிடம் வெளிப்படுத்த, “இப்ப எத்தனை பசுமாடு வைச்சிருக்கீங்க?, ஒரு நாளைக்கு எவ்வளவு பால் கிடைக்குது?” என்று கேட்டேன். அவர், “அந்த பசுமாட்டை எப்பவோ வித்துட்டேன் சார். என்றார். நான் அதிர்ச்சியாக. “எங்க வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு. அவரோட வைத்தியச் செலவுக்கு நிறைய செலவாயிருச்சி. மாட்டை வித்துத்தான் வைத்தியம் பார்த்தோம். இப்ப அவரால வெளிய வேலைக்கு போகமுடியாது. நான் எதோ கிடைக்கிற கூலி வேலைக்கு போய் வயித்துப்பிழப்பை கவனிக்கிறேன். இப்ப களஞ்சியத்திலும் எனக்கு வயசாயிடதால கடன் தரமாட்டேன்றாங்க. இன்சுரன்சும் கிடையாதுன்னு சொல்லிட்டாங்க.” என்று தற்போதய நிலையை அடுக்கிச்செல்லும் போது, எனக்கு அவமானமாக இருந்தது. நீடித்த வளர்ச்சி, நிலையான வாழ்வாதாரம் என்றெல்லாம் அகடமில் படித்து, இந்த எட்டு வருஷத்தில் பல பேருக்கு சொல்லிக்கொடுத்து, நீடித்த வளர்ச்சி நிலைத்த வாழ்வாதாரம் பற்றி பவர்பாயிண்ட் பிரசன்டேஷன் எல்லாம் தெளிவாக செய்யத் தெரிந்த எனக்கு என்னுடைய கண் முன்னே, ஒரு உறுப்பினர், தம்முடைய வாழ்வாதாரத்தை இழந்த நிலையிலும் களஞ்சியத்தை பெரிய நம்பிக்கையாய் பார்க்கும் போது நான் செயலாற்றவேண்டிய தளம் வேறு எனப் புரிந்தது.

6. மொத்த உற்பத்தியும் கூட்டு உற்பத்தியும்...
என்னுடைய கல்லூக்காலத்தில் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகம் ஜெ.சி.குமரப்பாவுடைய "எகனாமி ஆஃப் பெர்மனன்ஸ்" (நிலைப்புத்தன்மைக்கான பொருளாதாரம்) ஒருவகையில் இந்த புத்தகமும் நான் என்னுடைய மையத்துறையை விட்டு வளர்ச்சிப்பணிக்கு வருவதற்கு தூண்டுகோலாக இருந்தது. அவருடைய தத்துவத்துக்கு இன்றும் பெரிய சக்தி இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அவருடைய கருத்தின் படி, இந்திய மக்களின் வளர்ச்சிக்கு மொத்த உற்பத்தியை விட, உற்பத்தியானது மொத்த மக்களால் செய்யப்படவேண்டும் என்கிறார். அதாவது, இந்துஸ்தான் லிவர் கம்பெனி, மக்களுக்கெல்லாம் சேர்த்து சோப்பை உற்பத்தி செய்வதை விட, ஒரு கிராமத்துக்குத் தேவையான சோப்பு அந்த ஊர் மக்களால் உற்பத்தி செய்யப்பட்டால் உள்ளுர் பணமானது உள்ளுரிலேயே செலவழிக்கப்படும். இது அந்த கிராமத்தின் நீடித்த வளர்ச்சிக்கு உதவும் என்பார். இந்த தத்துவம் மிக முக்கியமான விஷயம். நமது நுகர்பொருட்களை நம் உறுப்பினரே தயாரிக்கச் செய்வதன் மூலமே பணச்சுழற்சியை நம் கட்டுக்குள் வைத்திருக்கமுடியும். இதற்கு முதற்காரியமாக மக்கள் நிறுவனமாக ஒன்றிணையவேண்டும். பின்னர் அவர்களின் உற்பத்தியை சந்தைப்படுத்த மதிப்புச் சங்கிலி ஏற்படுத்தப்படவேண்டும். இதனை தரகர்களின் துணையின்றி மக்களே முன்னின்று நிகழ்த்தவேண்டும். இது சாத்தியப்படுமானால் நம்மால் அடித்தள மக்களின் வாழ்வாதாரத்தில் அற்புதத்தை ஏற்படுத்தமுடியும். இதற்கான திட்டமிட்ட செயல்முறைகள் இதுவரை நிகழ்த்தப்படவில்லை என்றாலும் வரும் ஆண்டில் செயல்படுத்த ஆரம்பிக்கவேண்டும். என்னுடைய மண்டலத்தில் இந்த முறைமையை நோக்கிச் செயல்பட முடிமென்ற நம்பிக்கை உள்ளது.

7. பேரிரைச்சலிடையே இனிய இசை...
வாழ்வாதாரத்தை மறுபொறியியல் செய்வதில் உள்ள இன்னொரு சிக்கல், மக்களின் பணப்புழக்க சமன்பாட்டை மாற்றியமைப்பதில் இருக்கிறது. கிராமத்தின் மூலைமுடுக்கெல்லாம் தொலைக்காட்சி வந்த பின், பேருந்து செல்லாத கிராமங்களில் கூட பேர் அன்ட் லவ்லியும் பெப்சியும் ஊடுருவி விட்டது. “கருப்பு நிறம் கேவலமானது, வெள்ளைச் சருமமே சிறந்தது” போன்ற மடத்தனமான கற்பிதங்கள் மக்களின் மனதுக்குள் விதைக்கப்பட்டு, எளிய மக்களின் உழைப்பால் வந்த பணத்தை பன்னாட்டு நிறுவனங்கள் அறுவடை செய்துவருகின்றது. கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளை தனியார்மயமாக்கிவிட்டு, அரசாங்கமே சாராயக்கடை நடத்தி முப்பதாயிரம் கோடி ரூபாய் நாற்பதாயிரம் கோடி ரூபாய் என இலாபம் பார்த்துவருவது வெட்கக்கேடு. உண்மையில் இதனால் கிடைக்கும் இலாபத்தை விட, குடிப்பழக்கத்தால் ஈரல் கெட்டு, சிறுமூளை பாதிக்கப்பட்டு சாதாரண மக்கள் மருத்துவத்துக்காக செலவிடும் பணத்தைக் கணக்கிட்டால் அது ஐம்பதாயிரம் கோடி ரூபாயைத் தாண்டும். "மது வீட்டுக்கு நாட்டுக்குக் கேடு" என்று எழுதிவிட்டு அதை விற்பதற்கு விற்பனைத் திட்டம் தீட்டும் அரசின் கீழ் நாம் வாழ்ந்து வருகிறோம். இதுபோன்ற செலவினங்கள், மக்களின் வருமானத்தை அட்டையாக உரிஞ்சுவதையும் நாம் எதிர்த்தாலன்றி நியாயமான வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய இயலாது.  

8. மூடியிருக்கும் விரிந்த கண்கள்...
எனக்குப் பிடித்த திரைப்பட இயக்குனர், ஸ்டான்லி குப்ரிக்குடைய கடைசி படம் “eyes wide shut” (மூடியிருக்கும் விரிந்த கண்கள்). அழகான முரண்தொடை. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நிகழ்வுகள், நாம் முக்கியத்துவம் கொடுக்கும் விஷயங்கள், சண்டை போட்டுக்கொள்ளும் காரணங்கள், ஆசை பிடித்து அலையும் பொருட்கள் என எல்லாத் தன்மையிலிரும் இருக்கும் காணப்படாத அற்புத்தை நாம் தவறவிடும் அபத்தத்தை சொல்லியிருப்பார். நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளில் உண்மையான தன்மையை காண்பதற்கு நமக்கு பொறுமையே இருப்பதில்லை. எல்லாவற்றையும் மேம்போக்காக அணுகி குறிப்பிட்ட நிகழ்வு பற்றி உடனடி அனுமானத்தை நாம் நமக்குள் ஏற்றிக்கொள்கிறோம். இங்கிருந்து தான் பிரச்சனையே மையம்கொள்கிறது. என்னுடைய பணிச்சூழலிலும் நிறுவனமானது பெரிய காரணத்துக்காக குழுவின் பொதுப்பணத்தை வட்டாரத்துக்கு பிரித்தளித்தல், களஞ்சிய நிதிநிறுவனத்துக்கு பங்குத்தொகையை அளித்தல் போன்ற விஷயங்களை வலியுருத்தினாலும் சின்னச்சின்ன தவிற்கப்படக்கூடிய காரணங்களுக்காக நாம் அதில் அதிக ஆர்வம் காட்டாமல் வேறு வகையில் நம் கற்பிதங்களை சொல்லிக்கொள்கிறோம். இந்த போக்கு சமீப காலங்களில் அதிகமாகி வருகிறது. அனைவருக்கும் பொதுவான நன்மை என்பதை சிறுசிறு மனத்தடைகள் கரைத்துச்செல்வது துரதிருஷ்டமான விஷயம். விரிந்திருக்கும் கண்கள் உண்மையிலேயே உள்ளார்ந்த பார்வையை பெரும்போது தான் காணப்படாத அற்புதங்கள் புலப்படஆரம்பிக்கும்.

“மக்கள் பெரும்பாலும் காரணமற்றவர்கள், 
சுயநலமுடையவர்கள், தேவையற்ற ஆசைகள் உடையவர்கள். 
இருந்தாலும் அவர்களை மன்னியுங்கள்” 
சென்ற ஆண்டில் ஆம்பூர் களஞ்சியத் திட்டத்தில் பணியாற்றிய மூன்று இணையாளர்கள் நிறுவன முறைகளுக்கு கட்டுப்படாமலும் தான்தோன்றியாகவும் திரிந்ததால் அவர்களை பெருத்த வலியுடன் பணியிலிருந்து நீக்கினோம். நீக்கப்பட்டப் பின் அவர்கள் நம்முடைய குழுக்களிடம் நமது செயல்பாடுகள் பற்றியெல்லாம் மிகத்தவறாக எடுத்துச்சொல்லி நாம் ஆறு வருடங்களாக கட்டமைத்து வரும் குழுக்களை ஒரே இரவில் எதிர்மறையாக மாற்றினார்கள். சிறப்பாக செயல்பட்ட 50க்கும் மேற்பட்ட குழுக்கள் நம்மை தவறாக புரிந்துகொண்டன. அங்கு பணிபுரிந்த சதிஷ் மற்றும் மற்ற இணையாளர்கள் கூடுதல் நேரமெடுத்து அந்த எதிர்மறைக்குழுக்களை மீட்டனர். இப்போது 17 குழுக்கள் தவிர பிற குழுக்கள் நம்மைப் புரிந்துகொண்டுள்ளன. இந்த செயல்பாட்டில் உள்ளுர் வங்கிப் பணியாளரும் நமக்கெதிராக அக்கரையெடுத்து செயல்பட்டது பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆக்கப்பூர்வமாக செலவிடப்படவேண்டிய நமது சக்தி இதுபோன்ற பிரச்சனை தீர்ப்புக்கு பயன்படுத்தப்படும்போது சம்மந்தப்பட்டவர்கள் மீது கோபமும், விரக்தியும் ஏற்படுகிறது.

அதேபோல் வாலாஜா பகுதியில் சுலக்ஷனா என்ற பணியாளர், ஒரு குழுவின் வங்கித்தவணையில் சுமார் 75000 ரூபாய் தனிப்பட்ட செலவுகளுக்கு பயன்படுத்தி வந்தது அந்த குழுவுக்கு தெரிந்ததும் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த குழு உறுப்பினர்கள் பெரிய குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி வருத்தப்படுகின்றனர். ஊருக்கு நல்லதைச் செய்ய நாம் செய்யும் செயல்பாட்டில் எங்கோ உள்ளக் குறைபாடுகளால் இது போன்ற துரதிருஷ்டமான சம்பவங்கள் நடந்துவிடுவது பல கேள்விகளை எனக்குள் எழுப்புகிறது.

“உலகத்துக்கு உங்களிடமிருக்கும் சிறந்ததைக் கொடுத்தாலும் 
அது நிறைவானதாக இருக்காது.
இருந்தாலும் உங்களிடத்தின் சிறந்ததை உலகத்துக்கு கொடுங்கள்”
மறுபக்கத்தில், காஞ்சி வட்டாரத்தின் ஒரு உறுப்பினர் நம்முடைய செயல்பாட்டால் கவரப்பட்டு தம்முடைய நிலத்தில் ஒரு பங்கை வட்டாரத்துக்கு தானமாக வழங்க முன்வந்திருப்பதும், திருவாலங்காட்டில் 10 வருடங்களுக்கும் மேலாக உறுப்பினர்கள் கலையாமல் இரண்டாம் தலைமுறையாக தமது களஞ்சியங்களை நடத்திவரும் 50க்கும் மேற்பட்ட குழுக்களும், பயிர் காப்பீடு போன்ற புதிய திட்டங்களை ஆக்கப்பூர்வமாக வரவேற்று மனமுவந்து ஒத்துழைத்த திருவாலங்காடு, பூண்டி வயலகத் தலைவர்களும் பெரிய நம்பிக்கையைத் தருகிறார்கள்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் காஞ்சி வட்டாரத்துக்கு பட்டறிவு பயணமாக வந்திருந்த 40க்கும் மேற்பட்ட ரிசர்வ் வங்கியின் பயிற்சி அதிகாரிகள் காஞ்சி வட்டாரத்தின் தலைவி, யோகாம்பாள் பேசிய ஒவ்வொறு வரிக்கும் வியந்து கைதட்டிப் பாராட்டினார்கள். நமக்கு சாதாரணமாகத் தெரியும் விஷயங்களை வெளியுலகினர் இப்படி வியக்கவே செய்கின்றனர்.

இப்படித்தான் வளர்ச்சிப் பணி இருக்கும் போல. தீதும் நன்றும் கலந்தே நமக்குக் கிடைக்கும். நமக்கு முன்னே நம்பிக்கை விரக்தி என இரண்டு பாதைகள் விரிந்திருக்கின்றன. நாம் நம்பிக்கையின் பாதையைத் தேர்ந்தெடுப்போம்.    
                     
9. சொல்லுக்கும் செயலுக்குமான தூரங்கள்...
இதுபோன்ற ஆற்றுப்படுதல் அறிக்கை, ஆண்டுத்திறனாய்வு அறிக்கை எழுதும் போதெல்லாம் என்னைச் சங்கடப்படுத்தும் ஒரு விஷயம் மெண்டரிங். கடந்த மூன்றாண்டாக மெண்டரிங் முறை நிறுவன அளவில் வலியுருத்தப்பட்டாலும், அதற்காக பல திட்டங்கள் ஆண்டின் தொடக்கத்தின்போது எடுக்கப்பட்டாலும் அதைச் செயல்படுத்துவதில் பெரிய இடைவெளி இருக்கத்தான் செய்கிறது. நான் வழிநடத்தவேண்டிய சகதோழர்களுடன் இந்த ஆண்டு முழுமையாக ஒருமுறை கூட சந்திக்கநேரவில்லை. ஓரிருமுறை சந்திக்க திட்டமிட்டிருந்தாலும் அது கைகூடவில்லை. சில தொலைபேசி உரையாடல்கள், சில மின்னஞ்சல் பரிமாற்றம் ஆகியவை மட்டுமே நிகழ்ந்தது. வழக்கம் போல வரும் ஆண்டில் நெறிப்படுத்தி மெண்டரிங் முறையைக் கையாளுவேன் என்ற உறுதிமொழி மட்டும் இப்போது எடுத்துக்கொள்கிறேன்.

அதே போல இந்த ஆண்டு என்னுடைய வழிநடத்துனர் திரு.சிங்கராயருடன் இணைந்து பணிபுரிய அதிக வாய்ப்புகள் ஏற்படவில்லை என்றாலும் எப்போதெல்லாம் எனக்கு பணியில் சந்தேகம் ஏற்படுகிறதோ, ஆலோசனை தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அவரை அணுகமுடிகிறது. அவரும் என்னை உற்சாகப்படுத்துவார், கருத்துக்களை பகிர்ந்துகொள்வார். இந்த ஆண்டு பஞ்சாயத்துத் திட்டத்துக்கு என்னுடைய பங்களிப்பு ஏறக்குறைய எதுவுமே இல்லை என்ற நிலையிருந்தபோதிலும் அவருடன் அவ்வப்போதான கலந்துரையாடலின் மூலம் நான் பஞ்சாயத்துத் திட்டத்தின் செயல்பாடுகள், முன்னேற்றங்களை அறிந்துகொள்வது மகிழ்ச்சி.

10. எம்மைச் சுமந்து செல்லும் காற்று...
என்னுடைய மண்டலப் பணியாளர்கள் பற்றி நிச்சயம் பெரிய பெருமை எனக்குள்ளது. சக்திவேல், சதிஷ், பாலமுருகன், உஷா ஆகிய நால்வரும் கணக்காளர் நிலையிலிருந்து ஒரு வட்டாரத்தை முழுமையாக நிர்வகித்து வருகின்றனர். நல்ல முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். இதில் சக்தியும் சதிஷ்ம் மற்ற வட்டாரங்களுக்கும் ஆலோசனை வழங்கி மண்டலத்தின் செயல்பாடுகளில் பங்கெடுப்பது மகிழ்ச்சியான விஷயம். பாலமுருகன் நமது நிறுவனத்துக்கு புதிய நபராக இருந்தாலும் காஞ்சி வட்டாரத்தில் தோய்வாக இருந்த பல விஷயங்களை முன்னெடுத்து செய்து காஞ்சி வட்டாரத்தின் மேம்பாட்டுக்கு நல்ல பங்களிப்பை தந்துள்ளார்.
துரைமுருகன், திருவாலங்காடு வயலகத்துக்கு பொறுப்பெடுத்தப்பின் பால் உற்பத்தியாளர் குழு அமைத்தல், பயிர் காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தியது என பல புதிய செயல்பாடுகளையும் முறைமைகளையும் சொந்த விருப்பத்துடன் எடுத்து செய்வது ஆக்கப்பூர்வமாக அமைந்துள்ளது. எங்களுடைய மண்டல வாகன ஓட்டுனர் தினகரனுடைய ஒத்துழைப்பு உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியது. அவருடைய சொந்த பிரச்சனைகளையும் தாண்டி தொலைதூரத்தில் பணியாற்றினாலும், மூன்று மாவட்டங்களில் பரந்துள்ள எங்கள் மண்டலத்தின் அலுவலக, களப்பணிகளுக்கு அவருடைய ஒத்துழைப்பு சிறப்பாக அமைந்துள்ளது. அதேபோல் புதிதாக பணியில் சேர்ந்துள்ள சத்யா, ராஜா, சங்கீதா ஆகியோரின் ஆர்வமும் பணித்திறமும் உற்சாகமூட்டுவதாகவே அமைந்துள்ளது.

நமது நிறுவனமே மனிதவள நிறுவனமாக இயங்கும் சூழலில், என்னுடைய மண்டல பணியாளர்களின் திறனை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்வதும், ஊக்கத்துடன் செயலாற்ற சிறப்பான பணிச்சூழலை ஏற்படுத்துவதும் என்னுடைய மிகமுக்கிய பணியாக கருதுகிறேன். வரும் ஆண்டில் காலியாக உள்ள சில பொறுப்புகளுக்கு புதிய பணியாளரை நியமித்து வளர்ச்சி செயல்பாடுகளை முன்னெடுத்துச்செல்வோம்.

11. காலத்தின் மீதான பயணம்...
ஒருமுறை செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் வந்துகொண்டிருக்கும் போது டிக்கெட் வாங்க 50 ரூபாய் நோட்டைக் கொடுத்தேன். “சார், நீங்க கொடுத்த 50 ரூபாய் நோட்டு கிழிஞ்சியிருக்கு. வேற கொடுங்க” என்று பஸ் கண்டக்டர் சொன்னபோது, வேற பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினேன். இரண்டு நாளைக்கு முன் எதோ ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் சில்லரை வாங்கும் போதுஅந்த கிழிந்த 50 ரூபாய் நோட்டு என்னிடம் சேர்ந்துவிட்டது. பஸ்ஸில், டீக்கடையில், ஒரு பெயிண்ட் கடையில் ஐந்து இடங்களில் இதை மாற்றுவதற்காக கொடுத்துப்பார்த்தேன். மிகச்சரியாக திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். ஹட்ச் நாய்க்குட்டி போல என்னை விட்டு பிரியாமல், மாற்றிக்கொள்ள முடியாத அந்த கிழிந்த 50 ரூபாய் நோட்டு எனது பர்சில் கனத்து பெரிய பாரமாக இருப்பது போல் இருந்தது. காஞ்சிபுரம் வந்தபிறகு, பஸ் ஸ்டாண்டின் ஓரத்தில் சாத்துக்குடிகளை வைத்து விற்றுக்கொண்டிருந்த கிராமத்துப் பெரியவர் கண்ணுக்குத் தெரிந்தார். பழம் வாங்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லையென்றாலும் இந்த 50 ரூபாயை மாற்றுவதற்காக பழத்தை வாங்கினேன்.  5 பழம் 40 ரூபாய் என்றார். வாங்கிக்கொண்டு கிழிந்த 50 ரூபாயை கொடுத்தேன். 10 ரூபாயை திருப்பிக்கொடுத்தார்.அவர் கண்டுபிடிப்பதை தவிர்க்க வேகமாக அங்கிருந்து வெளியேறினேன். பத்து அடி தள்ளிப் போன பிறகு, மனம் உறுத்தியது. திரும்பிப்பார்த்தேன். வேறு ஒருத்தருக்கு பழத்தை விற்றுக்கொண்டிருந்தார். மீண்டும் அவரிடம் சென்று, “அய்யா, நான் கொடுத்த 50 ரூபாயைக் கொடுங்கள். வேற ரூபாய் தர்றேன்” என்று அதை மாற்றிக்கொண்டேன். கிழிந்த 50 ரூபாயை வழியில் இருந்த பிள்ளையார் கோயில் உண்டியலில் போட்டுவிட்டு நடந்தேன். என்மீது எனக்கு வெட்கமாக இருந்தது.

இது தான் நான். முழுமையான புனிதத்தன்மையுடன் வாழ்க்கையை நடத்தமுடிவதில்லை. சரியும் தவறும் இணைந்தே வாழ்க்கை ஓடுகிறது. நான் தவறு செய்யும்போது எனக்கும் இருக்கும் சுயம் தரும் உறுத்தல் என்னை கண்டிக்கிறது. இதுபோன்ற சுயம் சார்ந்த பரிசோதனைகளே என்னைச் செதுக்கிவருவதாக உணர்கிறேன்.

தற்போது நான் என்னுடைய சொந்த ஊரில் இருந்து இயங்குவதால் குடும்ப அளவிலான சில சிக்கல் தீர்ந்து அமைதி ஏற்பட்டுள்ளது. என்னுடைய பெற்றோருக்கு உதவியாய் இருப்பதும், அவர்களுடன் நேரம் செலவிடுவதும் ஆத்மதிருப்தியை தருகிறது. ஆனால் இங்கு எனது பணியின் தன்மை முன்பிருந்ததை விட இருமடங்காகியுள்ளது. எப்போதும் செய்துமுடிக்கவேண்டிய பணிகள் அதற்கான காலஅளவைத் தாண்டி என்னை அழுத்தப்படுத்தும். எனது பணியினை சீரமைத்துக் கொண்டு முறைப்படி திட்டமிட வேண்டினாலும், இயல்பாக அடுத்தடுத்து வரும் பணிகள் எதையும் யோசிக்கவிடாமல் என்னை இழுத்துச்செல்கிறது. கடந்த ஒரு வருடமாகவே எனது பணி, பயணங்கள் நிறைந்ததாக இருந்து வருகிறது. இருந்தாலும் மக்களுடன் நேரடியாக பணியாற்றுவதும் களஞ்சியம் வயலகம் என இருதிட்டங்களும் இணைந்த, மண்டல அலகை ஒருங்கிணைப்பதும் பெரிய மகிழ்ச்சியை தருகிறது.

இயல்பாகவே எனக்கு அணியாக இணைந்து திட்டத்தை செயல்படுத்தும் வேகம் குறைவு. தனிஆளாக எந்த வேலையையும் சிறப்பாக செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருந்தாலும் திட்டத்தை செயல்படுத்தும் பணியில் என்னுடைய முன்-அனுமானங்கள் பெரிய தடைகளாகவும் இருந்துள்ளன. வரும் ஆண்டில் மண்டலத்தை செயல்பாட்டில் முதன்மைப்படுத்துவது, அகடமி பணிகளில் என்னுடைய தீவிரத்தை வளர்த்துக்கொள்வது, பஞ்சாயத்துத் திட்டத்தின் விரிவாக்கத்துக்கு உதவுவது ஆகியவற்றை மேற்கொள்ளவேண்டும்.

12. தொட்டனைத்து ஊறும் மணற்கேணி...
ஒரு சோம்பலான ஞாயிற்றுக்கிழமையின் காலை வேளையில், வீட்டில் என்னுடைய அலமாரியை சுத்தம் செய்துகொண்டிருந்தேன். அப்போது இடுக்கில் ஒளிந்திருந்த என்னுடைய கைபேசியின் விளக்கக்புத்தகத்தை காணமுடிந்தது. என்னுடைய கைபேசியை வாங்கியவுடன் அப்புறம் படிக்கலாம் என்று ஒதுக்கி வைத்துவிட்டு மறந்தே போனது நினைவுக்கு வந்தது. இப்போது அதை எடுத்துப் படித்தபோது, சுமார் 200க்கும் மேற்பட்ட செயல்பாடுகளை என்னுடைய கைபேசி கொண்டிருப்பதை உணர்ந்தேன். அவற்றில் 10 செயல்பாடுகளை மட்டுமே நான் செய்துவந்துள்ளேன். தொலைபேசி அழைப்பு, சிறு செய்திகள் அனுப்புதல், பாட்டு கேட்டல், சில சமயங்களில் காலண்டரைப் பார்த்தல், பயணப்படிவத்தை பூர்த்தி செய்வது போன்ற சமயங்களில் கால்குலேட்டரை திறத்தல், இது போன்ற செயல்களுக்குத்தான் நான் என்னுடைய கைபேசியை பயன்படுத்திவருகிறேன். ஆனால் பயன்படுத்தப்படாத அப்ளிகேஷன்கள் நூற்றுக்கணக்கில் இருப்பதை அறியும் போது சுவாரசியமாக இருந்தது. பிறகு ஒவ்வொறு செயல்பாடாக என்னுடைய கைபேசியில் செய்துபார்க்கும் போது மகிழ்ச்சியாக உணர்ந்தேன். சாதாரண கருவியைப் பற்றிய என்னுடைய புரிதலே இந்த நிலையில் இருந்ததென்றால், என்னுடைய மனதில் பயன்படுத்தப்படாத பக்கங்களைப் பற்றி யோசித்தபோது மலைப்பாக இருந்தது. புத்தமதம் சொல்வதைப்போல நான் எனக்குள் பிரபஞ்சத்தைத் தூக்கித் திரிகிறேன். அந்த மனநிலையே யோசிக்க யோசிக்கத் தான் புலப்படுகிறது.

வாழ்க்கை தொட்டனைத்து ஊறும் மணற்கேணியைப் போலத் தான் இருக்கிறது. மணலினைத் தோண்டத் தோண்ட ஊற்றெடுக்கும் நீரைப்போல, மனதைத் தோண்டத் தோண்டத்தான் உள்ளுக்குள் ஆழ்ந்திருக்கும் திறனும், புரிதலும் ஊற்றெடுக்கிறது. அந்த புரிதலே மனதைத் தோண்டிச்செல்லும் பக்குவத்தைத் தருகிறது. மணற்கேணியாய் வாழ்க்கையை புரிந்து கொள்ளும் போது, தேவையற்ற எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் தவிற்கப்படுகிறது. அதுவே அமைதியைத்தந்து பிரபஞ்சத்தையே தாங்கும் சக்தியை நமக்களிக்களித்து நம்மை மேம்படுத்துகிறது.

நன்றி.

No comments:

Post a Comment