“மலைகள் நீந்திக் கொண்டுருக்கின்றன;
ஆறு சலனமற்று இருக்கிறது”
இரண்டு மாதத்திற்கு முன், ஓர் பின்மாலை நேரத்தில் மக்கள் கல்வி நிலையத்திலிருந்து மதுரைக்கு வர வேண்டியிருந்தது. விரும்பியே நடைபயணத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு விலக்குச் சாலைக்கு தனியாக நடந்து வந்து கொண்டிருந்தேன். கண் முன்னால் வெளிச்சம் குறைந்து இருள் போர்த்திக் கொள்ளும் அந்தத் தருணம் ஆச்சரியமாக இருந்தது. தூரமும் நீண்டு கொண்டே இருப்பதாகபட்டது. முன்பு அகாடமியில் படிக்கும் பொழுது வாரம் ஒருமுறைக்கு குறையாமல் இது போல் நடந்து சென்று கொண்டு இருப்போம். அப்போது தெரியாத தூரம், தற்போது தெரிய ஆரம்பித்த போது தான், எவ்வளவு தூரம் இயற்கையை விட்டு விலகி விட்டேன் என்பது புரிந்தது. தேய்பிறை நிலா சில நட்சத்திரங்களுடன் கூட வந்து கொண்டிருந்தன. இது போல், நிதானத்துடன் வானத்தைப் பார்த்து சில ஆண்டுகள் ஆகியிருக்கும் என என் மனது சொல்லியது. நாம் விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகளில் நாமே சிறை வைக்கப்பட்டது போலிருந்தது. நான் அன்று பார்த்த அதே தேய்பிறை நிலாவைத் தானே புத்தரும், கிருஸ்துவும், காந்தியும் பார்த்துப் இருப்பார்கள்? யுகசாட்சியாய், அன்றிலிருந்து இன்றுவரை இருந்துவரும் வானம், நிலா, நட்சத்திரம் எல்லாம் எனக்கு இயற்கை மீது பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. நாவுக்கரசர் போல், உலன் எனில் உலன்; இலன் எனில் இலன் என்று உலக உயிர்க்கெல்லாம் ஆதாரமாக விளங்கும் ஓர் பரம்பொருளை நெஞ்சம் நினைத்துக் கொண்டது.
பிறகு விலக்குச் சாலையில் கிடைத்த வண்டியை பிடித்து, வத்தலகுண்டு வந்து சேர்ந்து, தூங்கி விழித்து, வழக்கம் போல் அடுத்த நாள் வேலைகளில் ஈடுபட்ட பின் நிலா, வானம், நடைப்பயணம் எல்லாம் மறந்து போய் இருந்தது.
இப்படித்தான் பெரும்பாலும் நிகழ்ந்து விடுகிறது. ஓர் விபத்தாகத்தான் சுயத்தைப் பற்றி திரும்பிப் பார்க்கும் தருணங்கள் கிடைக்கின்றன. நாமாக விருப்பப்பட்டு நம்மை நமக்குள் ஆழமாக பார்த்துக் கொள்ளும் வாய்ப்புகளை நாம் என்றுமே வைத்துக் கொண்டதில்லை. அனுபவம் என்பது மக்களை, நகரங்களை, இயற்கையை காண்பது மட்டும் அல்ல. வாழ்வின் இயக்கமே அனுபவம் தான் என்று அன்றைய நடைப்பயணம் எனக்கு உணர்த்தியது. ஒவ்வொரு மனிதனும் கண்ணுக்குப் புலப்படாத ஓர் சிறகை கொண்டுருக்கிறான். அது அவனை ஓரு வயதிலிருந்து இன்னொரு வயதுக்கு, மெதுவாக கொண்டு செல்கிறது. துக்கத்திலிருந்து சந்தோஷத்திற்கும், அறியாமையிலிருந்து விழிப்புக்கும், அறிந்ததிலிருந்து ஞானத்திற்கும் என அதன் சிறகுகள் அசைந்தபடி இருக்கின்றன (எஸ். ராமகிருஷ்ணன்) ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் நாம் ஆற்றுப்படும் போது, நமது உள்ளுணர்வில் சிறகுகளின் மாற்றம் நமக்கு பார்க்கக்கிடைக்கும். சித்தார்த்தனுக்கு 20 வருட தவம் தராத மெய்ஞானத்தை அவன் தன் தவத்தை துறந்து போதிமரத்தின் கீழ் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டிருக்கும் போது சட்டென மின்னலாய் மெய்ஞானம் அவனுள் இறங்கி அவனை புத்தனாக்கிய ஆற்றுப்படுதலை, செயலற்ற செயலின் உச்ச இயக்கமாக லாவோட்சு உரத்து கூறிவந்தார்.
தானம் அறக்கட்டளையில், நமக்கு இது போன்ற ஆற்றுப்படுதல், ஒர் நிறுவன நிகழ்வாகவே அமைந்துள்ளது. இந்த அற்புத வாய்ப்பை, எல்லா கடற்பருந்துகளும் தமது இரையினைத் தேட கொடுக்கப்பட்ட கருவியாக சிறகினை பார்த்த போது ஜொனாதன் லிவிங்ஸ்டன் என்ற கடற்பருந்து மட்டும் பறப்பதை ஓர் தவமாகச் செய்ய கிடைத்த வரமாக சிறகுகளை கண்டது போல், இதனை, நிறுவனம் எனக்குப்பணித்த பணியாக எண்ணாமல் எனது உள்முக பயணத்தை முன்னெடுத்துச்செல்லும் வாய்ப்பாக நான் ரசித்து செய்யவே விரும்புகிறேன். விருப்பு வெறுப்பற்று, என்னை நானே ஓர் மூன்றாவது நபராக நிறுத்தி கடந்த காலத்தின் எனது செயல்களை தொகுத்துப் பார்த்துக் கொள்ள முயற்சிக்கிறேன். ஏனெனில் சலனமற்ற நதியில் தான் அருகிலிருக்கும் மலை நீந்தும் அதியசம் நடக்கிறது!
“...முன் கதை சுருக்கம்...”
என்னுடைய பெயர் ஜானகிராமன். வத்தலகுண்டு ஒன்றியத்தில், பஞ்சாயத்து திட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளாக திட்ட நிர்வாகியாக பணிபுரியும் எனது சொந்த ஊர் திருத்தணி. அப்பா, எங்கள் ஊரில் உள்ள நிலவள வங்கியில் செயலாளராகவும், அம்மா, வீட்டு நிர்வாகியாகவும் இருக்கிறார்கள். ஒரே தம்பி, சென்னையில் வழக்கறிஞராக இருக்கிறான். இந்த சிறிய குடும்பம் எனக்கு தந்துள்ள அன்பும், நம்பிக்கையும் மிகத்தித்திப்பானவை. அவர்களின் சுதந்திரமே என்னை ஒழுங்குப்படுத்தியுள்ளது என நினைக்கின்றேன். எனது மருந்தியல் பட்டத்திற்குப் பின் அந்தத்துறையின் மீதான காரணமற்ற நாட்டமின்மையாலும், பொது பணி ஆர்வத்தினாலும் இந்திய குடிமை பணிகளுக்காக என்னை தயார் செய்து கொண்டிருந்தேன். கூடவே அஞ்சல் வழியில் பொது நிர்வாகத்தில் முது நிலை பட்டப்படிப்பையும் முடித்து இருந்தேன். இயல்பான எனது சோம்பலினாலும், வழிகாட்டுதலில்லாததினாலும் குடிமைப் பணியில் என்னால் தேர்ச்சிப்பெற முடியவில்லை. ஆனால், அதற்காக நான் கற்றுக் கொண்ட பல விஷயங்கள், எனக்குள் ஓர் பரவலான அறிவு தளத்தை ஏற்படுத்தியிருந்தது.
அப்பொழுதெல்லாம் எதைப் பற்றியும் குறைந்த பட்சம் 5 நிமிடம் பேசக்கூடிய திறமை என்னிடம் இருந்ததாகவே நினைக்கின்றேன். ஆனால் பலவிதமான பொருள்கள் பற்றிய எனதறிவு பரவலானதே தவிர, எதிலும் ஆழமாக செல்ல முடியவில்லை. அச்சமயத்தில் நான் படிக்க நேர்ந்த அறிவுமதியின், “இந்தகாட்டில், எந்த மூங்கில், புல்லாங்குழல்?” என்ற கவிதை என்னைப் புரட்டிப்போட்டது. நான் மூங்கிலாகக்கூட அல்ல, வெறும்தக்கையாக இருந்ததாகவே உணர்ந்தேன். ஒரு 5 வார்த்தைகவிதை எனக்கான இடத்தை இந்த யதார்த்த உலகில் தேட வைத்தது. அப்போது கண்ணில்பட்ட டாடா - தான் அகாடமியின் விளம்பரம் இப்போது உங்களுடன் என்னை பகிர்ந்து கொள்ள வைத்துள்ளது.
5 ஆண்டுகால தானம் அறக்கட்டளையுடனான உறவு, எனது பார்வையில், எனது வாழ்க்கைமுறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தித்தானிருக்கிறது. முன்பு ஒரு சாதாரண விதையை - விதையாகவே பார்த்த நான் இப்போதெல்லாம் அந்த விதைக்குள் இருக்கும் வனத்தை பார்க்கும் அவதானிப்பு கூடியிருக்கிறது. இங்கு, இயல்பாகவே கற்றல், பிரதிபளித்தல், ஆற்றுபடுதல் ஆகியவை எந்த தூண்டுதலுமில்லாமல் தானாக நிகழும் சுவாசத்தை போலாகிவிட்டது.
“...காடு திறந்து இருக்கிறது...”
ஏதோ ஓரு வீம்புக்காக இந்த முறை, எனது ஆற்றுபடுதலுக்கான அறிக்கையை தமிழில் எழுத முடிவெடுத்து அதற்காக அனுமதியையும், உற்சாகத்தையும் திரு.வாசி அவர்களின் மூலம் பெற்றுக் கொண்டாலும், எழுத உட்கார்ந்த போது தான், தமிழ் சுலபமில்லை என உணர முடிந்தது. மார்கழி மாதத்தின் காலை குளியலின் போது, முதல் குவளை தண்ணீரில் உடலை நனைக்க முற்படும் போது ஏற்படும் நடுக்கமும், தயக்கமும், நான் பேனா பிடித்து முதல் வார்த்தை எழுத எத்தனிக்கும் போதும் ஏற்பட்டது. பலமுறை அறிக்கை எழுதும் பணியை ஒத்தி வைத்தேன். ஆனாலும் வேறு வழியில்லாததாலும், காலண்டர் தேதிகள் எழுதித்தான் ஆக வேண்டும் என்று நிர்பந்தித்ததாலும் எழுத ஆரம்பித்தேன். கடந்த 5 வருடங்களாக தமிழ் பழகும் வாய்ப்புகள் எனக்கு குறைவாகவே இருந்தது. மேலும் அலுவலகத்தில் கணிணி மூலம் எல்லா அறிக்கையும் ஆங்கிலத்தில் ஏற்றி வருவதால், எனக்குள் இருந்த தமிழ் மீதான ஆளுமை விரைத்துபோயிருந்தது. ஸ்பார்டகஸ் படத்தின் “எங்கு நமக்கு விருப்பமான, எளிமையான செயலைச்செய்ய கடுமையான உயிர்வலியும் வேதனையும் ஏற்படுகிறதோ அதுவே நரகம்” வசனம் போல, தொழில்நுட்ப முன்னேற்றங்களால் நாம் இழந்த திறன்களை உயிர்பிக்கும் போது ஏற்படும் தவிப்பை திரும்பவும் தீவிரமாக தமிழில் எழுதும்போது உணர்ந்தேன்.
ஆனாலும் வெளியிலிருந்து பார்க்க காடு அடர்ந்து ஓர் பச்சை கோட்டையாய், புதிராக இருந்தாலும் அருகே செல்லச் செல்லச் அதன் கதவுகள் திறந்து வழி தெரிவது போல், இந்த அறிக்கையை எழுதத் தொடங்கிய பின், உடலில் ஒட்டிக்கொண்ட மச்சமாய், எனது மொழிநடையில் ஒட்டிக்கொண்ட வல்லின-இடையின குழப்பங்களைத்தவிர மற்றபடி எனது மொழி என்னுடன் ஒத்துழைத்ததாகவே கருதுகிறேன். எனது சுய பரிசோதனைக்காக நான் முயற்சித்த இந்த பத்தியை எழுதி முடித்த போது, எனக்குள் யார் யாரோ ஓளிந்திருந்தும், தொடர்ச்சியான சம்பவங்கள் அலை போல் மாறி மாறி வந்ததும் அதிசயமாக இருந்தது. நிச்சயம் நான் என்பது நான் மட்டுமல்ல, எல்லாரும் சேர்ந்த கலவைதான் என்றுணர முடிந்தது.
“...காற்றில் கரைந்த பேரொலி...”
ஏறக்குறைய கடந்த ஆண்டின் 8500 மணி நேர வாழ்க்கையை தொகுத்துப் பார்க்கும் போது வெறுமைதான் எஞ்சுகிறது. எல்லா நேரமும் எதாவது ஒன்றை செய்து கொண்டு, தீவிரமாக இயங்கிகொண்டு இருந்தாலும், கடைசியில் என்னதான் செய்தோம் என்று தொகுத்துப் பார்க்கும் போது, ஏதோ குறைவதாகவே படுகிறது. செய்து முடித்த பணிகளை தொகுத்து பார்க்கும் போது நான் நினைத்த திட்டத்திற்கும், செய்து முடித்தவைகளுக்கும் இடையே பெரிய இடைவெளியை உணர முடிகிறது. ரன் லோலா ரன் படத்தில் வருவது போல், திரும்பவும் காலஅதிர்ச்சி ஏற்பட்டு சென்ற ஆண்டின் தொடக்கத்திற்கு சென்று, செய்யத் தவறிய செயல்களை திரும்பவும் திருத்தி செய்ய மாட்டோமா என்ற ஏக்கம் ஏற்படுகிறது. எனது எல்ல செயல்களும் - நொடி நேரத்தில் காற்றில் கரைந்து காணாமல் போய் விடுகின்ற பேரொலியைப் போல், காலத்தின் அறியாக்குகையில் காணாமல் போய்விட்டதான பிரமை ஏற்படுகிறது.
எல்லா ஓசையும் கரைந்து விட்டாலும், இனிய ஸ்வரங்கள் நமது காதுக்குள்ளேயே திரும்பத் திரும்ப ஒலிப்பது போல், நல்ல ரம்மியமான மனநிறைவான செயல்களும் கடந்த ஆண்டில் நடந்தும் இருக்கிறது.
குறிப்பாக எங்கள் பஞ்சாயத்து திட்டத்தில் எங்கள் அணியினருக்கு நடந்து முடிந்து தேர்தலின் மூலம் மிக சிறப்பான படிப்பினைகள் கிடைத்துள்ளன. சமூகத்தின் யதார்த்தத்தினை புரிந்து கொள்வதற்கான அரிய வாய்ப்பாக அது வாய்த்தது. பணியின் கடுமையை உணர்ந்து அதற்கேற்ற திட்டம் வகுத்துக் கொள்வதற்கும் இந்த தேர்தல் உதவியுள்ளது. இது தவிர, எங்கள் திட்டம் சென்ற ஆண்டு ஓர் தீவிரமான மறுஆய்விற்கு உட்படுத்தப்பட்டு புதிய செயல்பாடுகளுக்கான பொருள்களையும் ஏற்கனவே செய்து வரும் செயல்பாடுகள் பற்றிய கொள்கைசார் தெளிவையும் நாங்கள் பெற்றது மிக முக்கியமான தருணங்களாகும். பஞ்சாயத்து திட்டம் போன்ற பரிட்சார்த்த திட்டத்தில் புத்தாக்கமும், சுய விசாரணையும் நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்றது. அந்த வகையில் எங்கள் அணி ஆக்கப்பூர்வமாகவே அதை எதிர் கொண்டு வருவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த ஆண்டு எங்கள் திட்டத்தின் மூலம் பேரளவு செயல்பாடுகளுக்காக ஏற்படுத்தப்பட்ட சி - பாட் (உள்ளாட்சியுறவு மற்றும் வளர்ச்சி மையம் (உவமை!)) மிக சிறப்பாக வடிவத்தை பெற்றுக்கொண்டிருப்பதும், அதில் நானும் முக்கிய பங்கு வகிப்பதும் எனக்கு நிறைவான உற்சாகத்தை தந்து வருகிறது. தரப்படுத்தப்பட்ட நுண்ணளவு - மக்கள் திட்டம், சுழல் நிதி நிர்வாகம், மக்கள் கல்வி நிலையத்துடன் நடத்தப்படும் உள்ளாட்சி மேலாண்மை பட்டயக்கல்வி, பலவித பரிசோதனைகளுக்கு பின் வாக்காளர்களுக்கு முறைபடுத்தப்பட்ட பயிற்சியை வடிவமைத்தது, பஞ்சாயத்து தொடர்புடைய துறைசார் கட்டுரைகள் எழுதியது, திட்ட அளவில் இருக்கின்ற எல்லா வள குறிப்புகளையும் தொகுத்தது, பிற நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியது எனபிற பணிகளிலும் எனது பங்களிப்பு மிக நிறைவாகவே இருந்ததென கருதுகிறேன்.
இருந்தாலும் மக்கள் அமைப்புகளை பொருத்த வரையில் நாங்கள் சாதிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது. கிராமிய சமூகம், தமிழ் சினிமாவில் காட்டப்படுவது போல் அவ்வளவு வெள்ளந்தியாக இல்லை. யதார்த்தத்தின் சுயநலம், நகர்மயமான போக்கு, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல் என மிகக் கடினமான சூழலில் ஒர் மாற்று பண்புகளின் அடிப்படையில் அமைந்த சமூகத்தை நாம் கட்டமைக்கநினைக்கிறோம். லைப் ஈஸ் பியூட்டிபுல் படத்தில் வருவது போல், போர்கள சூழலில் போர் கைதியாயிருக்கும் கதாநாயகன், தனது மகனுக்காக அந்த போர்சூழலையே ஓர் விளையாட்டாக மாற்றி அவனை மகிழ்விப்பது போல, இன்றைக்கு இருக்கும் கடினமாக சமூககளத்தினை எளிமைபடுத்தி, இந்த உலகை சற்றே சமநிலையுடைய அமைப்பாக்க நாம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி தோல்விக்கிடையே ஊசலாடிக் கொண்டிருந்தாலும், ஒட்டு மொத்தமாக தொகுத்து பார்க்கும் போது நாம் முன்னேறிக் கொண்டிருப்பதாகவே எனது கடந்த ஆண்டின் அனுபவங்கள் உணர்த்துகிறது.
“...யானை பிடித்த வேல்...”
எனது பஞ்சாயத்து திட்ட செயல்பாடுகளை பொருத்த வரையில் நான் திருப்திபடும் வகையில் செயல்பட்டதாகவே நினைத்தாலும், கடந்த ஆண்டில் என்னுடன் தொடர்புடைய வேறு இரண்டு திட்டங்களின் வெளிப்பாடு எனக்கு வலி நிறைந்ததாகவே அமைந்தது. நமது நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்பட்ட “மாவட்ட மனித மேம்பாட்டு திட்டம்" மிகப் பெரிய எதிர்ப்பார்ப்புடனும், உற்சாகத்துடனும் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. எங்கள் அணி மிகசிறந்த நபர்களை கொண்டிருந்தது. ஆனாலும், எதிர்பார்த்த அளவிற்க்கு அதற்கான பங்களிப்பை என்னால் வழங்க முடியவில்லை. உண்மையில் இந்த அறிக்கை தயாரிக்கும் திட்டம் நான் நினைத்ததை விட மிகப் பெரிய திட்டம் என்பதும், இதற்கான ஆழமான, தீவிரமான பங்களிப்பை, களப்பணியையும் ஒருங்கிணைத்துக்கொண்டு தரும் நிலையில் நான் இல்லாததும் இந்த திட்டத்தில் இருந்து என்னை விலக்கி வைத்தது. என்னால் சரியாக செயல்பட முடியாத தருணங்களில் என்மீது வருத்தப்படாமல் ஓர் நல்ல சகோதரியை போல், நம்பிக்கை வைத்து உற்சாகப்படுத்திய சங்கீதா அவர்கள், தங்களின் மிகச்சிறந்த கடும் உழைப்பின் மூலம் இது போன்று பலவித பணிகளை ஒருங்கே செய்யும் கலையை எனக்கு கற்றுக் கொடுத்த எம்.கார்த்திகேயன், ஜனாபாபு மற்றும் பிற அணியினர் ஆகியோரிடமிருந்து நான் பெற்றவை ஏராளம்.
சிவகங்கையை பொறுத்த வரையில் 445 ஊராட்சிகளை சக பணியாளர்களின் துணையுடன் சென்றடைந்து புதிய முறையை சாதித்து, அதனை முன் வைத்து அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்டோம். அது எதிர்பார்த்த விளைவை தராவிட்டாலும், வள்ளுவரின் குறளில், யானை பிடிக்க வேட்டைக்கு சென்ற வீரன் யானையுடன் போராடி தோற்று தனது கையில் வைத்திருந்த வேலையும் யானையோடு தொலைத்து, அடிப்பட்டு வெறும் கையுடன் திரும்புவது போல் நிறைய அனுபவங்களுடன் நான் மீண்டிருப்பதாக உணர்கிறேன். நிச்சயம் அடுத்த வேட்டையில் யானையை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
அதே போல் எனக்கு ஏமாற்றமளித்த மற்றொரு திட்டம் உயிர்ம நீர் வடிகட்டித்திட்டம். நிச்சயம் பல நேரங்களில், அந்த திட்டத்தின் பொருப்பாளர் என் மீது கோபப்பட்டிருக்கலாம். ஆனாலும், என் கைமீறிய, தவிர்த்திருக்கப்பட வேண்டிய தகவல்தொடர்பு இடைவெளிகளால் அந்த திட்டம் தேங்கியிருக்க வேண்டியதாகிவிட்டது. இது போன்று அலுவலக பணிகளில் ஏற்படுகிற மனக்குறைகள், சில நேரங்களில் தனிப்பட்ட உறவுமுறைகளையும் பரஸ்பர நம்பிக்கைகளையும் பாதிக்கும் சமயங்கள் வேதனையானவை தான்.
“...பனையடி நிழல்...”
யாக்கை நிலையாமை என்ற வள்ளுவர் கூறினாலும் இவ்வளவு நிலையாமையா என நினைக்கும் போது நெஞ்சம் பதரத்தான் செய்தது. சென்ற ஆண்டு இதே ஆற்றுப்படுதல் நிகழ்வில், எங்களுக்கு உற்சாகமாய் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன சக பணியாளர் ஆத்தூர் பிரியா அவர்களின் உடல்நலக் குறைவும், அவர்களின் குடும்பத்தில் அது ஏற்றியிருக்கும் நிச்சயமற்றத்தன்மையும் நிறைய நேரம் என்னை சலனப்படுத்தியுள்ளது. காலம் வாழ்க்கையின் மீது காட்டும் கருணையற்ற முகங்கள் உச்சி வெயிலில் பனைமர நிழலில் இளைப்பாறுதல் போன்றிருக்கிறது.
வாழ்க்கை நமது அடுத்துவரும் வினாடிகளில் ஒளித்து வைத்திருக்கும் ரகசியங்களை நினைத்துப் பார்க்கும் போது மனது பயப்படத்தான் செய்கிறது.
“...கொஞ்சமோ திசையின் வெள்ளம்...”
அரிதாக எனக்கு கிடைத்த வாய்ப்பு என்னை பலப்படுத்திக் கொள்ள பெரிதும் உதவியுள்ளது. அகடமியில் எனது கல்வியானது - வளர்ச்சி, சமூகம், மேலாண்மை தொடர்பான கொள்கைகளையும் கருத்துருக்களையும் முன் வைத்து, அறிவு சார்ந்த எனது மனதை எதையும் எடுத்துச் செய்யும் நம்பிக்கையை தந்ததென்றால், தானம் அறக்கட்டளையில், எனது திட்டத் தலைவர் திரு சிங்கராயர் அவர்களின் மூலம், யதார்த்த நடைமுறைகளையும், செயல்பாட்டுத் திறத்தையும் பெற்றேன். அந்த வகையில், நாம் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் செடிகளில் பூக்கும் பூக்கள் போன்று, என்னையறியாமல் திரு.சிங்கராயரிடம் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடியதின் மூலம் சமூகம், வளர்ச்சி பற்றிய யதார்த்தபூர்வமான, செல்லுபடியாகக்கூடிய பல கருத்துக்கள் நான் கற்க முடிந்தது. சமூக கட்டமைப்பு, மனித உறவு முறைகள், மேலாண்மை திறம் பற்றி மணிப்பிரவாளமாக அவர் கூறுகின்ற அதே கருத்துக்கள் ஆய்வியல் புத்தகங்களிலும் கூறப்பட்டிருப்பதை அவ்வப்போது அறியும் போது அவரின் அனுபவம் சார்ந்த பார்வையும், அதை வெளிப்படுத்தும் திறனும் என்னை பலமுறை வியக்க வைத்திருக்கிறது. திட்டத்தலைவர் என்ற முறையில் அவர் எனக்கு அளித்துள்ள சுதந்திரமும் வாய்ப்புகளும் எப்போதும் நான் மிகச்சிறப்பாக பணியாற்றும் உத்வேகத்தை அளிக்கின்றன.
ஒருமுறை பஞ்சாயத்து தலைவர்கள் பயிற்சிக்காக நானும், திரு வள்ளிநாயகம் அவர்களும் சென்று கொண்டிருந்தோம். பொதுவாகவே, நான் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பேன். 70 ஐ தாண்டிய இந்த வயதிலும் பஞ்சாயத்து துறை சார்ந்து, தீவிரமாக இயங்கிவரும் அவரது ஈடுபாடு, என்னை பல முறை ஒழுங்குபடுத்தியுள்ளது. எப்போதும் அவர் தன்னுடனே வைத்திருக்கும் பஞ்சாயத்து சட்டம் பற்றிய புத்தகத்தை என்னிடம் ஒரு குறிப்பிட்ட சட்ட பிரிவை சுட்டிகாட்டி, அதை குறித்து படிக்க தந்தார். அந்த புத்தகம் மிகவும் பழுப்பேறியிருந்தது. எல்லா பக்கங்களிலும் அவர் எழுதியிருந்த மேற்கோள்கள், அடிக்கோடுகள், குறிப்புகள் என இன்றைய தினம் வரை பஞ்சாயத்து சட்டத்தில் நடந்த எல்லா மாற்றங்களும் குறிக்கப்பட்டிருந்தது. எனக்கு ஆச்சரியம் தாளாமல், "எப்படி சார், இதுபோல் பராமரிக்கமுடிகிறது?" என கேட்டேன். அவர் மிக எளிமையாக, “பண்ணனுங்க. இல்லைனா அப்டேட் செய்ய முடியாது" என்றார். அவர் அந்த சட்டம் 1994ல் அரசு அறிக்கையாக (கெசட்) வெளிவந்தபோது வாங்கி, தாள் தாளாக பிரித்து ஒவ்வொரு தாளுக்கு இடையிலும் ஒரு வெள்ளைத்தாளை வைத்து, கடைசி பக்கத்திற்கு அடுத்து ஒரு 20 பக்கங்கள் கூடுதல் வெள்ளைத்தாள் வைத்து தொகுத்துத்தைத்துக் கொண்டாராம். பின்னர், அவ்வப்போது நிகழ்கிற சட்ட மாற்றம், நீதிமன்ற வழக்கு, அரசாணை, சட்ட விதிகள், சுற்றறிக்கைகள், அரசு திட்டம் என எல்லாவற்றையும் அதற்குரிய பிரிவுக்கு அருகில் குறித்து வருகிறார். இவரது தொடர்ச்சியான 13 ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பு "வேலைப்பாடு" என்றால் என்ன என்பதை எனக்கு கற்றுத் தந்தது. ஓர் சிறந்த நடராஜர் சிலையில், முகத்தில் சொரியும் மஞ்சன நீர், மூக்கு நுனி வழியாக வழிந்து வீசிய கரத்தின் விரல் நுனியோடு இறங்கி, தூக்கிய திருவடியின் விரல் நுனியிலே சொட்டுமாம். அத்கைய நுண்ணிய பணித்திறம் அவரிடம் இருப்பதாகவே உணர்ந்தேன். எனது பணியிலும் இது போன்ற வேலைப்பாட்டை கொண்டுவர முயற்சிக்கும் எண்ணம் உறுதிபட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே எங்கள் பஞ்சாயத்து திட்ட அணியில் பணியாளர் மாற்றம், நிரப்பப்படாத இடம் என சிற்சில நிர்வாக சிக்கல்கள் இருந்தாலும், எங்கள் அணி உறுப்பினர்களுக்கிடையேயான தொடர்பும், பணி பகிர்வும் ஆரோக்கியமாகவே இருந்து வருகிறது. தற்சமயமுள்ள அணி ஓரளவிற்கு நிலைபெற்ற அணியாகவும், அதிக ஈடுபாட்டுடைய அணியாகவும் உள்ளது. அடுத்து வரும் காலங்களில் எங்கள் அணி, உச்சத்தை எட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
என்னை மையப்புள்ளியாக நிறுத்தி, எந்த திசையை பார்த்தாலும் அதன் வரையிலா எல்லை பிரபஞ்சத்தை தாண்டி செல்கிறது. திசையின் வெள்ளம், நம்மால் நினைக்க முடிவதை காட்டிலும் மிகப் பெரியது. வாழ்க்கையின் அனுபவங்களும் அப்படித்தான். என்னைச் சுற்றி - எனது தனிப்பட்ட உள்ளார்ந்த வாழ்க்கை, எனது குடும்பம், எனது நண்பர்கள், எனது பணி, நமது நிறுவனம் - அதன் மதிப்பீடுகள், பண்புகள் என சுற்றிலும் திசைகளால் சூழப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு திசையிலும் நான் பயணித்தாக வேண்டும். எவ்வளவு தூரம் பயணம் செய்கிறோம் என்பதை விட, செய்கின்ற பயணத்தை எவ்வளவு தூரம் ரசிக்கிறோம் என்பது எனக்கு முக்கியமாகப் படுகிறது.
“...வெந்து தணிந்தது காடு...”
2007, என்னைப் பொறுத்த வரையில் மிக முக்கியமான வருடமாக இருக்குமென்றெண்ணுகிறேன். இதுவரை நான் கற்றுக் கொண்ட சமூகப்பணியை வெளிப்பாடுகளாக மாற்றவேண்டும். தனிப்பட்ட வாழ்முறையிலும், இந்த ஆண்டிலிருந்து நான் திருமண வாழ்க்கையில் இணைவதால், எனக்கான எளிமையான, அர்த்தமுள்ள வாழ்க்கையை நிகழ்த்திச்செல்லும் விருப்பமுள்ளது. இன்றைக்கு எனக்கு இருக்கும் பொறுப்புகளும், பணிகளும் எனது கடந்த கால அனுபவத்தை ஒட்டி பக்குவப்படுத்தியிருக்கின்றன. எதை எடுத்தாலும், எனக்குள் நான் வைத்துக்கொண்டே கருத்தமைவுகளை முன்னிறுத்தி, அதற்காக சண்டை போட்டு இருந்த காலத்திலிருந்து, இப்போதெல்லாம் மற்றவர்களை கேட்க ஆரம்பித்திருக்கிறேன். எனது பலவீனங்களும், வரைமுறைகளும் எனக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது. செய்வன திருந்தச் செய்வதில் நம்பிக்கை கூடியிருக்கிறது. நிறைய கனவுகள், நிறைய ஆசைகள் என எல்லாமிருந்தாலும் எனக்கான அரிசிமணிகளிலெல்லாம் எனது பெயர் ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்டதால், என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடிகிறது. "தாமே தமக்குச் சுற்றமும்; தாமே தமக்கு விதிவகையும்" (மாணிக்கவாசகர்) என்றானபின் எனது தன்னூக்கத்தன்மையை (ணிரீஷீ) மறு ஆய்விற்கு உட்படுத்தி என்னை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட எத்தனிக்கிறேன். மொத்தத்தில் கேயாஸ் கோட்பாடு குறிப்பிடுவது போல், இந்த பிரபஞ்சத்தின் எல்லா பொருள்களின் இயக்கங்களும் கண்காணாத அரூப இழைகளால் பின்னப்பட்டிருக்கின்றன. இதன்படி ஒரு செடியிலிருந்து நான் பறிக்கும் ஓர் மலரினால் எங்கோ ஓர் நட்சத்திரம் உதிர்ந்து போகும் வாய்ப்புள்ளது என்பதால், சூழலின் நிகழ்வுகளில் என்மீதான விளைவுகளையும், என்மூலமான விளைவுகளையும் உற்றுப்பார்பதில் விருப்பம் அதிகரித்துள்ளது.
வெந்து தணிந்த காட்டில் எஞ்சியிருக்கும் சாம்பலாய், எனது வெற்றியும் தோல்வியுமான எல்லா செயல்களின் முடிவுகளும் ஒரே மாதிரியாகத்தானிருக்கின்றன.
“...நதியிலொறு கூழாங்கல்...”
ஓடுகின்ற நதியிலிருக்கும் கூழாங்கல்லிற்கு முகவரியில்லை. அது தன்னை அணைத்துப் போகும் நதியின் வேகத்திற்கு தக்கவாறு செல்கிறது. அதன் தொடர்ச்சியான இயக்கம், நதி நீரைப் பொறுத்தே அமைகிறது. நதி செதுக்கிய சிற்பமாய், அதன் வழவழப்பு, குளிர்ச்சி என எல்லா குணமும் நதியின் மூலமே தீர்மானிக்கப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக, கொஞ்சம் கொஞ்சமாக கூழாங்கல், தன்னை நதியில் கரைத்துக் கொள்ளும் அற்புதமும் நிகழ்கிறது. இந்த உலகில், எனது இருப்பும் கூழாங்கல் போன்றிருப்பதாகபடுகிறது. காலம் என்ற தீராநதியின் வேகத்தில் ஓர் சாதாரண கூழாங்கல்லாக எனது பயணமும்...
No comments:
Post a Comment