“புதல்வா, அந்த ஆலமரத்தின் கனியைக் கொண்டு வா”
“இதோ தந்தையே...”
“அதைப் பிளந்துபார், என்ன காண்கிறாய்?”
“அணுநிகர் விதைகள் தந்தையே...”
“விதையினைப் பிளந்து பார், என்ன காண்கிறாய்?”
“விதைக்குள் ஒன்றுமில்லையே...”
“...நீ இங்கு காணாது போன நுண்மையே, இந்த மாபெரும் ஆலமரமாக ஆகியுள்ளது;
இப்பிரபஞ்சமாய் வியாபித்துள்ளது; நமக்குள் நிறைந்திருக்கிறது!”
- சாந்தோக்ய உபநிடதம்
இந்த அறிக்கையை எழுதும்போது அறிந்தே 2 விதிமீறல்களை செய்ய நேர்ந்தது. நிறுவனத்திலிருந்து டிசம்பர் 15ம் தேதிக்குள் ஆற்றுபடுதல் அறிக்கையை தரவேண்டும் என்ற கடிதம் வந்திருந்தும் இன்று, ஜனவரி 1ம் தேதிக்குத் தான் இதை எழுதவே ஆரம்பிக்கிறேன். எப்போது முடிப்பேன் என்று தெரியவில்லை. இப்போது கூட யதேச்சையாகத் தான் எழுத ஆரம்பித்திருக்கிறேன். மார்கழி மாதமென்பதால் எனது ஊர், காலை 5 மணிக்கெல்லாம் விழிக்க ஆரம்பித்துவிட்டது. ஒலிப்பெருக்கியின் சுப்ரபாதத்தால் எனது தூக்கம் கெட்டது. தூக்கத்தைத் தொலைத்த நான், எனது ஆற்றுப்படுதலை மீட்டெடுக்க இந்த அறிக்கையை எழுதும் பணியில் ஈடுபட நேர்ந்தது. ஏன் என்னால் நிறுவனத்திடமிருந்து வந்த கடிதத்துக்கு மதிப்பளிக்க முடியவில்லை? கூடுதல் பணிகள், நேரமின்மை என பல காரணங்களை எனக்கு சொல்லிக்கொண்டாலும், எனது காலதாமதத்தை எந்த குற்ற உணர்வுமில்லாமல் இயல்பாக எதிர்கொள்வது சரியெனப்படவில்லை. அரசுத்துறைகளில் இது போன்ற விதிமீறல், கடுமையான விளைவுகளைத் தரும். நிறுவனம் சார்ந்த, சுயக்கட்டுப்பாட்டுக்கும் சுதந்திரத்துக்கும் இடையேயான முரண்பாடுகள் பல நேரங்களில் அடிப்படைக் கேள்விகளை எழுப்புவதை தவிர்க்கமுடியவில்லை. இந்தப்போக்கு, மக்களாட்சியின் மிக முக்கியமான குறைபாடாகும். பெரும்பான்மையினர் செய்யும் தவறுகள், சகித்துக்கொள்ளப்படும் போது அது அச்சமுகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கலாச்சாரமாகவே மாறிவிடுகிறது.
அடுத்த விதிமீறல், எனது அறிக்கைக்கான மொழி. ஆங்கிலத்தில் எழுதவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட பின்னும், தமிழை நான் தேர்ந்தெடுத்துக்கொண்டது. இது எனது விருப்பத்துடன் நிகழ்ந்தது. வருடம் முழுவதும் பல கட்டாய தேவைகளுக்காக 100க்கும் குறையாத பக்கங்களை நான் ஆங்கிலத்தில் எழுத வேண்டியுள்ளது. குறைந்தபட்சம், இந்த ஆற்றுப்படுதல் அறிக்கை தமிழில் அமையும் போது, என்னால் என்னை இயல்பாக வெளிப்படுத்தமுடிகிறது. உள்ளுக்குள் உற்சாகமும் உண்மையாக ஆற்றுப்படுதலும் ஏற்படுகிறது. மேலும் இம்மாதக்கடைசியில் எங்கள் மண்டலத்தைச்சேர்ந்த வட்டாரங்களுக்கு நிறுவனப் பண்பாட்டு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அந்த சமயத்தில், எனது தமிழறிக்கை பயன்படும். அதனால் சற்றே உரிமையுடன் இந்த முறையும் தமிழில் எனது எண்ணங்களை மொழிப்பெயர்கிறேன்.
பெருங்கனவின் சிறுதுளி...
காலத்தைவிட காலம் வேகமாக நகர்கிற இச்சூழலில், நமது வாழ்க்கைக்கான வெளிச்சத்தைத் தரும் அனுபவங்கள் மூன்றாவது உலகத்திலிருந்து வருவதில்லை. நம்மைச்சுற்றி நிகழும் ஒவ்வொறு நிகழ்வும் ஏதோ ஒருவகையில் நமக்கான செய்தியைத் தாங்கித்தான் வருகின்றன. சென்ற வாரம் ஒரு மாலைப்பொழுதில், ஒரு பேக்கரி கடையில் இனிப்புகளை வாங்கிக்கொண்டிருந்தேன். கடையின் ஓரத்தில் பூச்சிகளைக் கொல்லும் மின்சார விளக்கு பொருத்தப்பட்டிருந்தது. இதற்கு முன் அக்கருவியை பல முறை, பல இடங்களில் பார்த்திருந்தாலும் அன்று அது என் கவனத்தைக் கவர்ந்தது. நான் அதனை கவனித்துக்கொண்டிருந்ததைக் கவனித்த கடைகாரர், “இந்த விளக்கு ரொம்ப நல்லா வேலை செய்யுது சார். முன்னாடி பூச்சித் தொல்லை தாங்கமுடியாது” என்றார். மனிதர்கள் தமது சுகவாழ்க்கைக்காக மற்ற உயிரினங்களின் இருப்பை கேள்விக்குறியாக்குவது என்ன நியாயம் என்று தெரியவில்லை. பூமியில் இருக்கும் உயிரினங்களில், மனிதன் மட்டுமே உலகத்துக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக்கொள்ளாமல், தனக்கு ஏற்றார்போல் உலகத்தை மாற்ற நினைக்கிறான். இந்த மனநிலை தான் நமது எல்லாப்பிரச்சனைக்கும் அடிப்படைப்புள்ளி.
உலகமெல்லாம் வலிமையுள்ளவனின் பெருங்கருணையினால் மட்டுமே சிறுபான்மை மக்களின் வாழ்க்கை நீடித்திருக்கும் நிலை பெரும்பாவம். இலங்கையில் சிறுபான்மை தமிழரின் வாழ்க்கை மீது வலிமையும் அதிகாரமுள்ள சிங்களவர் முடிவுகளெடுப்பதும் அவர்கள் மீதான வன்கொடுமையும் இந்தியாவுக்கு கீழே சிறு கண்ணீர்த்துளியாய் அமைந்திருக்கும் இலங்கைத் தீவின் உயிர்ச்சமநிலைக்கு விரோதமானது. முற்றிய இலவம்பஞ்சு வெடிக்கும் போது, காற்றின் போக்கில் பரவிச்செல்லும் பஞ்சினைப் போல இலங்கையின் தமிழ் மைந்தர்கள் உலகமெலாம் அகதிகளாக விரட்டப்பட்டது அயோக்கியத்தனம்.
நான் பணிபுரியும் திருவாலங்காடு வட்டார களஞ்சியத்தின் வட்டார செயற்குழு உறுப்பினரில் பத்மினி என்பவர் இலங்கை அகதி. அற்புதமான பெண்மணி. தாமே முன்வந்து வட்டாரப்பணிகளில் ஈடுபடுத்திக்கொள்பவர். அவர் சார்ந்திருக்கும் பகுதிக்கு இணையாளர் கிடைக்கவில்லை. கடந்த 6 மாதங்களாக, இவர் எந்த எதிர்பார்ப்புமின்றி அந்தப் பகுதியை சேர்ந்த குழுக்களின் கூட்டங்களை தாமே முன்வந்து நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் சிதறியுள்ள அவரது பிற உறவினர்களை சந்திக்க அடிக்கடி வெளியூர் சென்று வருவார். அவரது குடும்பம் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறு குடிலமைத்து வாழ்ந்து வந்தாலும், இதுவரை அவர்களுக்கு நிலஉரிமை வழங்கப்படவில்லை. “மரங்கள் ஓய்வை விரும்பினாலும்; காற்று சும்மா இருப்பதில்லை” என்பதைப்போல், அவருக்கு நமது தேசம் அமைதி தராவிட்டாலும், தொந்தரவு செய்யத் தவறுவதில்லை. தற்போது அவர் இருக்கும் இடத்திலிருந்து அவரது குடும்பத்தை அப்புறப்படுத்த உள்ளூர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவர் குடும்பம் யாரிடம் உதவிகேட்டு நின்றாலும், இரண்டாம்தர குடிமகனாக நடத்தப்படுகின்றனர். இலங்கைத்தமிழர் நம்மைச்சுற்றி விதைகளாக விழுந்து கிடந்தாலும், இன்னும் நமது மண்ணில் வேர்பிடிக்க முடியாத சூழல் வேதனைக்குறியது.
திருவாலங்காடு, பொது நேர்மை பற்றிய மிகச்சிறந்த நிகழ்வைத் தாங்கியுள்ள அற்புதமான கிராமம். 600 ஆண்டுகளுக்கு முன்னால் அடைக்கலம் தேடிவந்த ஒருவனின் உயிருக்கு திருவாலங்காட்டைச் சேர்ந்த பழையனூர் கிராம மக்கள் உத்திரவாதம் கொடுத்தனர். ஆனால் அடைக்கலமாய் வந்தவரின் உயிரைக் காக்கமுடியாமல் போனதால் ஊரிலுள்ள 64 குடும்பங்களின் தலைவர்கள் ஒன்று கூடி பொது இடத்தில் தீ வைத்து அனைவரும் தமது உயிரை மாய்த்துக்கொண்டனர். அவர்கள் தீ வைத்துக் கொண்ட இடம், நீலிக்கோவில் ஆகியவற்றின் படிமங்களைத் தேடி நானும் தங்கபாண்டியனும் சென்ற போது பெய்த பெருமழையும் கடுங்காற்றும் இன்று நினைவுக்கு வருகிறது. யாரோ முகமறியாத நபருக்கு ஊரே உயிரைக் கொடுத்த பண்பு நீர்த்துப்போய் வருவது பாரம்பரியத்தின் மீதான கரையாகும்.
மக்களைப் போற்றுதும்...
உண்மையில் திருவாலங்காட்டில் களஞ்சியத் திட்டத்தில் பொறுப்பெடுப்பதற்கு முன்னால் எனக்கு குறுநிதித்திட்டத்தின் மீது பெரிய நம்பிக்கை இருந்ததில்லை. நான் இங்கு சேர்ந்த முதல் மாதத்தில் தொடர்ச்சியாக பகுதி மகாசபை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் நான் சந்தித்த நிகழ்வுகள், மக்கள் களஞ்சிய அமைப்பின் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் உடைமையையும் எனக்கு போதித்தது.
கனகம்மாசத்திரம் பகுதி விழாவின் போது, ஒரு உறுப்பினரின் மகன், முளைப்பாரியை அலங்கரிக்க பூக்கள் எடுத்துவர தோட்டத்துக்கு சென்ற போது பாம்பு கடித்துவிட்டது. அந்த நிலையிலும், அவர் தமது மகனை உறவினர்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு நமது பகுதிவிழாவில் கலந்து கொண்டார் என்பதை அவருடன் உரையாடியபோது தெரிந்ததும் எனக்கு சிலிர்த்தது. நிச்சயம் என்னால் அது போன்ற சூழலில் அவரைப்போல் இருந்திருக்க முடியாது. அவருக்கு இந்த நம்பிக்கையும் சக்தியையும் கொடுத்தது எதுவெனப் பார்த்தால், நமது களஞ்சியத்தின் கண்ணுக்குத் தெரியாத சக்தி விளங்கும்.
இதேபோல், லட்சுமாபுரம் பகுதியின் விழாவின் போது பந்தல் அமைக்க பணியாளர்கள் வராத நிலையிலும், களஞ்சிய பொறுப்பாளர்களே அதிகாலையிலிருந்து பந்தல் அமைத்து சிறு காயங்கள் பட்டது, சின்னம்மாபேட்டை பகுதி விழாவின் போது 100 பேர் மட்டுமே அமரக்கூடிய சமுதாயக்கூடத்தில் மின்சாரமில்லாமல் 300க்கும் குறையாத உறுப்பினர்கள் வேர்வை சொட்டச்சொட்ட நிகழ்ச்சி முடியும் வரை அமைதி காத்தது, நெமிலிப்பகுதியில் டேப்ரிக்காடரில் இசைத்த களஞ்சியப்பாடலுக்கு டயனாஸ்டிக் மனநிலையில் 50 வயதுக்கும் மேற்பட்ட களஞ்சிய உறுப்பினர்கள் சிலர் தம்மை மறந்து ஆடிமகிழ்ந்தது என வட்டாரம் நடத்திய 8 பகுதிவிழாக்களும் எதாவது ஒரு நற்செய்தியை, மக்களின் ஆற்றலை எனக்கு உணர வைத்தது.
உண்மையில் திருவாலங்காடு வட்டாரத்துக்கு மதுரையை சுற்றியிருக்கிற வட்டாரங்கள் நிறுவனத்திடமிருந்து பெற்ற உதவிகளை விட மிகக் குறைவான உதவிகளே வந்துள்ளது. கண்மாய் பாசனத்தில், கடைக்கோடி வால்பகுதியிலுள்ள நிலத்துக்கு நீர் எப்படி குறைவாகப் போய்ச்சேறுமோ அதேபோல், தமிழ்நாட்டின் வடக்கு மூலையில் உள்ள இந்த வட்டாரத்துக்கு சென்ற ஆண்டு நமது நிறுவனக் காலெண்டர் கூட வந்து சேரவில்லை. இந்த வட்டாரம், வங்கியிணைப்பு, குடிமைத்திட்டங்கள் என பல விதங்களில் சராசரியைவிட பின்தங்கியே இருக்கிறது. இந்த நிலையிலும் மக்களிடம் மனவெழுச்சியையும், நன்நம்பிக்கையையும் விதைத்ததில் களஞ்சிய பணியாளர்களின் பங்கு மகத்தானது. இந்த வட்டாரத்தின் 8 பணியாளர்களில் 5 பேர் 9 வருடத்துக்கும் மேல் பணிபுரிபவர்கள். தானம் அறக்கட்டளைப் பணியாளர்கள் இங்கு இல்லாத நிலையிலும் வட்டாரத்தை உயிர்பிடிக்க வைத்ததில் இவர்களின் பங்கு சத்தியமானது.
இந்த அனுபவங்களையெல்லாம் காணும் போது, எனக்கு மக்களின் மீது நம்பிக்கை பிறக்கிறது. நாம் செய்வதை செம்மையாகச் செய்தால், மக்கள் நம்மைக் கொண்டாடுவார்கள். சமுகம் நமது எல்லா கேள்விகளின் ஊற்றுக்கண்ணாகவும், விடையாகவும் அமைந்திருப்பதை உணரமுடிகிறது. நிறுவனம் பற்றி தவறான எண்ணங்கள், வதந்திகள், தேவையற்றப் பேச்சுக்கள் ஒளியின் வேகத்தில் பரவும் அதே சமயத்தில் நமது சாதனைகள், மக்களின் ஆக்கப்பூர்வ மதிப்பீடுகள், வளர்ச்சிக்கு நாம் செய்து வரும் பங்களிப்புகள் நத்தையின் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
ஈரானில் சென்ற வருடத்தின் ஒருநாளில், தீவிரவாதத் தாக்குதலால் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆனால் அடுத்த நாள் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் ஈரான் குடிமகன் ஒருவர் தமது சமுகப்பணிக்காக தேசியவிருது பெறும் நிகழ்வு படத்துடன் இடம்பெற்றிருந்தது. தேசத்தை உலுக்கிய தீவிரவாதத் தாக்குதல் 3வது அல்லது 4வது பக்கத்தில் அச்சிட்டிருந்தனராம்.
இந்த செய்தி எனக்கு முக்கியமானதாகப்பட்டது. மனிதன் நம்பிக்கையிழக்கும் போதும், பயம் அவனை ஆட்கொள்ளும்போதும் நல்லெண்ணத்தை விளைவிக்கும் நற்செய்தியை முக்கியத்துவப்படுத்துவது அவசியமெனப்படுகிறது. நற்செய்தி மக்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். மாறாக பிரச்சனைகளை, தவறுகளை பெரிதுபடுத்தி அதையே பரப்பும் போது, நமது சக்தி நீர்த்துப்போவதை தவிர்க்கமுடியாது. மக்களைப் போற்றுவோம். நமது நிறுவனப்பெருமை குறித்தும், பங்களிப்பு குறித்தும் பெருமிதம் கொள்வோம். நல்ல செயல்களை வாய்ப்பு கிடைக்கும் எல்லா இடங்களிலும் உரத்து கூறுங்கள். குளத்தில் எறிந்த கல்லைப்போல சமூகத்தின் எல்லாப் பக்கங்களுக்கும் அலையாய் பரவிச் செல்லட்டும். தவறு மற்றும் பிரச்சனைகள் பற்றி விளக்கமுற்படாமல் அதைத் தீர்க்கும் முயற்சிகளில் சிறு பங்கினையாவது எடுப்போம்.
மனிதன் படைத்தக் கடவுள்...
கடந்த 4 ஆண்டுகளாக நான், கிரண் மற்றும் ஆசைத்தம்பி ஆகியோர் வருடத்துக்கு ஒருமுறை 2 - 3 நாட்கள் தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாய் அதிகம் அறிப்படாத சிவஸ்தலங்களுக்கு சென்று வருகிறோம். இந்தப் பயணம் உள்ளார்ந்த புத்துணர்ச்சியையும் சுயம் சார்ந்த ஆற்றுப்படுதலையும் எமக்கு தருகிறது. கடந்த 2 நாட்கள், திருவாரூர் பக்கமுள்ள சில கோவில்களுக்கு சென்றுவந்தோம். திருமுக்கூடல், கோவில்வன்னி போன்ற 1000 வருடங்கள் பழமையான, பாடல்பெற்ற, பெரிய மகான்கள் வந்து சென்ற, இலட்சக்கணக்கான மக்களுக்கு ஆறுதலளித்த கோவில்கள் இன்று விளக்கு எரிக்கக்கூட எண்ணெய் இல்லாமல் முற்றாக சிதிலமடைந்து இருப்பதைக் காணும் போது பெருஞ்சோகம் ஏற்படுகிறது. ஒருகாலத்தில் உள்ளூர் மக்களின் உழைப்பால் கட்டப்பட்ட கோவில்களில் இன்று மக்கள் தினசரி வருவது கூடக் கிடையாது. கோவில் பராமரிப்பில் உள்ள அரசியல் தந்திரங்கள் மக்களாட்சி மீது விரக்தியை தந்தன.
இந்த சமயத்தில் எனக்கு டெல்லியில் உள்ள சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்பில் கட்டப்பட்ட சுவாமி நாராயணா கோவில் ஞாபகம் வருகிறது. 4 நூற்றாண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் வாழ்ந்த ஒரு நாராயணன் என்ற முற்றும்துறந்த துறவியின் பற்றற்ற வாழ்க்கைப் போதனைகளை நமக்கு எடுத்துச்சொல்ல இது போன்ற ஆடம்பரம் தேவைப்படுகிறது. அந்தக் கோவிலில் இருந்தபோது, அமைதிக்கு பதிலாக காரணமறியாத வெறுமை தான் எனக்கு ஏற்பட்டது. 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சொத்தை பாதுகாக்க ராணுவ பகுதியில் நுழைவதற்கு செய்யப்படும் சோதனைகளைப் போல் பல கட்டங்களில் பல வித ஆய்வுக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்படும் போது, இந்த பணத்தைக்கொண்டு எத்தனை குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதிசெய்திருக்க முடியும், எத்தனை குழந்தைகளுக்கு கல்வி தந்திருக்க முடியுமென்று மனது கணக்கிட்டது. வாழ்க்கைக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் தரவேண்டிய எளிமையான ஆன்மீகம், கண்முன்னே வர்த்தகமாக்கப்பட்டு; பின் அரசியலாக்கப்படும் போக்கு வேதனையாக உள்ளது.
மக்களால் மக்களுக்காக...
நமது நிறுவனம் இந்த ஆண்டை அடித்தள மக்களாட்சியை மையமாகக் கொண்டு செயல்படவிருப்பதை அறிந்தேன். நான் உள்ளாட்சித்துறை சார்ந்து செயல்பட்டு வருவதால் மக்களாட்சித் தத்துவம், அதன் போக்குக் குறித்து அடிக்கடி சிந்திப்பதுண்டு. இன்றைய தேதிக்கு நமது தேசத்தில் மக்களாட்சி செத்துவிடவில்லையென்றாலும் தீவிரச்சிகிச்சைப் பிரிவில் இருப்பதை மறுப்பதற்கில்லை. திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமது கட்சிக் கரை வேட்டியை மாற்றிக்கட்டிக்கொள்வதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவில் தேர்தல் நடத்திய வித்தியாசமான ஜனநாயகம் நமது ஜனநாயகம்.
உண்மையில் மக்களாட்சி என்பது நல்ல நிர்வாகத்துடனோ நற்செயலுடனோ தொடர்புடையது அல்ல. அது, உள்ளூர் சமூகத்தின் விருப்பு வெறுப்புகளை சார்ந்த மக்கள் ஆமோதிப்புடன் கூடிய நிர்வாக முறை. எல்லா மக்களும் பணத்தை வாங்கிக்கொண்டு தான் ஓட்டு போடுவோம் என ஒத்துக்கொண்டால், அதனை கொள்கையளவில் சரியான மக்களாட்சி முறையாகத் தான் கருதவேண்டும். எல்லாக் கட்சியிலும் அதிகாரப்பொறுப்பில் இருக்கும் குடும்பங்களுக்குள்ளேயே அதிகாரம் மேலும் குவிக்கப்பட்டு வரும் போக்கு மன்னராட்சியின் மறுவார்ப்பாக மாறி வருகிறது. ஊடக பலம், பண பலம், ஆள் பலம் இருந்தால் இந்த மக்களாட்சியில் எதுவும் செய்ய முடியும் என்றாகிவிட்ட இந்தச் சூழ்நிலையில் மக்களாட்சி பற்றிய சரியான புரிதலை மக்களிடம் விதைக்க வேண்டியது நமது கடமை. ஒரே கத்தி, கொள்ளைக்காரனிடம் இருந்தால் உயிரை எடுக்கவும், மருத்துவரிடமிருந்தால் உயிரைக் காக்கவும் பயன்படுபவதைப்போல, நேர்மையும் நல்லெண்ணமும் கொண்ட சமூகத்தில் மக்களாட்சி முறை பெரும்பயன் தரும். அதனை உறுதி செய்வதில் நமக்கிறுக்கும் பொறுப்பை வரும் ஆண்டு உணர்த்தும் என எண்ணுகிறேன்.
பொங்குமாக்கடல்...
ஒருமுறை ஆசைத்தம்பியின் வீட்டுக்கு சென்றபோது, சாத்வீகா (அவர்களது குழந்தை), என்னிடம் வந்து எனது பேனாவினை எடுத்துக்கொடுத்து தனது உள்ளங்கையில் ஆட்டுக்குட்டியின் படத்தை வரையுமாறு சொன்னாள். நானும் தலை, உடல் வால் என்று அந்தச் சின்னக்கையில் ஆட்டினுடைய படத்தை வரைந்தேன். நான் வரைந்த படத்தைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்த அவள், இது ஆட்டுக்குட்டியில்லை, கோழி என்று சொல்லிவிட்டு அதனை மற்றவருக்குக் காட்ட ஓடினாள். எனக்கு ஆடுபோல் தெரிந்த அந்தப்படம் அவளுக்கு கோழியாக தெரிந்திருக்கிறது. 3 வயது குழந்தையின் பார்வையும் எனது பார்வையும் வேறுபடுகிறது என்றால், இந்த ஜனத்திரளின் கருத்து வேறுபாடுகளுக்கு அளவேது. எல்லா நிகழ்வுகளும் வெற்றிகளும் தோல்விகளும் நதியைப்போல வெளியிலிருந்து அனுபவமாய் மனக்கடலுக்குள் கலக்கிறது. மனக்கடல் அனுபவங்களின் வாயிலாக பொங்கியடங்குகிறது. கீதை, பரம்பொருளை கடலாகவும் உயிரினத்தை நதியாகவும் உருவகப்படுத்தியிருக்கும். எப்படி நதி கடலுடன் கலந்து தனது தன்மையை இயல்பாக மாற்றிக்கொள்கிறதோ அதேபோல் வெளி அனுபவங்கள் மனமென்னும் பொங்குமாக்கடலில் கலந்து சிறு அலைகளாக, ஆழிப்பேரலையாக எனது செயல்பாடுகளின் வழியே வெளிப்பட்டு நன்மையையும் சிதைவையும் ஒருங்கே தருகின்றன. “தாமே தமக்குச் சுற்றமும்; தாமே தமக்கு விதிவகையும்” என்ற மாணிக்க வாசகம் மட்டுமே உண்மையென உள்ளம் உரத்துக்கூறுகிறது.
*******************
களவாடிய பொழுதுகள்...என்னுடைய பெயர் ஜானகிராமன். திருவள்ளூர் மாவட்டத்தில் தானம் அறக்கட்டளைப் பணிகளை ஒருங்கிணைத்தும் பஞ்சாயத்து திட்டத்தின் திட்டஅணி உறுப்பினராகவும் செயல்பட்டு வரும் எனது சொந்த ஊர் திருத்தணி. அப்பா, எங்கள் ஊரில் உள்ள நிலவள வங்கியில் செயலராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். அம்மாவும் எனது மனைவியும், வீட்டுப் பணிகளை நிர்வகித்து வருகின்றனர். எனது ஒரே தம்பி, சென்னையில் வழக்கறிஞராக இருக்கிறான். இந்த சிறிய குடும்பம் எனக்களித்துள்ள அன்பும், என் மீதான நம்பிக்கையும், அவர்கள் எனக்களித்த சுதந்திரமும் மிகப்பெரியது.
மருந்தியல் பட்டத்திற்குப் பின் அரசுப்பணி ஆர்வத்தினால், இந்திய குடிமை பணிகளுக்காக என்னை தயார் செய்து கொண்டிருந்தேன். கூடவே அஞ்சல் வழியில் பொது நிர்வாகத்தில் முது நிலை பட்டப்படிப்பையும் முடித்தேன். தொடர்முயற்சியின்மையினால் குடிமைப் பணியில் நான் தேர்ச்சிப்பெற முடியவில்லை. ஆனால், அந்த காலக்கட்டத்தில், நான் படித்த, கற்றுக் கொண்ட பல விஷயங்கள், எனக்குள் ஓர் பரவலான அறிவுத்தளத்தை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக இந்திய அரசியல் மற்றும் சமுகம் சார்ந்த அறிவு விரிவானது. அந்த சமயத்தில் டாடா - தான் அகடமியின் அறிமுகம், தன்னார்வத் துறை பற்றிய வாசலைத்திறந்து வைத்து வளர்ச்சி மிகச்சரியான புரிதலை எனக்குள் ஏற்படுத்தியது. அகடமியில் படித்தப்பிறகு பஞ்சாயத்து திட்டத்தின் வத்தலகுண்டு கள அலுவலகத்தில் 3 ஆண்டுகள், பஞ்சாயத்து திட்ட அலுவலகத்தில் 3 ஆண்டுகள், தற்போது திருவாலங்காட்டில் 6 மாதங்கள் என பணியாற்றி வருகிறேன்.
எனக்கு புத்தகம் பிடிக்கும். பள்ளி காலத்தில் கல்கியுடைய சரித்திர நாவல்களை இரவு பகல் பார்க்காமல் படித்து என்னை நானே வந்தியத்தேவனாகவும் நரசிம்ம பல்லவனாகவும் கற்பனை செய்து, எனது தம்பியுடன் காகிதக்கத்தியில் சண்டைப்போட்ட காலத்திலிருந்து அடுத்தடுத்து நகர்ந்து எனது கற்றலை பல தளங்களுக்கு விரிவு செய்து வருகிறேன். தத்துவம், தலைவர்களின் வாழ்க்கை, இணைய இலக்கியம் போன்றவை எனது விருப்பத்துறைகள்.
தானம் அறக்கட்டளையுடனான எனது 7 ஆண்டுகால உறவு, எனது பார்வையில், எனது வாழ்க்கைமுறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தித்தானிருக்கிறது. நிறைய நண்பர்கள், அக்கறையுள்ள உயர்பணியாளர்கள், நிறுவனத்தின் தனித்துவம், தொழில்முறை பணிச்சூழல் என பல வகைகளில் எனக்குள் தானம் குழுமம் கரைந்துள்ளது. இங்குள்ள சுயக்கட்டுப்பாடுடன் இணைந்த சுதந்திரம், ஒவ்வொறு வினாடியும் கற்றல் வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு எனது பணிப்பொறுப்பில் மாற்றம் நிகழ்ந்தது. எனது தனிப்பட்ட காரணங்களுக்காக என்னுடைய சொந்த ஊருக்கு (திருத்தணி) நான் கேட்டிருந்த பணி மாற்றலை ஏற்றுக்கொண்டு அதற்கு வழிகோலிய எனது திட்டத்தலைவர் மற்றும் நமது செயல் இயக்குநருக்கு நன்றி. இங்கு வந்த பின் குடும்ப அளவிலான சில சிக்கல் தீர்ந்து அமைதி ஏற்பட்டுள்ளது. ஆனால் இங்கு எனது பணியின் தன்மை இருமடங்காகியுள்ளது. குறிப்பாக கடந்த மூன்று மாதங்கள் மிகக் கடினமாகவும், பயணங்கள் நிறைந்ததாகவும் இருந்து வந்துள்ளது. எனது பணியினை சீரமைத்துக் கொண்டு முறைப்படி திட்டமிட வேண்டினாலும், இயல்பாக அடுத்தடுத்து வரும் பணிகள் எதையும் யோசிக்கவிடாமல் என்னை இழுத்துச்செல்கிறது. எனது தாய்த்திட்டமான பஞ்சாயத்து திட்டத்துக்கு கடந்த 5 மாதங்களாக பெரிய பங்களிப்புச் செய்யவில்லை என்றாலும் எனது நிலையைப் புரிந்துகொண்டு பஞ்சாயத்து திட்டப் பொறுப்புகளை பகிர்ந்துகொள்ளும் திரு.சிங்கராயர் மற்றும் பஞ்சாயத்து அணியினரின் அன்புக்கு நன்றி. எட்டுக்கால் பூச்சிப்போல பல திட்டப்பொறுப்புகளில் தலையைக்கொடுத்து எல்லாத் திசையிலும் பயணித்து எந்த திசையிலும் முன்னேறாமல் இருப்பது போல் இருக்கிறது. இதனை உடனடியாக சீர் செய்து கொள்ள வேண்டும். தற்போதய நிலையில் எனது மண்டலத்தை நேர்படுத்தி, முன்னோடித் திட்ட அலகுகளை ஏற்படுத்துவதும், பஞ்சாயத்து திட்டத்தை விரிவாக்க நிலைக்கு முன்னெடுத்துச் செல்வதில் என்னை ஈடுபடுத்திக்கொள்வதும் மட்டுமே முக்கியமானதாகப் படுகிறது. வரும் ஆண்டில், இதைச் சார்ந்து எனது பணியினை திட்டமிட்டு கொள்ள எண்ணியுள்ளேன்.
*****************
No comments:
Post a Comment